Published:Updated:

ராமநாதபுரம்: ஊரடங்கால் முடங்கிய பனைத்தொழில் - சுருண்டு கிடக்கும் தொழிலாளர் வாழ்க்கை!

பனை ஓலைப் பாய்கள்
பனை ஓலைப் பாய்கள் ( உ.பாண்டி )

கடந்த நான்கு மாதங்களாக பனை ஓலைப் பாய்களை வாங்குவதற்கு வெளியூரைச் சேர்ந்த மொத்த வியாபாரிகள் வருவதில்லை. இதனால் ஓலைப் பொருள்கள் அனைத்தும் விற்பனை செய்ய முடியாமல் தேங்கி உள்ளன.

கொரோனா ஊரடங்கு காரணமாக போக்குவரத்து முடங்கியதால் பனை ஓலை உற்பத்தி பொருள்கள் தேக்கமடைந்திருக்கின்றன. பனை ஓலைப் பொருள்கள் விற்பனையும் சரிந்து போனதால், அதை நம்பியுள்ள தொழிலாளர்களின் வாழ்க்கை பாய் போல் சுருண்டு கிடக்கிறது.

பனை மரம்
பனை மரம்
உ.பாண்டி

மாநிலத்தின் மரமாக இருப்பது பனை. அத்தகைய பனை மரங்கள் அதிக எண்ணிக்கையில் நிறைந்த பகுதி ராமநாதபுரம் மாவட்டம். இந்தப் பகுதியில் உள்ள பனை மரங்களில் கிடைக்கக்கூடிய ஓலை மூலம் பாய் முடைதல், குழந்தைகளை மகிழ்விக்கும் பொம்மை, கிலுகிலுப்பை உள்ளிட்ட விளையாட்டு பொருள்கள், விசிறி, பனை ஓலைப் பெட்டிகள் போன்ற பல்வேறு வகையான தொழிலை நம்பி மாவட்டம் முழுவதும் லட்சக்கணக்கான பனைத் தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

பாய் முடையும் பெண்கள்
பாய் முடையும் பெண்கள்
உ.பாண்டி

ராமநாதபுரம் மாவட்டத்தில் பின்னப்படும் பனை ஓலைப் பாய்கள் தமிழகத்தின் பல பகுதிகள் மட்டுமன்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் மொத்தமாக விற்பனை செய்யப்பட்டு வந்தது. மீன், கருவாடு, கருப்பட்டி ஆகியவற்றைக் கெடாத வகையில் பார்சல் செய்ய பயன்படுத்தப்படுகிறது. இயற்கையாக வளரும் பனை ஓலைகளில் பின்னப்படும் பாய்கள் மற்றும் பெட்டிகளில் உணவுப் பொருள்கள் பார்சல் செய்வதன் மூலம் அவை விரைவில் கெட்டுப்போவதில்லை. மேலும், இவற்றின் விலையும் குறைவு.

கொரோனா தாக்கத்தால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு போக்குவரத்து முடங்கியுள்ளது. இதனால் கடந்த நான்கு மாதங்களாக பனை ஓலைப் பாய்களை வாங்குவதற்கு வெளியூரைச் சேர்ந்த மொத்த வியாபாரிகள் வருவதில்லை. இதனால், பின்னி வைக்கப்பட்ட ஓலைப் பொருள்கள் அனைத்தும் விற்பனை செய்ய முடியாமல் தேங்கியுள்ளன. மேலும், பனை ஓலைப் பாய்களை வாங்க வியாபாரிகள் வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால், இதை நம்பியிருந்த பனைஓலை பாய் பின்னும் பெண்கள் வேலைவாய்ப்பு இன்றி வருமானம் இழந்துள்ளனர். இதேபோல் சுற்றுலாப் பயணிகள் வருகையும் தடைபட்டதால், பனை ஓலையில் செய்யப்படும் விளையாட்டுப் பொருள்கள் விற்பனையும் இல்லாமல் போனது. இதனால், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கடுக்காய் வலசை, தாமரைக் குளம், ரெட்டை ஊரணி, உச்சிப்புளி, கீழமான் குண்டு, காரான், கும்பரம், ரெகுநாதபுரம் உள்ளிட்ட ஏராளமான கிராமங்களைச் சேர்ந்த பனை ஓலைத் தொழிலாளிகள் தங்களின் அன்றாட வாழ்வாதாரத்துக்கு வழியின்றி தவித்து வருகின்றனரர்.

முடங்கிக் கிடக்கும் பனை ஓலைப் பாய்கள்
முடங்கிக் கிடக்கும் பனை ஓலைப் பாய்கள்
உ.பாண்டி

அன்றாடம் குடும்பத்துக்கு ஆகும் செலவுகளைச் சமாளிக்க தனியார்களிடம் அதிக வட்டிக்குக் கடன் வாங்கி வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர். நாள் ஒன்றுக்கு தொழிலாளி ஒருவர் ரூ. 300 -லிருந்து ரூ.500 வரை சம்பாதித்து வந்த நிலையில், பனை ஓலைப் பாய் விற்பனை முடக்கத்தால், அதன் உற்பத்தி தொழில் முற்றிலுமாக முடங்கியுள்ளது. பனைத் தொழிலாளிகளின் வாழ்வாதாரத்துக்கு உதவுவதற்காக அமைக்கப்பட்ட பனைத்தொழிலாளர் வாரியமும், இதில் அக்கறை காட்டாமல் இருக்கிறது. இதனால், பனை ஓலைப் பாயைப் போன்றே அதைப் பின்னக்கூடிய பெண் தொழிலாளர்களின் வாழ்க்கையும் சுருண்டு கிடக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு