Published:Updated:

`வெளிநாட்டுல இருந்து போராடி ஊர் வந்தோம். ஆனா?'- திருச்சி கட்டணக் கொள்ளையால் மிரண்ட பயணிகள்

பயணிகள் தவிப்பு
பயணிகள் தவிப்பு

கத்தாரில் மூன்று மாதங்களாக வேலையில்லாமல் சோறு தண்ணிக்குக் கஷ்டப்பட்டு, உயிருக்குப் பயந்துபோய் நேற்று இரவு 12.30 மணிக்கு திருச்சிக்கு வந்து இறங்கினோம்.

`மூன்று மாதங்களாக வேலை வெட்டி இல்லாமல் தப்பிச்சா போதுமென்று சொந்த ஊருக்கு வந்துகொண்டிருக்கிறோம். எங்களிடம் பேருந்தில் பயணம் செய்ய ஒரு டிக்கெட்டுக்கு 1,500 ரூபாய் வரை கேட்கிறார்கள். மனிதாபிமானம் இல்லையா?' எனக் கூறி திருச்சி விமானநிலையத்தில் பிரச்னையில் ஈடுபட்ட பயணியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

திருச்சி விமான நிலையம்
திருச்சி விமான நிலையம்

கொரோனா ஊரடங்கால் வெளிநாடுகளில் சிக்கியிருப்பவர்களை சிறப்பு விமானங்கள் மூலம் சொந்த ஊருக்கு அழைத்துவரும் பணியை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டுவருகின்றன.

பரிசோதனை செய்யும் அதிகாரிகள்
பரிசோதனை செய்யும் அதிகாரிகள்

அந்த வகையில், நேற்று இரவு 12.30 மணியளவில் கத்தாரிலிருந்து திருச்சிக்கு சிறப்பு விமானம் ஒன்று வந்தது. அதில் வந்த 170 பயணிகள், கொரோனா சோதனைக்குப் பிறகு தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல வெளியே வந்தனர்.

கொரோனா காரணமாக வெளிநாடுகளிலிருந்து வந்த பயணிகளுக்கு, அரசு சார்பில் பேருந்து ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தஞ்சை, புதுக்கோட்டை, மதுரை, கடலூர் ஆகிய ஊர்களைச் சேர்ந்த பயணிகள் ஊர்களுக்குச் செல்ல பேருந்துகளில் ஏறத் தொடங்கினர். அப்போது, தஞ்சை, மதுரை திண்டுக்கல் செல்ல 1,000 ரூபாய் என்றும், கடலூர் மாவட்டத்துக்கு 1,500 ரூபாய் என்றும் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.

காத்திருந்த பயணிகள்
காத்திருந்த பயணிகள்

மூன்று மணி நேரத்துக்குப் பிறகு பயணிகள், உறவினர் மற்றும் நண்பர்களிடம் பணத்தைக் கடன் வாங்கி சொந்த ஊருக்குச் சென்றிருக்கிறார்கள்.

இதையடுத்து, பயணி ஒருவரிடம் பேசினோம். ``நான் கத்தாரில் மூன்று மாதங்களாக வேலையில்லாமல் சோறு தண்ணிக்குக் கஷ்டப்பட்டு உயிருக்குப் பயந்து போய் நேற்று இரவு 12.30 மணிக்கு திருச்சிக்கு வந்து இறங்கினோம். வந்ததுமே கொரோனா டெஸ்ட் எடுக்க வேண்டும் என்று இரண்டு மூன்று மணி நேரம் காக்க வைத்தார்கள்.

பல பரிசோதனைகளைச் செய்து, எங்களை வெளியில் அனுப்பினார்கள். இந்நிலையில், வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர்களை அவரவர்களின் பெற்றோர் கார்களை வைத்துக் கூட்டிச்சென்றார்கள். எங்களைப் போன்ற நடுத்தர குடும்பத்தினர் பேருந்தில்தானே பயணம் செய்ய வேண்டும். அந்த வகையில் பேருந்தில் ஏறச்சென்ற போது தஞ்சை, மதுரை, திண்டுக்கல் செல்ல 1,000 ரூபாய் என்றும் கடலூர் மாவட்டத்திற்கு 1,500 ரூபாய் டிக்கெட் என்று சொன்னார்கள்.

வெளிநாட்டு பயணிகள்
வெளிநாட்டு பயணிகள்

என்னது 1000 ரூபாயா என்று கேட்டதற்கு அவர்கள் சொன்ன வார்த்தைதான், எங்களை அதிர்ச்சி அடையவைத்தது. வெளியூர்களுக்கு ஒரு பேருந்தில் பத்து பேர்தான் செல்கின்றனர். 10 பேர், 20 பேர் என்பதால் டீசல் அதிகமாகிறது. அதிக நஷ்டம் ஏற்படுகிறது. எனவே, அதற்குரிய கட்டணத்தை வாங்கிக்கொள்ள வேண்டும், வேறு வழியில்லை என்றார்.

“என்ன சார் இது பகல் கொள்ளையா இருக்கிறதே. உங்களுக்கு மனிதாபிமானம் இல்லையா? நாங்கள் எப்படிப்பட்ட சூழலில் வந்திருக்கிறோம்" என்று வந்திருந்த பயணிகள் எவ்வளவோ பிரச்னை செய்தும் அவர்கள் மறுத்துவிட்டார்கள். வேறு வழியில்லாமல் நண்பர்களிடம் கூகுள் பே ஆப் மூலமாக பணத்தை போடச்சொல்லி, அதிகாலை 4 மணியளவில் பேருந்து ஏறிக் கிளம்பினேன்" என்றார் வேதனையுடன்.

அடுத்த கட்டுரைக்கு