Published:Updated:

`கலெக்டர் கொடுத்த உயிர்; என் மகன் இனி சந்தோஷமா இருப்பான்!'- தி.மலை சிறுவனின் தந்தை ஆனந்தக் கண்ணீர்

பிறவி இதய நோயினால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்த இருளர் சமூகத்தைச் சேர்ந்த ஏழுமலை, சின்னபாப்பா தம்பதியினரின் மூத்த மகன் கோவிந்தராஜ், கலெக்டரின் உதவியால் சிகிச்சை பெற்று பூரண குணமடைந்து வீடு திரும்பினார்.

கோவிந்தராஜுடன்  கலெக்டர் கந்தசாமி
கோவிந்தராஜுடன் கலெக்டர் கந்தசாமி

திருவண்ணாமலை மாவட்டம், தண்டம்பட்டு கிராமத்தில் வசித்து வருபவர் ஏழுமலை, சின்னபாப்பா தம்பதி. கூலித் தொழிலாளிகளான இவர்களுக்கு கோவிந்தராஜ் (16), மாரி (8) ஆசினி (2) என மூன்று குழந்தைகள். இதில், கோவிந்தராஜ் பிறவியிலேயே இதய நோயால் பாதிக்கப்பட்டவர். இவருக்கு 4 வயது இருக்கும்போது, திடீரென்று கை, கால் வலி, மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. உடனே அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

`கலெக்டர் கொடுத்த உயிர்; என் மகன் இனி சந்தோஷமா இருப்பான்!'- தி.மலை சிறுவனின் தந்தை ஆனந்தக் கண்ணீர்

கோவிந்தராஜை பரிசோதனை செய்த மருத்துவர், `பிறவி இதய நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். ஆபரேஷன் செய்ய லட்சக்கணக்கில் செலவு ஆகும்' என்று கூறியுள்ளார். குடும்ப வறுமை சூழல் காரணமாக கோவிந்தராஜுக்கு மேற்கொண்டு சிகிச்சை அளிக்க முடியாமல், 12 ஆண்டுகளாக ஏழுமலை குடும்பமே வேதனையில் வாழ்ந்து வந்துள்ளது. இந்தத் தகவல், மாவட்ட ஆட்சியர் கந்தசாமியின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டது. உடனே மாவட்ட ஆட்சியர் தொண்டு நிறுவனங்களிடம் கோவிந்தராஜின் நிலைமையை எடுத்துக் கூறி உதவி கோரினார்.

இந்நிலையில், தனியார் தொண்டு நிறுவனம் உதவியுடன் ரூ.3.40 லட்சமும், மத்திய, மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.1.10 லட்சமும், என மொத்தம் ரூ.4.50 லட்சம் செலவில், கோவிந்தராஜுக்குச் சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்தச் சிகிச்சையின் மூலம் கோவிந்தராஜ் பூரண குணமடைந்து வீடு திரும்பினார்.

`கலெக்டர் கொடுத்த உயிர்; என் மகன் இனி சந்தோஷமா இருப்பான்!'- தி.மலை சிறுவனின் தந்தை ஆனந்தக் கண்ணீர்

இதுகுறித்து கோவிந்தராஜின் அப்பா ஏழுமலை, “என் மகன் வலியால் அவதிப்படும்போது அவனைக் காப்பாற்ற முடியாத இந்த வாழ்க்கை எதுக்குடா என தினம் தினம் வேதனையில் குமுறியிருக்கேன். ஆனால், இப்போ அதெல்லாம் பறந்து போய்டுச்சு. என் மகன் வலியில்லாமல் இனிமே நிம்மதியா சந்தோஷமா இருப்பான்.

அவன் உயிரோடு இருக்கிறதுக்குக் காரணம் கலெக்டர் சார்தான். இது அவர் கொடுத்த உயிர். இனிமே அவர்தான் எங்க தெய்வம். அவர் உதவி செய்யலன்னா என்னுடைய மகன் கதி என்ன ஆயிருக்கும் என்றே தெரியாது. அதை நெனச்சுக்கூட பார்க்க முடியல. கலெக்டர் சாருக்கு ரொம்ப ரொம்ப நன்றி” என்றார்.

கோவிந்தராஜுடன் பெற்றோர்
கோவிந்தராஜுடன் பெற்றோர்

பூரண குணமடைந்து வந்த கோவிந்தராஜுக்கு, கலெக்டர் கந்தசாமி புதிய உடைகள் மற்றும் பழங்கள் கொடுத்து வரவேற்று, மாத்திரை செலவிற்கு ரூ.10,000 கொடுத்து வீட்டிற்கு அனுப்பி வைத்தார். இதுகுறித்து கலெக்டர் கூறுகையில், “சென்னை அடையாறில் உள்ள ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையில் கோவிந்தராஜ் 18.09.2019 அன்று சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டார். 8 நாள்கள் தொடர் சிகிச்சைக்குப் பின்பு 25.09.2019 அன்று மருத்துவர் கணபதி சுப்பிரமணியம், மருத்துவர் பிரதீப் குழுவினரால் இருதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது. அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். பணஉதவி செய்த தொண்டு நிறுவனத்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகள்” என்றார்.