Election bannerElection banner
Published:Updated:

தேனி எம்.பி ரவீந்திரநாத்தின் கார் கண்ணாடி உடைப்பு..! - போடி தொகுதியில் நடந்தது என்ன?

ரவீந்திரநாத்தின் கார் கண்ணாடி உடைப்பு
ரவீந்திரநாத்தின் கார் கண்ணாடி உடைப்பு

`ரவீந்திரநாத்தின் பாதுகாவலர்களுக்கும், அ.ம.மு.க-வினருக்கும் இடையேதான் பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. அங்கிருந்த தி.மு.க நிர்வாகிகள் சமாதானம் செய்திருக்கிறார்கள். இந்தச் சம்பவத்துக்கும் தி.மு.க-வுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை’ - தங்க தமிழ்ச்செல்வன்.

தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில், அ.தி.மு.க சார்பில் ஓ.பன்னீர்செல்வமும், தி.மு.க சார்பில் தங்க தமிழ்ச்செல்வனும் போட்டியிடுகின்றனர். தேர்தல் பிரசாரம் சூடுபிடித்ததுபோலவே, இன்று மக்கள் தங்கள் வாக்குகளைச் செலுத்த ஆர்வத்துடன் வாக்குச்சாவடிக்கு வந்தனர்.

ஓ.பன்னீர்செல்வம்
ஓ.பன்னீர்செல்வம்

இன்று காலை, ஓ.பன்னீர்செல்வம், பெரியகுளத்திலுள்ள தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தார். உடன், அவரின் தாயார் பழனியம்மாள், மனைவி விஜயலெட்சுமி, மகன் ஜெயபிரதீப், அவரின் மனைவி ஆர்த்தி, தேனி எம்.பி ரவீந்திரநாத்தின் மனைவி ஆனந்தி ஆகியோர் உடன் வாக்களித்தனர். இந்தநிலையில், தேனி எம்.பி ரவீந்திரநாத் மட்டும் தனியாக வந்து அதே வாக்குச்சாவடியில் வாக்களித்துவிட்டு, பெரியகுளம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டிருக்கும் வாக்குச்சாவடிக்குகளுக்ச் சென்று, கட்சியினரிடம் ஆலோசனை செய்தார்.

தொடர்ந்து போடி தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு வரிசையாகச் சென்ற அவர், கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை மேற்கொண்டார். அந்த வகையில், போடி அருகேயுள்ள பெருமாள்கவுண்டன்பட்டிக்குச் சென்ற ரவீந்திரநாத்தின் கார் மீது சிலர் கல் வீசித் தாக்குதல் நடத்தினர். இதில், அவரது கார் கண்ணாடி உடைந்தது. அதைக் கண்ட அ.தி.மு.க-வினர், கல்வீச்சில் ஈடுபட்ட நபர்களை துரத்தியடித்தனர். இதனால், அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தின்போது காரில் ரவீந்திரநாத் இல்லாததால், அவருக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை.

கார் கண்ணாடி
கார் கண்ணாடி

யார் கல்வீச்சில் ஈடுபட்டது என விசாரித்தோம். ``அ.ம.மு.க-வினர் சிலர்தான் இந்தக் கல்வீச்சுத் தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள். எல்லோரும் ஒரே கட்சியிலிருந்த, ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். இப்போது பிரிந்து வெவ்வேறு கட்சியாக இருக்கிறார்கள். அதனால், அ.தி.மு.க-வினரால் எதுவும் செய்ய முடியவில்லை. கல்வீச்சில் ஈடுபட்டவர்களை விரட்ட மட்டுமே செய்தனர்’’ என்றனர் பெருமாள்கவுண்டன்பட்டிவாசிகள்.

TN Election Live updates 2021: தமிழகத்தில் 71.79 சதவிகித வாக்குகள் பதிவு! -  சத்யபிரதா சாகு

இது தொடர்பாக போடி தி.மு.க வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனிடம் பேசினோம். ``ரவீந்திரநாத்தின் பாதுகாவலர்களுக்கும், அ.ம.மு.க-வினருக்கும் இடையேதான் பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. அங்கிருந்த தி.மு.க நிர்வாகிகள் சமாதானம் செய்திருக்கிறார்கள். இந்தச் சம்பவத்துக்கும் தி.மு.க-வுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தவறான செய்தி வருகிறது. யாரும் நம்ப வேண்டாம்!" என்றார்.

இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ரவீந்திரநாத் பாதுகாப்பாக அனுப்பிவைக்கப்பட்டார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு