Published:Updated:

``எட்டு வீடு மாறிட்டோம்; பொண்ணு தவிக்கிறா!" - முகச்சிதைவு நோய் பாதித்த சிறுமியின் தந்தை உருக்கம்

சிறுமி டானியா

``எங்க போனாலும் என்னை விநோதமா பார்க்கிறாங்க. ஸ்கூல்ல யாருமே என் கூட சகஜமா பேசுறதில்லை. விளையாடவும் என்னைச் சேர்த்துக்க மாட்டேங்கிறாங்க. என்னைக் கேவலமா பேசுறாங்க...’’ - இப்படியெல்லாம் என் பொண்ணு கண்ணீர் மல்க ஆதங்கத்துடன் சொல்லுவா...

``எட்டு வீடு மாறிட்டோம்; பொண்ணு தவிக்கிறா!" - முகச்சிதைவு நோய் பாதித்த சிறுமியின் தந்தை உருக்கம்

``எங்க போனாலும் என்னை விநோதமா பார்க்கிறாங்க. ஸ்கூல்ல யாருமே என் கூட சகஜமா பேசுறதில்லை. விளையாடவும் என்னைச் சேர்த்துக்க மாட்டேங்கிறாங்க. என்னைக் கேவலமா பேசுறாங்க...’’ - இப்படியெல்லாம் என் பொண்ணு கண்ணீர் மல்க ஆதங்கத்துடன் சொல்லுவா...

Published:Updated:
சிறுமி டானியா

சென்னையை அடுத்த ஆவடிக்கு அருகில் இருக்கிறது வீராபுரம் கிராமம். அந்த ஊரிலுள்ள தையல் தொழிலாளியான ஸ்டீபன்ராஜின் மகள் டானியா, நான்காம் வகுப்பு படிக்கிறார். பிறந்த சில ஆண்டுகள் கழித்து, டானியாவின் வலது கன்னத்தில் ஏற்பட்ட சிறிய புள்ளியானது, நாளடைவில் பெரிதாகி, குழந்தையின் வாழ்க்கைக்கே வினையாகிவிட்டது.

சிறுமி டானியா
சிறுமி டானியா

டானியாவின் வலது கன்னம் முழுவதும் கறுமை நிறத்தில் இருப்பதுடன், அந்தச் சதைப் பகுதி முழுமையாகச் சுருங்கி, வளர்ச்சியின்றி இருக்கிறது. டானியாவுக்கு ஏற்பட்டிருப்பது முகச்சிதைவு நோய் என்கிறது மருத்துவ வட்டாரம். நிரந்தரமான தீர்வு கண்டுபிடிக்கப்படாத இந்த நோயால், டானியாவும் அவரின் பெற்றோரும் அனுபவித்துவரும் இன்னல்கள் விவரிக்க இயலாத துயரம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

டானியாவின் இக்கட்டான நிலை குறித்தும், தமிழக அரசிடம் அவர்கள் எதிர்பார்க்கும் உதவிகள் குறித்தும், பத்திரிகைகளில் செய்தி வெளியானது. உடனடியாக மருத்துவக் குழுவினருடன் டானியாவின் வீட்டுக்கு விரைந்தார், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ். டானியாவுக்குத் தேவையான மருத்துவ உதவிகள் குறித்துக் கேட்டறிந்திருக்கிறார் அவர். இதன் தொடர்ச்சியாக, தனியார் மருத்துவமனையில் டானியா சிகிச்சை பெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து டானியாவின் தந்தை ஸ்டீபன் ராஜுவிடம் பேசினோம்.

குழந்தையாக டானியா
குழந்தையாக டானியா

``என் பூர்வீகம் தென்காசி. என் மனைவி செளபாக்கியா, சென்னையைச் சேர்ந்தவங்க. கல்யாணத்துக்குப் பிறகு, நாங்க சில காலம் கரூர்ல இருந்தோம். அங்கதான் மூத்தவள் டானியா பிறந்தாள். ஆரம்பத்துல ஆரோக்கியமான குழந்தையாதான் இருந்தாள். மூணு வயசுல திடீர்னு அவள் கன்னத்துல கறுப்பு கலர்ல புள்ளி மாதிரி வந்துச்சு. ஆரம்பத்துல அதை மச்சம்னுதான் நினைச்சோம். ஆனா, பொண்ணு வளர வளர அந்தக் கரும்புள்ளி பெரிசாகிட்டே இருந்துச்சு. கூடவே, வலது கன்னத்துல மட்டும் வளர்ச்சியே இல்லை.

பொண்ணுக்கு விநோதமான நோய் ஏதோ இருக்குனு பலரும் காதுபடவே பேச ஆரம்பிச்சாங்க. உள்ளூர்ல சரியான சிகிச்சை கிடைக்கலை. உடனே மகளை சென்னைக்குக் கூட்டிட்டுவந்து வைத்தியம் பார்க்க ஆரம்பிச்சோம். இதனால பலவிதமான சிரமங்கள் ஏற்பட்டதால, ஆவடிக்குக் குடிவந்துட்டோம். பிறகு, எழும்பூர்ல இருக்கிற குழந்தைகளுக்கான கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரியில சில காலம் டானியாவுக்கு வைத்தியம் பார்த்தோம். பலன் கிடைக்காததால, வெவ்வேறு ஆஸ்பத்திரிகளுக்குப் போனோம்.

குழந்தையாக டானியா
குழந்தையாக டானியா

ஒவ்வொரு ஆஸ்பத்திரியிலயும் குழந்தையை செக் பண்ணி பார்த்துட்டு, இங்கிலீஷ்ல ஏதேதோ சொன்னாங்க. நான் பத்தாங்கிளாஸ்தான் படிச்சிருக்கேன். டாக்டர்கள் இங்கிலீஷ்ல சொல்லுறதெல்லாம் எனக்குப் புரியமாட்டேங்குது. ஆனாலும், என் தகுதிக்கு மீறி, சொந்தபந்தங்கள்கிட்ட கடன் வாங்கி பல லட்சம் ரூபாய் செலவு பண்ணிட்டேன். சரியா வேலை செய்ய முடியாம, நானும் என் மனைவியும் குழந்தையைத் தூக்கிட்டு ஆஸ்பத்திரிக்கு நடையா நடந்தோம்" என்பவர், மகளைக் குணப்படுத்திவிட வேண்டும் என்ற பரிதவிப்பில் இன்றுவரை சளைக்காமல் போராடுகிறார்.

``அப்பா, எங்க போனாலும் என்னை விநோதமா பார்க்கிறாங்க. ஸ்கூல்ல யாருமே என் கூட சகஜமா பேசுறதில்லை. விளையாடவும் என்னைச் சேர்த்துக்க மாட்டேங்கிறாங்க. என்னைக் கேவலமா பேசுறாங்க...”னு என் பொண்ணு கண்ணீர் மல்க ஆதங்கத்துடன் சொல்வாள். ஸ்கூல் போகவே சங்கடப்படுறா. அவ வெளியிடங்களுக்குப் போகவே விரும்புறதில்லை. இந்த 9 வயசுல பொண்ணுக்கு இப்படியொரு மனக்குறை ஏற்படலாமா? ஸ்கூல், படிப்பு, சக மனிதர்கள் மேல வர வேண்டிய நம்பிக்கை... இதுக்கான பிடிப்பு, பொண்ணுக்கு எப்படி ஏற்படும்?

சிறுமி டானியா
சிறுமி டானியா

தினந்தோறும் பொண்ணு இப்படிப் புலம்புறதைக் கேட்கிறப்போ, பெத்தவங்களா எங்களுக்கு எவ்ளோ கஷ்டமா இருக்கும்னு நினைச்சுப் பாருங்க. `இப்படியொரு குழந்தையைப் பெத்துப் போட்டிருக்கீங்களே'னு எங்களையும் சிலர் குறையா பேசினாங்க. இதனாலயே, இதுவரைக்கும் எட்டு வீடு மாறிட்டோம். எங்க குடிபோனாலும், பொண்ணுக்கு இருக்கிற பிரச்னையைக் குறிப்பிட்டு அக்கம்பக்கத்தினர் எங்களைக் காயப்படுத்துறாங்க. இப்ப வசிக்கிற வாடகை வீட்டுலயும் இதே பிரச்னைதான்.

நானும் எவ்வளவோ சமாதானம் செஞ்சு பார்த்துட்டேன். ஆனாலும், புறக்கணிப்பும் வேதனையும் தாங்க முடியாம, சில மாசத்துக்கு முன்னாடி என் மனைவியும் பொண்ணும் தற்கொலைக்கு முயற்சி பண்ணிட்டாங்க. விபரீதமா எதுவும் நடந்திடக் கூடாதுனு, சரிவர வேலைக்குப் போகாம, எந்நேரமும் வீட்டுலயே இருந்து மகளையும் மனைவியையும் கவனிச்சுக்கிறேன். எங்க தகுதிக்கும் வயசுக்கும் மீறின கஷ்டத்தைச் சுமந்துகிட்டிருக்கோம்" என்று ரணத்துடன் சொல்பவருக்கு, இரண்டரை வயதில் மகன் இருக்கிறான்.

இது என்ன நோய், இதுக்கான தீர்வு என்னனு எதையுமே இதுவரை டாக்டர்களால கண்டுபிடிக்க முடியலை. போகிற ஆஸ்பத்திரியிலயெல்லாம் மருந்து, மாத்திரைகள் மட்டும் கொடுப்பாங்க. எனக்குப் புரிஞ்ச வரைக்கும் பொண்ணுக்கு முகச்சிதைவுங்கிற பிரச்னை இருக்கு.

குழந்தையாக டானியா
குழந்தையாக டானியா

``இதனால, கரும்புள்ளி அழுத்தமா பரவியிருக்கிற பகுதி முழுக்கவே இருக்கிற செல்கள், சதைப்பகுதியோட வளர்ச்சியை ஒண்ணுமில்லாம ஆக்கிடுமாம். சென்னை, ஸ்டான்லி ஆஸ்பத்திரியிலதான் கடைசியா வைத்தியம் பார்த்தோம். டானியாவுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்யணும்னு டாக்டர்கள் சொன்னாங்க. அதைக் கேட்டதுமே அதிர்ச்சியாகிடுச்சு. எங்களுக்குனு உதவ யாருமில்லை. இக்கட்டான நிலையில அடுத்து என்ன பண்றதுனு தெரியாம தவிப்புல இருந்தோம்.

எங்க கஷ்ட நிலைமை பத்திரிகைகள்லயும் செய்திகள்லயும் வெளியாச்சு. நேத்து கலெக்டர் சார் எங்க வீட்டுக்கு வந்து ஆறுதலா பேசினார். நிலையான வீட்டு வசதி செஞ்சு கொடுத்தா உதவியா இருக்கும்னு கலெக்டர் சார்கிட்ட வேண்டுகோள் விடுத்தோம். உரிய வழிவகை செய்றதா சொன்னார். அவர் ஏற்பாட்டுல இப்போ தனியார் ஆஸ்பத்திரியில டானியாவுக்கு சிகிச்சை கிடைக்க ஏற்பாடுகள் நடக்குது. பொண்ணு முழுமையா குணமாகி எங்களுக்குப் பத்திரமா கிடைக்கணும். தமிழ்நாடு கவர்ன்மென்ட் சப்போர்ட்டுல எங்களுக்கு விடிவுகாலம் பிறக்கும்னு நம்பிக்கையோடு எதிர்பார்க்கிறோம்" என்று தவிப்புடன் முடித்தார்.