Published:Updated:

சொத்துகளை அபகரித்து, தாயை பராமரிக்காத மகன்கள்! - அதிரடி உத்தரவு பிறப்பித்த ஊட்டி ஆர்.டி.ஓ

'தாயை பராமரிக்கத் தவறிய ஆண் வாரிசுகள் மூவரும், மாதம்தோறும் தலா ரூ.4,000 வீதம் வழங்கி அவரைப் பராமரிக்க வேண்டும். தவறும் பட்சத்தில், ருக்கியம்மாளின் 18 ஏக்கர் நிலத்தை மீண்டும் அவருக்கே வழங்கி, நிலப் பரிவர்த்தனை ரத்துசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்'.

ருக்கியம்மாள்
ருக்கியம்மாள்

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகில் உள்ள பெங்கால்மட்டம் கோத்திபென் கிராத்தைச் சேர்ந்தவர், ருக்கியம்மாள். படுகர் இனத்தைச் சேர்ந்த 85 வயதான இவரது கணவர் ராமன், உடல் நலக் குறைவால் காலமானார். இவர்களுக்கு 3 மகன்கள், 4 மகள்கள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, தனக்குச் சொந்தமான 18 ஏக்கர் தேயிலைத் தோட்டத்தை 3 மகன்களுக்கும் பிரித்துக் கொடுத்தார்.

இந்த நிலையில், தன்னிடம் சொத்தை பெற்றுக்கொண்ட மகன்கள் தன்னைப் பராமரிப்பதில்லை என ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்புக் கூட்டத்தில் ருக்கியம்மாள் புகார் அளித்தார். இந்தப் புகாரை ஊட்டி வருவாய்க் கோட்டாட்சியர் சுரேஷை விசாரிக்க மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டார்‌.

ருக்கியம்மாள்
ருக்கியம்மாள்

இந்த உத்தரவின் பேரில், ருக்கியம்மாளின் மகன் மற்றும் மகள்களிடம் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், ருக்கியம்மாளை அவரது மகன்கள் பராமரிக்காத விஷயம் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, வயதான தாயைப் பராமரிக்காத 3 மகன்கள், மாதம்தோறும் ரூ.4,000 வழங்க உத்தரவிட்டார்.

ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ் கூறுகையில், ``ருக்கியம்மாள், தனது 3 மகன்களும் சொத்துக்களை அபகரித்துக்கொண்டு தன்னை கவனிக்கவில்லை எனப் புகார் அளித்திருந்தார். விசாரணையில், ருக்கியம்மாளுக்கு ரவி, சுரேஷ் மற்றும் ரமேஷ் என 3 ஆண் வாரிசுகளும், சரோஜா, பேபி, சின்னம்மாள் மற்றும் கமலா ஆகிய 4 பெண் வாரிசுகளும் இருப்பது தெரியவந்தது. கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னரே 18 ஏக்கர் தேயிலைத் தோட்டத்தை தலா 6 ஏக்கர் வீதம் 3 ஆண் வாரிசுகளுக்கும் மனுதாரரால் பிரித்துக் கொடுக்கப்பட்டது தெரியவந்தது.

Ooty R.D.O order
Ooty R.D.O order

இந்நிலையில், மாசிக்கண்டி என்னுமிடத்தில் இருந்த 80 சென்ட் பூமியை அவரது மகள் பேபி என்பவர் பராமரிப்பில் வைத்து, அதிலிருந்து வரும் வருமானத்தை வைத்தும், பேபியின் சகோதரர்களான சுரேஷ் மற்றும் ரவி ஆகியோர் கொடுத்துள்ள தலா ரூ.1 லட்சத்தைப் பெற்றுக்கொண்டு தயார் ருக்கியம்மாளைப் பராமரிக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இதற்கு, அவரது குடும்பத்தார் ஒப்புக்கொண்டனர். மேலும், ருக்கியம்மாளை பராமரிக்கத் தவறிய ஆண் வாரிசுகள் மூவரும் மாதம்தோறும் தலா ரூ.4,000 வீதம் வழங்கிப் பராமரிக்க வேண்டும். தவறும்பட்சத்தில், ருக்கியம்மாளின் 18 ஏக்கர் நிலம் மீண்டும் ருக்கியம்மாளுக்கே வழங்கி, நிலப் பரிவர்த்தனை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது'' என்றார்.