Published:Updated:

`நான் வாடகை வசூலிக்கவில்லை... நீங்களும்!' - வாட்ஸ்அப்பில் அசத்திய ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர்

வாடகை வீடு
வாடகை வீடு

எனக்குச் சொந்தமான நான்கு வீடுகளில் குடியிருப்பவர்களிடம், இரண்டு மாத வாடகை தர வேண்டாம் எனக் கூறிவிட்டேன். இதையும் மற்ற வீட்டு உரிமையாளர்களிடம் எடுத்துக் கூறினேன்.

பாபநாசம் அருகே ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் ஒருவர் தனக்கு சொந்தமான வீடுகளில் வசிப்பவர்களிடம், இரண்டு மாத வாடகை தர வேண்டாம் எனக் கூறியதுடன், அந்த ஊராட்சியில் வீடுகளை வாடகைக்கு விட்டுள்ள உரிமையாளர்களிடமும் வாடகை வாங்க வேண்டாம் எனக் கோரிக்கை வைத்தது நெகிழ வைத்துள்ளது.

இராஜகிரி ஊராட்சி
இராஜகிரி ஊராட்சி

பாபநாசம் அருகே உள்ள ராஜகிரி பகுதியில், இஸ்லாமிய சமூகத்தினர் அதிகம் வசிக்கின்றனர். இங்கு ஊராட்சி மன்றத் தலைவராக சமீமா பர்வீன் என்பவர் இருக்கிறார். அவரின் கணவர் முபாரக் சமூகச் சேவைகளை ஆர்வத்துடன் செய்து வருபவர். சுற்றுச்சூழல் மீதும் அக்கறை கொண்ட முபாரக், ராஜகிரி முழுவதும் ஏராளமான மரக்கன்றுகளை வைத்து பராமரித்து மரமாக்கி வருகிறார். இவருடைய நற்பணிகளால் அப்பகுதி மக்கள் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் முபாரக்கின் மனைவி சமீமா பர்வீனை ஊராட்சி மன்றத் தலைவராகத் தேர்ந்தெடுத்தனர்.

இந்த நிலையில் கொரோனா பரவுவதைத் தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பலர் வேலையிழந்ததுடன் வருமானமின்றித் தவித்தனர். இதையடுத்து முபாரக் தன் மனைவியுடன் சேர்ந்து வறுமையில் உள்ள குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கினார். அத்துடன் வீட்டு உரிமையாளர்களிடம், `மாதச் சம்பளத்துக்கு வேலைக்குச் செல்லும் பல குடும்பங்கள் வாடகை வீட்டில் வசிக்கின்றனர். இந்தச் சூழ்நிலையில் வாடகையை வசூலிக்காமல் விட்டுக் கொடுத்து அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்' எனக் கோரிக்கை வைத்தார். இதையடுத்து, இந்தப் பகுதியில் வீட்டு உரிமையாளர்களில் 35 பேர் வரையில், இதுவரை வாடகையை வசூலிக்கவில்லை.

முபாரக்
முபாரக்

முபாரக்கிடம் பேசினோம். ``ராஜகிரி ஊராட்சியில் சுமார் 10,000 வீடுகள் உள்ளன. இங்கு நூற்றுக்கணக்கானவர்கள் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். கொரோனா ஏற்படுத்திய பாதிப்பு அனைத்து தரப்பு மக்களையும் நிலைகுலைய வைத்துள்ளது. இதில் தினக்கூலிக்கும் மாதச் சம்பளத்துக்கும் வேலைக்குச் சென்றவர்களின் நிலை ரொம்பவே மோசமாக மாறியது.

வருமானம் இல்லாமல் போனதால் அவர்களால் மூன்றுவேளை சாப்பாடு சாப்பிட முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் அவர்களால் வாடகை எப்படி தர முடியும். மேலும், அடுத்தடுத்த மாதங்களில் சேர்த்து வாங்கிக் கொள்ளலாம் என்றாலும் அது அவர்களுக்கு கூடுதல் சுமையாகி கழுத்தை நெரிக்கும் நிலை ஏற்படும். இதை உணர்ந்து, வீட்டு உரிமையாளர்களிடம் போன் மூலம் பேசி வாடகை வாங்க வேண்டாம் என்ற கோரிக்கை வைத்தேன்.

இதை வாட்ஸப் மூலமாகவும் அனுப்பி வைத்தேன். இதேபோல் எனக்குச் சொந்தமான நான்கு வீடுகளில் குடியிருப்பவர்களிடம், இரண்டு மாத வாடகை தர வேண்டாம் எனக் கூறிவிட்டேன். இதையும் மற்ற வீட்டு உரிமையாளர்களிடம் எடுத்துக் கூறினேன். இதை உணர்ந்த 35 நபர்கள் தாமாக முன்வந்து, இரண்டு மாத வாடகை வேண்டாம் எனக் கூறிவிட்டனர்.

வீடு
வீடு

இதன் மொத்தத் தொகையைக் கணக்கிட்டால், சுமார் ரூபாய் 10 லட்சம் வரும். மனிதர்கள் துயரங்களில் தவிக்கும் நேரங்களில் இயன்றவர்கள் முடிந்த உதவியைச் செய்து கஷ்டப்படுபவர்களுக்கு உதவ வேண்டும். அந்தவகையில் எங்கள் ஊராட்சியைச் சேர்ந்தவர்கள் வாடகை வேண்டாம் எனக் கூறிவிட்டனர். மேலும், சாதி, மதம் பார்க்காமல் பலருக்கும் தங்களால் முடிந்த உதவியைச் செய்து வருகின்றனர்" என்றார் நெகிழ்ச்சியான குரலில்.

அடுத்த கட்டுரைக்கு