Published:Updated:

`நீங்கள் சம்மதித்தால் 8 பேருக்கு வாழ்வு கிடைக்கும்!' -மகன் இறந்த துயரத்திலும் நெகிழவைத்த பெற்றோர்

சரத்குமார்
சரத்குமார்

பெற்றோருக்கு ஆறுதல் கூறிய மருத்துவர்கள், `நீங்கள் சம்மதித்தால் மூளைச்சாவு அடைந்த சரத்குமாரின் உடல் உறுப்புகள் மூலம் பலரது உயிரைக் காக்க முடியும்' எனத் தெரிவித்தனர்.

விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் பெற்றோர் சம்மதம் தெரிவித்ததால், அவரின் உடல் உறுப்புகள் மூலம் 8 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. பரமக்குடியில் நடந்த இந்தச் சம்பவம் பலரையும் நெகிழவைத்துள்ளது.

சரத்குமார்
சரத்குமார்

பரமக்குடி காந்தி நகரில் வசித்து வருபவர்கள் வெற்றிவேல்-ராஜேஸ்வரி தம்பதி. இவர்களின் மகன் சரத்குமார் (23). சிவகங்கையில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றி வந்தார். கடந்த 11-ம் தேதி வங்கியில் பணி முடித்துவிட்டு டூவீலரில் இளையாங்குடி வழியாக பரமக்குடி வந்துள்ளார். அப்போது அதிகரை விலக்கு ரோடு பகுதியில் சரத்குமாரின் டூவீலர் திடீரென நிலை தடுமாறி விபத்து ஏற்பட்டது.

சரத்குமாரின் குடும்பத்தினர்
சரத்குமாரின் குடும்பத்தினர்

இதில் பலத்த காயமடைந்த சரத்குமார் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், சரத்குமார் ஏற்கெனவே மூளைச்சாவு அடைந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் அவரின் பெற்றோர் மகனின் இழப்பைத் தாங்கிக்கொள்ள முடியாமல் கண்ணீர் விட்டுக் கதறினர்.

இதையடுத்து அவர்களுக்கு ஆறுதல் கூறிய மருத்துவர்கள், நீங்கள் சம்மதித்தால் மூளைச்சாவு அடைந்த சரத்குமாரின் உடல் உறுப்புகள் மூலம் பலரது உயிரைக் காக்க முடியும் எனத் தெரிவித்தனர். இதனால் மகனை இழந்த சோகத்திலும், மற்றவர்கள் உயிர் பிழைக்க வேண்டி தங்கள் மகனின் உடல் உறுப்புகளைத் தானம் செய்ய சம்மதித்தனர்.

ஹெலிகாப்டரில் கொண்டு செல்லப்படும் உடல் உறுப்புகள்
ஹெலிகாப்டரில் கொண்டு செல்லப்படும் உடல் உறுப்புகள்

இதையடுத்து, மூளைச்சாவு அடைந்த சரத்குமாரின் உடலில் இருந்து இதயம், கண்கள், சிறுநீரகங்கள், கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகளைத் தானமாக அளித்தனர். விமானம் மூலம் இதயத்தை சென்னைக்கும் கண்களைத் திருச்சிக்கும் சிறுநீரகங்களை மதுரை, தஞ்சாவூருக்கும் அனுப்பி வைத்தனர்.

சரத்குமாரின் கல்லீரல் கோவை மெடிக்கல் சென்டரில் உள்ள நோயாளி ஒருவருக்குப் பொருத்துவதற்காக ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் மூலம் மதுரையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்டது. ஹெலிகாப்டர் இறங்குதளத்தில் இருந்து போக்குவரத்துப் போலீஸாரின் உதவியுடன் வாகனத்தின் மூலம் கோவை மெடிக்கல் சென்டருக்குக் கொண்டு சேர்த்தனர்.

மகனைப் பறிகொடுத்த பெற்றோரின் மன உறுதியினால் 8 பேர் மறுவாழ்வு பெற்ற சம்பவம் பரமக்குடி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

அடுத்த கட்டுரைக்கு