Published:Updated:

`லேசான மழைக்கே சரிந்த பாலாறு தடுப்பணை சுற்றுச்சுவர்!' - கொதிக்கும் விவசாயிகள்

லேசான மழைதான் பெய்தது. பக்க வாட்டுல இருக்குற கருங்கற்களாலான தடுப்பு சுவர் சரிந்துவிட்டது. கண்ணுக்குத் தெரியும் சுவரே இந்த நிலைன்னா. தடுப்பணையோட அடிப்பகுதி வெள்ளத்தைத் தாங்குமா என்பது சந்தேகம்தான்.

பாலாறு, வல்லிபுரம் தடுப்பணை சுற்றுச்சுவர் சரிவு
பாலாறு, வல்லிபுரம் தடுப்பணை சுற்றுச்சுவர் சரிவு ( பா.ஜெயவேல் )

பாலாற்றிலிருந்து வீணாகக் கடலில் கலக்கும் தண்ணீரை, விவசாயிகளுக்குப் பயன்படும் வகையில் தடுப்பணைகள் அமைத்து சேமிக்க வேண்டும் என்பது காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகளின் 40 வருட கோரிக்கையாக இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு வண்டலூரில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில், ``பாலாற்றின் குறுக்கே 7 தடுப்பணைகள் கட்டப்படும்” எனத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி ரூ.30.90 கோடி மதிப்பீட்டில் செங்கல்பட்டு அருகே உள்ள வல்லிபுரம்-ஈசூர் இடையே தடுப்பணை கட்டப்பட்டுள்ளது.

வல்லிபுரம் தடுப்பணை
வல்லிபுரம் தடுப்பணை
பா.ஜெயவேல்

வடகிழக்குப் பருவமழை பெய்யத் தொடங்கியுள்ள நிலையில், பாலாற்றில் வரும் மழைநீர் தடுத்து நிறுத்தப்பட்டு தேக்கப்பட்டுள்ளது. தடுப்பணை பணிகள் நிறைவுற்ற நிலையில் லேசான மழைக்கே பாலத்தின் பக்கவாட்டுப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புச்சுவர் சரிந்து விழுந்துள்ளது. இதனால் அப்பகுதி விவசாயிகள் கொதிப்படைந்துள்ளார்கள்.

வல்லிபுரம் விவசாயிகளிடம் பேசினோம். ``பாலாற்றுல தடுப்பணை கட்டணும்னு நாங்க 40 வருஷத்துக்கு மேல போராடினோம். ஒரு வழியா இந்த வருஷம்தான் தடுப்பணை கட்டுனாங்க. இன்னும் சில நாளில் திறக்க இருந்தாங்க. இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் இந்தத் தடுப்பணையில் சுமார் 2 அடி தண்ணீர் தேங்குகிறது. தண்ணீர் வெளியேறும் பகுதியில் இரண்டு பக்கமும் தடுப்புச் சுவர் கட்டி இருக்கிறார்கள்.

அபகரிக்கும் ஆந்திரம்... பாலையாகும் பாலாறு... வேடிக்கை பார்க்கும் தமிழ்நாடு!

லேசான மழைதான் பெய்தது. பக்கவாட்டுல இருக்குற கருங்கற்களாலான தடுப்புச் சுவர் சரிந்துவிட்டது. கண்ணுக்கு தெரியும் சுவரே இந்த நிலைன்னா. தடுப்பணையோட அடிப்பகுதி வெள்ளத்தைத் தாங்குமா என்பது சந்தேகம்தான். வெறும் கருங்கல்லை மணலில் அடுக்கிவிட்டதுதான் இதற்குக் காரணம். பொதுப்பணித்துறை அதிகாரிகள் இந்தத் தடுப்பணையை ஆய்வு செய்ய வேண்டும்” என்கிறார்கள்.