Published:Updated:

பழநி: செல்போனுக்குத் தடை... ஆன்லைனில் முன்பதிவு! - 8 மாதங்களுக்குப் பிறகு தொடங்கியது வின்ச் சேவை

பழநி மலை வின்ச்
பழநி மலை வின்ச்

சுமார் எட்டு மாதங்களாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த பழநி மலை வின்ச் பயணம் நேற்று (01.12.2020) முதல் தொடங்கியது. இதனால், பக்தர்கள் மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள்.

திருதிண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில், கொரோனா ஊரடங்கு தளர்வுக்குப் பின்னர் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து பழநி முருகனை மக்கள் தரிசனம் செய்துவருகிறார்கள். இந்தநிலையில், மலை ஏறுவதற்குப் பயன்படும் மின் இழுவை ரயில்களை (வின்ச்) இயக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்தனர். அதை ஏற்ற கோயில் நிர்வாகம், நேற்று முதல் மூன்று மின் இழுவை ரயில்கள் பயணத்தை மீண்டும் தொடங்கியது. சுமார் எட்டு மாதங்களுக்குப் பின்னர், வின்ச் மூலம் பக்தர்கள் பயணித்து மகிழ்ந்தனர்.

பழநி தண்டாயுதபாணி கோயில்
பழநி தண்டாயுதபாணி கோயில்

வின்ச் இயக்கம் தொடர்பாக, கோயில் நிர்வாகம் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், பல்வேறு கட்டுப்பாடுகள் குறித்து தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, பழநி கோயிலுக்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்துவரும் பக்தர்கள் மட்டுமே பயணிக்க முடியும். டிக்கெட் கவுன்ட்டர்கள் ஏதும் திறக்கப்படாது. பயணத்துக்கு 15 நிமிடங்களுக்கு முன்னர், வின்ச் காத்திருப்பு மண்டபத்துக்கு பக்தர்கள் வந்துவிட வேண்டும். பழநியிலுள்ள வெற்றிவேல், வீரவேல், திருப்புகழ் ஆகிய மூன்று வின்ச்களில், பக்தர்கள் எந்த வின்ச்சில் முன்பதிவு செய்திருக்கிறார்களோ அந்த வின்ச்சில், அந்த நேரத்தில் மட்டுமே பயணிக்க முடியும். ஆன்லைன் முன்பதிவு செய்யும்போது கொடுக்கப்பட்ட ஐ.டி கார்டின் அசலைக் கொண்டு வர வேண்டும். கூடுதலாக நபர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

பழநி மலை வின்ச்
பழநி மலை வின்ச்

மேலும், ஒவ்வொரு வின்ச்சிலுமுள்ள இருக்கைகளில் 50% இருக்கைகளில் மட்டுமே பக்தர்கள் பயணிக்க முடியும். அதன்படி ஆன்லைன் முன்பதிவு இருக்கும். வழக்கம்போல, காலணிகளை வின்ச் நிலையத்திலுள்ள காலணி பாதுகாப்பு அறையில் வைத்துவிட வேண்டும். காலணிகளோடு வின்ட்சில் அனுமதி இல்லை. ஆகிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. முன்பதிவுக்கு www.palanimurugantemple.org என்ற இணையதளத்தைப் பயன்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இருவழிப் பயணத்துக்குக் கட்டணம் ரூ100.

இவை ஒருபுறமென்றால், பக்தர்களுக்கு மொபைல்போன் உள்ளிட்ட மின்னணுச் சாதனங்களை வின்ச்சில் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இதற்கான காரணம் ஏதும் கோயில் நிர்வாகத்தால் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. இந்தநிலையில், மீனாட்சி அம்மன் கோயில்போல, மொபைல்போனை பாதுகாப்பாக வைக்க லாக்கர் வசதி ஏற்படுத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கைவைக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு