Published:Updated:

` மகன் திட்டியதால் கடலில் குதித்தேன்!' -பாம்பன் மீனவர்களைப் பதறவைத்த தூத்துக்குடி விவசாயி

பாம்பன் சாலைப் பாலத்தில் நீண்டநேரம் யோசித்தபடி நின்றுகொண்டிருந்த சண்முகவேல் `திடீர்' எனப் பாலத்திலிருந்து கடலில் குதித்துள்ளார்.

முதியவர் சண்முகவேல்
முதியவர் சண்முகவேல்

மகன் திட்டியதால் மனமுடைந்து பாம்பன் கடலில் குதித்து தற்கொலை செய்துகொள்ள முயன்ற 80 வயது முதியவர் ஒருவரை மீனவர்கள் காப்பாற்றிக் கரை சேர்த்தனர்.

முதியவர் சண்முகவேல்.
முதியவர் சண்முகவேல்.

தூத்துக்குடி மாவட்டம் வைப்பாறு அருகே உள்ள பள்ளாகுளம் காலனியைச் சேர்ந்தவர் விவசாயி சண்முகவேல். இவருக்குப் பாலமுருகன் என்ற மகன் உள்ளார். டிரைவர் வேலை பார்த்து வரும் பாலமுருகனுக்கும் சண்முகவேலுக்கும் இடையே இரு தினங்களுக்குமுன் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது பாலமுருகன் தன் தந்தை சண்முகவேலுவைக் கீழே பிடித்துத் தள்ளியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சண்முகவேலு தன் மகனைத் தகாத வார்த்தையில் திட்டியுள்ளார். பதிலுக்கு பாலமுருகனும் தன் தந்தையை ஆபாச வார்த்தைகளால் வசைபாடியுள்ளார்.

இதனால் மனமுடைந்த சண்முகவேல் தனது வீட்டிலிருந்து வெளியேறி நேற்று இரவு பாம்பன் வந்திருக்கிறார். பாம்பன் சாலைப் பாலத்தில் நீண்டநேரம் யோசித்தபடி நின்று கொண்டிருந்த சண்முகவேல் `திடீர்' எனப் பாலத்திலிருந்து கடலில் குதித்துள்ளார். இதைக்கண்ட அப்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த பாம்பனைச் சேர்ந்த செய்யதுஅலி என்பவர் கடலில் குதித்து முதியவரைக் காப்பாற்றினார். கடல் பாலத்தின் மீதிருந்து குதித்த முதியவர் சண்முகவேலுக்கு முதுகில் எழும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் செய்யதுஅலியினால் அவரை மேலே கொண்டு வர முடியாமல் போனது.

முதியவர் சண்முகவேலுவை மீட்ட செய்யதுஅலி
முதியவர் சண்முகவேலுவை மீட்ட செய்யதுஅலி

இச்சம்பவம் குறித்து அறிந்த செய்தியாளர் ஒருவர், பாம்பனில் இயங்கிவரும் `பாம்பன் தீவு செய்திகள் ' என்ற வாட்ஸ்அப் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஜிம்மி காட்டர் என்பவருக்கு தகவல் கொடுத்துள்ளார். இச் செய்தியை அவர் தனது வாட்ஸ்அப் குழுவில் பதிவிட்டதைத் தொடர்ந்து அக்குழுவில் இருந்த பிரசன்னா, ஆன்க்யூ, மெமிரோ, ராமு, ஜோசுவா ஆகியோர் உடனடியாக அப்பகுதிக்குச் சென்றனர். பின்னர் செய்யது அலியுடன் இணைந்து முதியவர் சண்முகவேலுவை ரயில் பாலம் வழியாக மீட்டு வந்தனர்.

நிறம் மாறிய கடல்.. கரை ஒதுங்கிய மீன்கள்..! - பதறிய பாம்பன் மீனவர்கள்

கரைக்குக் கொண்டுவரப்பட்ட முதியவர் சண்முகவேலுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்ற முதியவர் சண்முகவேலுவிடம் நடந்த விவரங்களைக் கேட்டறிந்த `பாம்பன் தீவு செய்தி' வாட்ஸ்அப் குழுவைச் சேர்ந்த மீனவர்கள், முதியவருக்கு ஆறுதல் கூறியதுடன், `இனி இதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது' எனவும் அறிவுறுத்தினர்.

முதியவரை மீட்க உதவிய மீனவர்கள்
முதியவரை மீட்க உதவிய மீனவர்கள்

இதைத் தொடர்ந்து மண்டபம் கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாருக்கும் 108 ஆம்புலன்ஸ் வாகனத்துக்கும் தகவல் கொடுத்தனர். இதன்பின்னர், முதியவர் சண்முகவேலுவை மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸில் அழைத்துச் சென்றனர்.

தள்ளாத வயதிலும் தன்மானத்தினால் கடலில் குதித்து தற்கொலை செய்துகொள்ள முயன்ற முதியவரை தனி ஒருவராக காப்பாற்றிய மீனவர் செய்யதுஅலியையும் அவரை கரைக்குக் கொண்டு வந்து சிகிச்சைக்கு அனுப்பிய `பாம்பன் தீவு செய்திகள்' வாட்ஸ்அப் குழுவைச் சேர்ந்த மீனவர்களையும் பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டினர்.