Published:Updated:

சிவகங்கை: `கொரோனா தோட்டத்து காய்கறி; மலிவு விலை மளிகை’ - அசத்தும் ஊராட்சி தலைவர்

கொரோனா தோட்டத்து  காய்கறி
கொரோனா தோட்டத்து காய்கறி

கொரோனா காலகட்டத்தில் மக்கள் சிரமப்படுவதை உணர்ந்து தற்போது மளிகை பொருள்கள் மற்றும் சந்தையில் கிடைக்கும் காய்கறிகளை மொத்த விலைக்கு பெற்று லாபம் வைக்காமல் மலிவு விலைக்கே விற்பனை செய்கிறேன்.

`கொரோனோவின் கொடுமை பலரையும் நிலை குலைய வைத்துள்ளது. கொரோனோ நோய் தொற்று பாதிப்பை விட மக்களின் நிலைதான் அதிகப்படியாகப் பாதிக்கப்பட்டுள்ளது. வேலை வாய்ப்புகள் இழந்து பலரும் பட்டினி, பசியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தன்னால் செயல்படுத்தும் முயற்சியை மேற்கொண்டு தனது கிராம மக்களுக்கு உதவிகளை செய்து பாராட்டுக்களைப் பெற்றுள்ளார் ஊராட்சி மன்றத் தலைவர் ஒருவர்.

கொரோனா தோட்டத்து  காய்கறி
கொரோனா தோட்டத்து காய்கறி

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ளது பெரியகொட்டகுடி ஊராட்சி. இங்குள்ள ஊராட்சி மன்றத் தலைவர் முயற்சியால் பொதுமக்கள் காய்கறிகளை விளைவித்து இலவசமாகவும், மளிகை பொருள்களை மலிவு விலைக்கும் வழங்கி மக்களின் பேராதரவை பெற்றுள்ளார். இதனால் ஊராட்சி மன்றத் தலைவருக்கும், கிராம மக்களுக்கு சமூக ஆர்வலர்களும் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து ஊராட்சி மன்றத் தலைவர் தனபால், 'எங்கள் ஊராட்சியில் சுமார் 8 கிராமங்கள் உள்ளன. கொரோனா பாதிப்பு சமயத்தில் எங்கள் ஊராட்சி மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனப் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தோம். தற்போது வரை ஊரடங்கு உத்தரவை பொதுமக்கள் முறையாகப் பின்பற்றுகின்றனர். முழு ஊரடங்கு சமயத்தில் என்னுடைய முயற்சியில் ஏழை, எளிய மக்களுக்கு காய்கறிகளை வழங்கினேன். ஒரு கட்டத்தில் ஏன் காய்கறிகளை நாமே உருவாக்கக் கூடாது என்று தோன்றியது.

கொரோனா தோட்டத்து  காய்கறி
கொரோனா தோட்டத்து காய்கறி

எங்கள் ஊராட்சிப் பகுதியில் உள்ள சேவை மைய கட்டடம் அருகே சுமார் 3 ஏக்கர் நிலம் சீமை கருவேல் மரங்கள் மண்டிக் கிடந்தது. இதனை முழுமையாக சுத்தம் செய்து தோட்டத்து இடமாக மாற்றி கொரோனா தோட்டம் எனப் பெயரிட்டோம். காய்கறிகளை விளைவிக்க முடிவு செய்து 100 நாள் வேலை ஆட்களை வேலை செய்ய பயன்படுத்தினேன். உழவு செய்து இயற்கை உரங்கள் பயன்படுத்தி கத்தரி, வெண்டை, அவரை, பாவை, பூசணி, முள்ளங்கி எனப் பல பயிர்களை நட்டுள்ளோம். இதில் பல பயிர்களை தொடர்ந்து 4 முறைக்கு மேல் பறிப்பு செய்துவிட்டோம்.

எங்கள் கிராமத்தை சேர்ந்த மக்கள்தான் இதில் பணி செய்தனர். அதனால் அவர்களுக்கே அந்தக் காய்கறிகளை இலவசமாக வழங்கி விடுகிறேன். இதனால் தன்னம்பிக்கை பெற்று தங்களது வீடுகளிலும் வீட்டுத் தோட்டங்கள் அமைக்க ஆரம்பித்து வருகின்றனர். ஆனாலும் கொரோனா நோய் தொற்று விரைவாகக் குறையும் என நம்பிக்கை இல்லை. அதனால் மக்களுக்கு தேவையான காய்கறிகளைத் தொடர்ந்து விளைவிக்கிறோம்.

ஊராட்சி மன்றம்
ஊராட்சி மன்றம்

மேலும், கொரோனா காலகட்டத்தில் மக்கள் சிரமப்படுவதை உணர்ந்து தற்போது மளிகை பொருள்கள் மற்றும் சந்தையில் கிடைக்கும் காய்கறிகளை மொத்த விலைக்கு பெற்று லாபம் வைக்காமல் மலிவு விலைக்கே விற்பனை செய்கிறேன். நகரங்களில் கிடைக்கும் பொருள்களைவிட விலை மலிவாக இருப்பதால் பொதுமக்கள் பொருள்களை பெற்று நிம்மதியடைகின்றனர். எனக்கு ஓட்டு போட்ட மக்களுக்கு என்னால் என்ன செய்ய முடியுமோ அதனை தொடர்ந்து செய்வேன்" என்றார் நெகிழ்ச்சியாக.

கொரோனா ஊரடங்கு சமயத்தில் தனது ஊராட்சி மக்களுக்கு கை கொடுக்கும் விதமாக ஊராட்சி மன்றத் தலைவர் செயல்படுவது பாராட்டுக்களை பெற்றுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு