Published:Updated:

`தூய்மைப் பணியாளரைக் கடித்த பாம்பு!' - கர்ப்பிணிப் பெண்களை அலறவிடும் தஞ்சை அரசு மருத்துவமனை

மருத்துவமனை
மருத்துவமனை

இரவு நேரம் மட்டுமல்லாது பகல் நேரங்களிலும் பாம்புகள் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருப்பதைப் பார்த்து கர்ப்பிணிப் பெண்கள் அச்சப்பட்டு அலறியுள்ளனர்.

தஞ்சாவூரில் உள்ள அரசு மருத்துவமனை வளாகத்துக்குள் பெண் ஊழியர் ஒருவரை விஷப் பாம்பு கடித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அரசு மருத்துவமனை
அரசு மருத்துவமனை

தஞ்சை ராசா மிராசுதார் அரசு மருத்துவமனை வளாகம் முழுதும் புதர் மண்டிக் கிடப்பதால் பாம்புகள் அதிகரித்துள்ளன. இதனால் ஊழியர்கள் மட்டுமன்றி கர்ப்பிணிப் பெண்கள், குழந்தை பிரசவித்த பெண்கள் மற்றும் மருத்துவமனைக்கு வந்து செல்லும் நூற்றுக்கணக்கானோர் அச்சத்தில் உறைந்துள்ளனர். பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லாத நிலை நிலவுவதாகவும் ஊழியர்கள் புலம்பி வருகின்றனர்.

`கொரோனா நிவாரணப் பொருள்களைக் கொடு..!' - தி.மு.க ஒ.செ மிரட்டலால் ஆடியோவை ரிலீஸ் செய்த அரசு அதிகாரி

நம்மிடம் பேசிய ஊழியர்கள் சிலர், ``இந்த மருத்துவமனையில் மகப்பேறுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்படுவதாலும் சிறந்த சிகிச்சையளிக்கப்படுவதாலும் தஞ்சையைச் சுற்றியுள்ள பல மாவட்டங்களிலிருந்து கர்ப்பிணிப் பெண்கள் பிரசவத்துக்காக இங்கு வருகின்றனர். இந்த வளாகத்துக்குள் எங்கு பார்த்தாலும் புதர்கள் மண்டி காடுகள்போல் காட்சியளிக்கின்றன. அத்துடன் பழைமையான மருத்துவமனை என்பதாலும் பயன்படுத்தப்படாத சில கட்டடங்களும் உள்ளன.

மருத்துவமனை
மருத்துவமனை

இதனால் பாம்புகள் அதிகளவில் காணப்படுகின்றன. இரவு நேரம் மட்டுமல்லாது பகல் நேரங்களிலும் பாம்புகள் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருப்பதைப் பார்த்து கர்ப்பிணிப் பெண்கள் அச்சப்பட்டு அலறியுள்ளனர். ஊழியர்களும் இதுகுறித்து நிர்வாகத்திடம் தொடர்ந்து முறையிட்டு வருகிறோம். ஆனால், புதர்களையும் பாம்புகளையும் அகற்றுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில், நிரந்தரப் பணியாளரான செல்வி (வயது 45) என்பவர் தூய்மைப் பணியாளராக இருந்து வருகிறார்.

ஊரடங்கு அமலில் இருப்பதால் மருத்துவமனையில் உள்ள செவிலியர்களுக்கான குவார்ட்டர்ஸிலேயே தங்கி வேலை பார்த்து வந்தார். சில தினங்களுக்கு முன்பு பணி முடித்துவிட்டு செல்வி அறைக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த பாம்பு ஒன்று அவரைக் கடித்துவிட்டது. இதனால் அலறித்துடித்த அவரை மீட்டு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். பாம்பு கடித்த கால் வீங்கியுள்ள நிலையில் அங்கு அவருக்கு சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது. இந்தச் செய்தியைக் கேட்ட அனைவரும் ஒருவித அச்சத்துடனேயே நடமாடிகொண்டிருக்கிற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

மருத்துவர்கள், செவிலியர்கள் எனப் பலரும் ஒரு கட்டடத்திலிருந்து மற்றொரு கட்டடத்திற்கு இரவுநேரத்தில் செல்லும்போது பாம்பு கடிப்பதற்கான அபாயம் உள்ளது.
ஊழியர்கள்

சில நேரங்களில் பணி செய்துகொண்டிருக்கும் ஊழியர்களின் அறைக்குள்ளேயே பாம்பு புகுந்துவிடுகிறது. இங்கு வரும் பாம்புகள், குழந்தை பிரசவித்த தாய்மார்கள் தங்கியுள்ள வார்டுகளில் புகுந்துவிட்டால் அவர்களின் நிலைமை என்னவாவது. மருத்துவர்கள், செவிலியர்கள் எனப் பலரும் ஒரு கட்டடத்திலிருந்து மற்றொரு கட்டடத்திற்கு இரவுநேரத்தில் செல்லும்போது பாம்பு கடிப்பதற்கான அபாயம் உள்ளது. எனவே, உடனடியாக புதர்களை அகற்றி பாம்புகளைப் பிடிப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்" என்றனர் வேதனையோடு.

பாம்புத் தொல்லை குறித்து மருத்துவமனை நிலைய அலுவலர் உஷா தேவியிடம் பேசினோம். `` புதர்களை அகற்றுமாறு பொதுப்பணிதுறையிடம் கூறியிருக்கிறோம். அவர்களும் விரைவில் அகற்றுவதாகத் தெரிவித்துள்ளனர்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு