Published:Updated:

`செஞ்ச வேலையிலும் 150 ரூபாய் கூலி குறைப்பு..' - கலங்கும் ஊட்டி தூய்மைப் பணியாளர்கள்

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்
தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

நகராட்சியின் உத்தரவை மதிக்காத சம்பந்தப்பட்ட தனியார் ஒப்பந்த நிறுவனம் தினக்கூலியில் 150 ரூபாயைக் குறைத்து கணக்கிட்டு வழங்கி வருகிறது. அதிலும், மே மாதத்துக்கான ஊதியம் இதுவரை வழங்கப்படாமல் உள்ளது.

நீலகிரி மாவட்டம், உதகமண்டலம் நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் சுமார் 300-க்கும் அதிகமான தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் 150-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஸ்டார் என்ற தனியார் நிறுவனத்தின்கீழ் ஒப்பந்த அடிப்படையில் பணி செய்து வருகின்றனர்.

ooty municipal office
ooty municipal office

ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.571-ஐ தினக்கூலியாக வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் நிர்ணயித்து உத்தரவிட்டுள்ளது. ஆனால் இந்த ஒப்பந்த ஊழியர்களை தூய்மைப் பணியில் ஈடுபடுத்திவரும் ஸ்டார் என்ற தனியார் ஒப்பந்த நிறுவனம், மாவட்ட நிர்வாகம் நிர்ணயித்த தினக்கூலியை வழங்காமல் குறைத்து வழங்கி வந்துள்ளது.

தற்போது கொரோனா பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த அதிகளவு உடலுழைப்பை அளித்துவரும் தூய்மைப் பணியாளர்களுக்குக் கிடைக்கவேண்டிய ஊதியம்கூட வழங்கப்படாமல் இருப்பது, கொந்தளிப்பை அதிகப்படுத்தியுள்ளது. இவர்களுக்கு உரிய ஊதியத்தைப் பெற்றுத்தர தொழிலாளர் நல அமைப்புகளும் தற்போது போராட்டத்தில் இறங்கியுள்ளன.

இதுகுறித்து நம்மிடம் பேசிய சி.ஐ.டி.யு மாவட்ட துணைத் தலைவர் ஹால்துரை, "கடந்த மார்ச் மாதம் தேசிய தூய்மைப் பணியாளர்கள் ஆணையத்தின் உறுப்பினர் ஜெகதீஷ் ஹர்மானி தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் ஆட்சியர் நிர்ணயித்த தொகையைக் குறைவின்றி வழங்குவதை நகராட்சி ஆணையர் உறுதி செய்ய வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

இதைத் தொடர்ந்து, `ஒப்பந்தப் பணியாளர்களுக்கு ரூ.571-ஐ வருகைப் பதிவேட்டின்படி கணக்கிட்டுப் பணியாளர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தியதற்கு வங்கியிலிருந்து பெறப்பட்ட பட்டியல், பி.எஃப் கணக்கில் செலுத்தப்பட்ட விவரம், இ.எஸ்.ஐ தொகை செலுத்தியதற்கான ஆதாரங்களை மாதந்தோறும் 5-ம் தேதிக்குள் ஒப்படைத்தால் மட்டுமே இனிவரும் நாள்களில் நகராட்சியிலிருந்து பட்டியல் தொகை வழங்கப்படும்.

இந்த உத்தரவை முறையாகப் பின்பற்ற வேண்டும். தவறும்பட்சத்தில் தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்படுவதுடன், ஒப்பந்தத்தை மீறிய காரணத்திற்காக பணி உத்தரவு ரத்து செய்யப்படும்' என சம்பந்தப்பட்ட தனியார் ஒப்பந்த நிறுவனத்திற்கு நகராட்சி ஆணையர் கடிதம் மூலம் தெரிவித்திருந்தார்.

ஹால்துரை
ஹால்துரை

ஆனால், நகராட்சியின் உத்தரவை மதிக்காத சம்பந்தப்பட்ட தனியார் ஒப்பந்த நிறுவனம் தினக்கூலியை 150 ரூபாயைக் குறைத்துக் கணக்கிட்டு வழங்கி வருகிறது. அதனையும் குறித்த தேதியில் வழங்குவதில்லை. மே மாதத்துக்கான ஊதியம் இதுவரை வழங்கப்படாமல் உள்ளது" என்றார்.

`காலாவதி சாக்லேட்டுகள், பேக்கரி பொருள்கள்!' - அதிர்ச்சியில் உறைந்த ஊட்டி உணவுத்துறை அதிகாரிகள்

தூய்மைப் பணியில் ஈடுபட்டுவரும் பெண் ஒருவர் நம்மிடம் பேசுகையில், " கடந்த மூணு மாசமா வீடு, வாசல் எல்லாத்தையும் மறந்துட்டு உயிரைப் பணயம் வச்சி வேல செய்றோம். வெளியில பாத்தா எங்களைப் பாராட்டுறாங்க. பாதபூச பண்ணி மாலை போடறாங்க. ஆனா செஞ்ச வேலைக்குக் கூலி தரமாட்டேங்கிறாங்க. ரொம்ப மனவேதனையா இருக்கு" எனக் கண்ணீர் வடித்தார்.

sanitary workers
sanitary workers

இந்தப் புகார் குறித்து ஸ்டார் நிறுவன அதிகாரிகளிடம் பேசினோம் ``ஒரு நாளைக்கு 8 மணிநேரம் பணி செய்யவேண்டும். ஆனால், 4 மணிநேரம் மட்டுமே வேலை செய்கிறார்கள். அதற்கு இந்தக் கூலிதான் வழங்கமுடியும். அவர்கள் வேலை செய்யும் நேரம் அதிகரித்தால் முழுச் சம்பளமும் வழங்கப்படும்" என்கின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு