Published:Updated:

`மெட்ரோ நகரங்கள் மட்டுமே இந்தியா அல்ல!' - அலர்ட் செய்யும் `பேட் மேன்’ முருகானந்தம்

பேட் மேன் முருகானந்தம்
பேட் மேன் முருகானந்தம்

`அனைவரையும் ஆரோக்கியமாக வைத்திருப்பதே லாக்டௌனின் குறிக்கோள் என்றாலும், நாப்கின்கள் பயன்பாட்டுக்கு இடையூறு இருப்பதால் அதன் நோக்கமே வீணாகிறது’.

கோவையைச் சேர்ந்த அருணாசலம் முருகானந்தம் குறைந்த விலையில் சானிட்டரி பேட் தயாரிக்கும் இயந்திரத்தைக் கண்டுபிடித்து கவனம் ஈர்த்தவர். கிராமப்புறப் பகுதிகளில் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாயைச் சுகாதாரமற்ற முறையில் கடக்கும் நடைமுறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான எளிய வழிமுறைகளைக் கண்டுபிடித்த பெருமைக்குரியவர். வணிக விலையில் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவான விலையில் பேட்களை உற்பத்தி செய்யக்கூடிய அவரது மினி மெஷின்கள், நாட்டின் பல மாநிலங்களில் நிறுவப்பட்டுள்ளன.

பேட் மேன் முருகானந்தம்
பேட் மேன் முருகானந்தம்

இதன் மூலம் உலகம் முழுவதும் கவனம் ஈர்க்கப்பட்டு பேட்மேன் என்று அழைக்கப்படுகிறார். தற்போது ஊரடங்கு உத்தரவால் சானிட்டரி நாப்கின் தயாரிப்பு முற்றிலும் முடங்கியுள்ளதால், அதற்கான தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தின் கீழ் வரும் சில முக்கியப் பொருள்களில் உணவுப் பொருள்கள், சமையல் எண்ணெய் மற்றும் விதைகள், வனஸ்பதி, பருப்பு வகைகள், அரிசி மற்றும் அதன் தயாரிப்புகள், பெட்ரோலியம் மற்றும் பெட்ரோலிய பொருள்கள், சணல் போன்றவை குறிப்பிடப்பட்டுள்ளன. 133.3 கோடி மக்களை கொண்டுள்ள இந்தியாவில் 48.04% பெண்கள் உள்ளனர்.

பேட் மேன் முருகானந்தம்
பேட் மேன் முருகானந்தம்

இந்தியாவில் மாதவிடாய் கடக்கும் 336 மில்லியன் பெண்களில், சுமார் 121 மில்லியன் பெண்கள் உள்நாட்டு உற்பத்தி அல்லது வணிக ரீதியாக உற்பத்தி செய்யப்படும் சானிட்டரி நாப்கின்களைப் பயன்படுத்துகிறார்கள் என்று தேசிய குடும்ப சுகாதார ஆய்வு 2018 மதிப்பிடுகிறது. ஆனால், சானிட்டரி நாப்கின்களின் உற்பத்தியை நாடு தழுவிய அளவில் நிறுத்திவைத்திருப்பது பெண்களின் சுகாதார நிலைமைகளை பாதிக்கும் என்கிறார் முருகானந்தம்.

இதுகுறித்து பேசிய அருணாசலம் முருகானந்தம், ``மத்திய அரசின் அறிவிப்பின் படி சானிட்டரி நாப்கின்கள் அத்தியாவசியப் பொருள்களில் குறிப்பிடப்பட்டிருந்தாலும், அனைத்து மாநில அரசிடமும் அது சரியான முறையில் சென்று சேரவில்லை. உற்பத்தில் இல்லாதது மற்றும் போக்குவரத்து தடை ஆகியவற்றால் நகரத்தை விட கிராமப்புறப் பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். 2005 வரையில் இந்தியாவில் 10% -க்கும் குறைவான பெண்களே பெரு நிறுவனங்களில் தயாரிக்கும் நாப்கின்களைப் பயன்படுத்தினர். பல முயற்சிகளுக்குப் பிறகு மத்திய மற்றும் மாநில அரசுகளின் உதவியினால் நாடு முழுவதும் மாதவிடாய் காலத்தை சுகாதாரமற்ற முறையில் இருந்து சுகாதார முறையில் கடக்கின்றனர்.

பேட் மேன் முருகானந்தம்
பேட் மேன் முருகானந்தம்

சிறு சிறு இயந்திரங்கள் கொண்டு கிராமப்புறங்களில் வசிக்கும் பெண்கள் சிலர் சேர்ந்து குறுந்தொழில் முறையில் தரமான மலிவு விலை நாப்கின்களை உற்பத்தி செய்ததே இதற்கு முக்கிய காரணம். இவ்வாறு முன்னேற்றம் உண்டாகும் நேரத்தில், சானிட்டரி நாப்கின்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டால் மீண்டும் பழைய சுகாதாரமற்ற முறையான துணிகளைப் பயன்படுத்தும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.

நாட்டில் நிறுவப்பட்ட குறைந்த விலை சானிட்டரி பேட் தயாரிக்கும் இயந்திரங்களின் மொத்த எண்ணிக்கை 25,000 க்கும் அதிகமாகும். அவற்றில், சிறு மகளிர் குழுக்கள் மூலம் 3 -5 பெண்கள் சேர்ந்து செய்யும் சானிட்டரி பேட்கள் அவர்கள் வசிக்கும் இடங்களுக்குப் போதுமானதாக இருக்கும். இதில், கொரோனா தொற்று ஏற்படும் வாய்ப்பும் இல்லை.

பேட் மேன் முருகானந்தம்
பேட் மேன் முருகானந்தம்

கிராமங்களில் வசிக்கும் பெண்களுக்கு நாப்கின்கள் கிடைக்காமல் போகும் நிலையில், குறுந்தொழிலாக உற்பத்தி செய்யும் சிலர் என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொள்கின்றனர். நாப்கின்கள் கிடைக்கும் இடங்கள் பற்றியும், உற்பத்தி செய்வதற்கான மூலப் பொருள்கள் கிடைக்கும் தேவை குறித்தும் அவர்கள் கேட்கையில் வருத்தமாக இருக்கிறது.

அனைவரையும் ஆரோக்கியமாக வைத்திருப்பதே லாக்டௌனின் குறிக்கோள் என்றாலும், நாப்கின்கள் பயன்பாட்டுக்கு இடையூறு இருப்பதால் அதன் நோக்கமே வீணாகிறது. இந்த லாக்டௌனில் இரண்டு முறை மாதவிடாய் காலத்தைக் கடக்கும் பெண்கள் உடலளவில் பல பிரச்னைகளைச் சந்திக்கக்கூடும். அதிலும் வீட்டில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இருக்கும் காலத்தில் துணியைப் பயன்படுத்துவது தர்ம சங்கடமான உணர்வை பெண்களுக்கு ஏற்படுத்தும். இந்தியா மெட்ரோ நகரங்களை மட்டும் கொண்டதல்ல. கிராமப்புற இந்தியாவில் நிலைமை மோசமடையக்கூடும்.

பேட் மேன் முருகானந்தம்
பேட் மேன் முருகானந்தம்

இதுபோன்ற பல பகுதிகளில் மாதவிடாய் என்பது பொதுவாகப் பேசக்கூடிய இடத்தில் இல்லை. மீண்டும் அதே மூலையில் பெண்களை ஒடுக்கிவிடக்கூடாது. உற்பத்தி செய்ய மூலப்பொருள்களும், தயாரித்த பேட்களை விநியோகிக்க போக்குவரத்து அனுமதியும் இருந்தால், தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள பல பெண்கள் குழு இருக்கிறார்கள். அதற்கான போதிய அனுமதியை உடனடியாக மாநில அரசு கொடுப்பது அவசியம்” என்றார் உறுதியான குரலில்.

அடுத்த கட்டுரைக்கு