Published:Updated:

`ஒருவரால் 5 பேரைக் காப்பாற்ற முடியும்!' - உடலுறுப்பு தானம் குறித்து தஞ்சை மருத்துவக் கல்லூரி டீன்

ஒருவர் இறந்தபிறகு அவரின் உடல் உறுப்புகளைக் கொண்டு 5 பேருக்கு உயிரளிக்க முடியும் என தஞ்சை மருத்துவக்கல்லூரி டீன் குமுதா லிங்கராஜ் தெரிவித்தார்.

ரஜினி பிறந்தநாள் விழா
ரஜினி பிறந்தநாள் விழா

தஞ்சாவூரில் செயல்பட்டு வருகிறது இராசா மிராசுதார் அரசு மருத்துவமனை. இதில் உள்ள கண் சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டு நூறு ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. இந்த நிலையில், நடிகர் ரஜினியின் 70வது பிறந்த நாளை ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் அவரது ரசிகர்கள் பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் விமரிசையாகக் கொண்டாட முடிவு செய்திருந்தனர்.

ரஜினி பிறந்தநாள் விழா
ரஜினி பிறந்தநாள் விழா

இதையடுத்து, ரஜினியின் பிறந்தநாள் விழா மற்றும் நூற்றாண்டுகளைக் கடந்து சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் கண் மருத்துவமனைக்கான விழாவையும் சேர்த்துக்கொண்டாடும் விதமான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தனர் ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகிகள்.

தமிழகத்தில் 11 ஆண்டுகளில் 1,291 பேர் உடலுறுப்பு தானம்!

அதன்படி கண் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் ரஜினி ரசிகர்கள் மற்றும் மன்றத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் சுமார் 400 பேர் உடலுறுப்பு தானம் செய்வதாகக் கூறி அதற்கான ஒப்பந்தப் படிவத்தில் கையொப்பமிட்டுக் கொடுத்தனர். மேலும், 500 பேருக்கு மேல் கண்தானம் செய்வதற்கான படிவத்தைக் கொடுத்தனர். பலர் ரத்ததானமும் செய்தனர். இதுகுறித்து ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த தஞ்சை மாவட்டச் செயலாளர் ரஜினி கணேசன் கூறுகையில், ``ஒவ்வொரு வருடமும் தலைவரின் பிறந்தநாளையும், அவர் நடித்த படம் திரைக்கு வரும்போதும் விமரிசையாகக் கொண்டாடி வருகிறோம். `பேட்ட' படம் ரிலீஸானபோது குடும்பம் நடத்துவதற்குத் தேவையான சீர் வரிசைப் பொருள்களைக் கொடுத்து தியேட்டரிலேயே ரசிகர்கள் முன்னிலையில் ஒரு ஜோடிக்கு இலவச திருமணம் செய்துவைத்தோம்.

ரஜினி கணேசன்
ரஜினி கணேசன்

தற்போது தலைவர் ரஜினியின் 70வது பிறந்தநாளை விமரிசையாகத் தொடர்ந்து கொண்டாட முடிவு செய்தோம். அதன்படி இன்று அரசு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்வில் ரஜினி ரசிகர்கள் 400 பேருக்கு மேல் உடலுறுப்பு தானம் செய்ய முன்வந்திருக்கிறார்கள். மேலும், 500 பேர் வரை கண் தானம் செய்வதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டிருக்கிறார்கள். அதற்கான படிவங்களை தஞ்சாவூர் மெடிக்கல் காலேஜ் டீன் குமுதா லிங்கராஜிடம் ஒப்படைத்தேன். அத்துடன் பலர் ரத்த தானம் செய்தனர். `எப்போது யாருக்கு ரத்தம் தேவைப்பட்டாலும், எங்களைக் கூப்பிடுங்கள்; உடனே வந்து தருகிறோம்' என்ற உத்தரவாதத்தையும் அளித்தோம்.

Vikatan

அத்துடன் மருத்துவமனை வளாகம் முழுவதும் சுத்தம் செய்ய இருப்பதுடன் மருத்துவமனைக்குத் தேவையான பொருள்களையும் வாங்கித் தர இருக்கிறோம். சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் மரக்கன்றுகள் நட இருக்கிறோம். தலைவரின் பிறந்தநாளை மக்களுக்குப் பயன்படும் விதத்தில் தொடர்ந்து 7 மாதங்கள் வரை கொண்டாட இருக்கிறோம். அதற்கான தொடக்கம்தான் இந்த நிகழ்ச்சி. மார்ச் முதல் வாரத்தில் தஞ்சையே அதிரும் அளவுக்குக் கொண்டாட இருக்கிறோம். இதில் ஏராளமான பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது'' என்றார்.

டீன் குமுதா லிங்கராஜ்
டீன் குமுதா லிங்கராஜ்

டீன் குமுதா லிங்கராஜ் பேசும்போது, ``நானும் ரஜினி ரசிகைதான். அவருடைய ஸ்டைல் எனக்கு ரொம்பப் பிடிக்கும் அவர் படத்தை விரும்பிப் பார்ப்பேன். அவருடைய ரசிகர்களால் செய்யப்படும் இந்தச் செயல் பாராட்டுக்குரியது. ஒருவர் இறந்த பிறகு, பிறருக்கு வாழ்வளிக்கும் வகையில் உடல் உறுப்புகளை வழங்க அனைவரும் முன்வர வேண்டும். இதயம், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் போன்ற உறுப்புகள் அதிக அளவில் தேவைப்படுகின்றன. ஒருவர் உயிரிழந்தபிறகு அவருடைய உறுப்புகளைக் கொண்டு 5 பேருக்கு உயிரளிக்க முடியும்'' என்றார். மேலும், `இப்போது நானும் கண்தானம் செய்கிறேன்' எனக் கூறி அதற்கான ஒப்பந்தப் படிவத்தையும் டீன் குமுதா லிங்கராஜ் கொடுத்தார்.