Published:Updated:

துபாயிலிருந்து வந்த உத்தரவு; கேரளாவுக்குக் கடத்தப்பட்ட ரூ.14.7 கோடிப் பணம்; 4 பேர் சிக்கிய பின்னணி!

கைதுசெய்யப்பட்டவர்கள்

துபாயில் இருக்கும் ரியாஸ் என்பவர் சென்னையிலிருந்து அந்தப் பணத்தை கேரளாவுக்குக் கடத்திச்செல்ல தன் நண்பரின் மகன் நிசார் அகமதுவுக்கு உத்தரவு பிறப்பித்திருக்கிறார். நிசார் அகமதுவுடன் சிக்கிய மற்ற மூன்று பேரும் உதவிக்கு வந்திருக்கிறார்கள்.

துபாயிலிருந்து வந்த உத்தரவு; கேரளாவுக்குக் கடத்தப்பட்ட ரூ.14.7 கோடிப் பணம்; 4 பேர் சிக்கிய பின்னணி!

துபாயில் இருக்கும் ரியாஸ் என்பவர் சென்னையிலிருந்து அந்தப் பணத்தை கேரளாவுக்குக் கடத்திச்செல்ல தன் நண்பரின் மகன் நிசார் அகமதுவுக்கு உத்தரவு பிறப்பித்திருக்கிறார். நிசார் அகமதுவுடன் சிக்கிய மற்ற மூன்று பேரும் உதவிக்கு வந்திருக்கிறார்கள்.

Published:Updated:
கைதுசெய்யப்பட்டவர்கள்

வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சின்னகோவிந்தம்பாடி பகுதி தேசிய நெடுஞ்சாலையில், 29-ம் தேதி நள்ளிரவு 11 மணியளவில், எஸ்.ஐ பாஸ்கர், முதல்நிலைக் காவலர் பிரேம் இருவரும் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்த நேரத்தில், சென்னையிலிருந்து பெங்களூரு செல்லும் மார்க்கத்தில், நான்கு பேர் கும்பல் ஒரு காரிலிருந்து லாரியின் கேபின் பகுதிக்கு ஏதோ பண்டல்களை அவசர அவசரமாக ஏற்றிக்கொண்டிருந்தனர். இதைப் பார்த்து சந்தேகமடைந்த காவலர்கள் இருவரும், அந்தக் கும்பல் அருகே சென்று விசாரிக்கத் தொடங்கினர். பெயர், முகவரியைத் தெரிவிக்க மறுத்த அந்தக் கும்பல், காவலர்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்து விரட்டியடிக்க முயன்றனர். இதையடுத்து, உயரதிகாரிகளுக்குத் தகவல் கொடுக்கப்பட்டதால் கூடுதல் காவலர்கள் அங்கு விரைந்து சென்று நான்கு பேரையும் பிடித்துக் கைதுசெய்தனர்.

கைப்பற்றப்பட்ட பணப் பண்டல்கள்
கைப்பற்றப்பட்ட பணப் பண்டல்கள்

சென்னை பிராட்வே பகுதியைச் சேர்ந்த நிசார் அகமது, மதுரை அங்காடிமங்கலம் பகுதியைச் சேர்ந்த வசிம் அக்ரம், கேரள மாநிலம், கோழிக்கோடு வல்லக்காடு மலைப்பகுதியைச் சேர்ந்த ஷர்புதின், அப்துல்நாசர் ஆகியோர்தான் பிடிபட்டவர்கள் எனத் தெரியவந்தது. இதையடுத்து, அவர்களிடமிருந்து ஹூண்டாய் ஐ10 காரையும், அசோக் லேலண்ட் லாரியையும் பறிமுதல் செய்தனர். காரில் இருந்த 20 பண்டல்கள், லாரியில் ஏற்றப்பட்டிருந்த மேலும் 28 பண்டல்கள் என மொத்தமாக 48 பண்டல்களையும் கைப்பற்றி, காவல் நிலையத்துக்குக் கொண்டுவந்தனர். பண்டல்களைப் பிரித்துப் பார்த்தபோது, அவற்றில் 2,000, 500, 200, 100 ரூபாய்த் தாள்கள் கட்டுக்கட்டாக இருந்தன. அவற்றை மூன்று இயந்திரங்களைக்கொண்டு காவலர்களே எண்ணினர். மொத்தம் 14,70,85,400 ரூபாய் பணம் இருந்தது.

இவ்வளவு பணமும் ‘ஹவாலா’ மூலம் சட்டவிரோதமாகப் பரிமாற்றம் செய்யப்படுவதற்காக கொண்டுச் செல்லப்பட்டதா அல்லது வருமான வரித்துறையினரிடம் கணக்கில் காட்டாத கறுப்புப் பணமா என்ற கோணத்தில் பிடிபட்ட நான்கு பேரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. முதற்கட்ட விசாரணையில், சென்னையிலிருந்து கார் மூலம் அந்தப் பணம் கேரளாவுக்குக் கடத்தப்பட்டிருப்பதும், ஒரே வாகனத்தில் சென்றால் வழியில் மாட்டிக்கொள்வோம் என்ற அச்சத்தில் வேலூர் அருகே லாரியில் பணத்தை மாற்றி தார்ப்பாயைக்கொண்டு மறைத்ததும் தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட 4 பேர்
கைது செய்யப்பட்ட 4 பேர்

பிடிபட்ட கும்பலில் ஒருவரான நிசார் அகமது, சென்னையில் புர்கா கடை நடத்திவருவதாகக் கூறப்படுகிறது. துபாயில் இருக்கும் ரியாஸ் என்பவர் சென்னையிலிருந்து அந்தப் பணத்தை கேரளாவுக்கு கடத்திச் செல்ல நிசார் அகமதுவுக்கு உத்தரவு பிறப்பித்திருக்கிறார். துபாயில் வசிக்கும் ரியாஸ், நிசார் அகமதுவின் தந்தைக்கு நெருங்கிய நண்பர் எனக் கூறப்படுகிறது. இந்தப் பழக்கத்தில்தான் நிசார் அகமது கடத்தலுக்குத் துணைபோகியிருக்கிறார். இவருடன் சிக்கிய மற்ற மூன்று பேரும் கார் மற்றும் லாரி ஓட்டுநர்களாக உதவிக்கு வந்திருக்கிறார்கள். இவை, முதற்கட்ட தகவல்களாக வெளிவந்திருக்கின்றன. ஆனாலும், இவ்வளவு பெரிய தொகை எங்கிருந்து அவர்களுக்குக் கிடைத்தது... எதற்காக மறைத்துக் கடத்தப்பட்டது... இதன் பின்னணியில் என்னவெல்லாம் நடக்கின்றன... யார் யார் இருக்கிறார்கள்... தடைசெய்யப்பட்ட அமைப்பின் தொடர்பிருக்கிறதா போன்ற சந்தேகத்துக்குரிய பல்வேறு கேள்விகளுடன் விசாரணையையும் தீவிரப்படுத்தியிருக்கிறது வேலூர் மாவட்ட காவல்துறை.