Published:Updated:

`கோயம்பேட்டில் நேரடிக் கொள்முதல்; வீட்டுக்கு வீடு உதவி!' - நெகிழவைத்த பட்டுக்கோட்டை தி.மு.க பிரமுகர்

கோயம்பேடு மார்க்கெட்டில் பார்த்திபன்
கோயம்பேடு மார்க்கெட்டில் பார்த்திபன்

எங்க பகுதி விவசாயத் தொழிலாளர்கள் நிறைந்த பகுதி. அவர்களுக்கு உழைப்பைத் தவிர வேறு எதுவும் தெரியாது. மண்ணைப் பற்றிக் கவலைப்படுவார்களே தவிர, தங்கள் வாழ்கையைப் பற்றி ஒருபோதும் கவலைப்பட மாட்டார்கள்.

பட்டுக்கோட்டையில் தி.மு.க பிரமுகர் ஒருவர் தன் சொந்தச் செலவில் ஏழை, எளிய மக்களுக்கு ரூ.8 லட்சம் மதிப்பிலான உதவிகளை அவர்களின் இல்லங்களுக்கே சென்று கொடுத்து வருகிறார்.

உதவி பெறும் மக்கள்
உதவி பெறும் மக்கள்

பட்டுக்கோட்டை கிழக்கு ஒன்றிய தி.மு.க செயலாளராக இருப்பவர் பார்த்திபன். இவர் தன் சொந்தப் பணத்தை வருமானம் இழந்து தவிக்கும் விளிம்பு நிலை குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு உதவும்விதமாக தலா ரூ.500 மதிப்பிலான பொருள்களை ஏழை எளிய மக்களின் வீடுகளுக்கே சென்று வழங்கி வருகிறார். இதற்காக இவரே நேரடியாக சென்னையில் உள்ள கோயம்பேடு மார்க்கெட்டிற்குச் சென்று காய்கறிகளைக் கொள்முதல் செய்து வந்து மக்களிடம் கொடுப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பார்த்திபனிடம் பேசினோம். ``கஜா புயலின்போது தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து பெரும் துயரத்தைச் சந்தித்தது போலவே தற்போது அமலில் இருக்கும் கொரோனா ஊரடங்கால் வேலையில்லாமல் வருமானத்தை இழந்து எளிய மக்கள் தவித்து வருகின்றனர்.

கொரோனா பணியில் தி.மு.க பிரமுகர்
கொரோனா பணியில் தி.மு.க பிரமுகர்

இதுபோன்ற பல துயரங்களை அவர்கள் சந்தித்தே வாழ்க்கை நகர்த்தி வருகின்றனர். அதுபோன்ற நேரங்களில் என்னால் முடிந்த சின்ன உதவிகளைச் செய்து வருகிறேன். தற்போது கொரோனா ஊரடங்கை வீட்டிற்குள்ளே இருந்து அவர்கள் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் வலியுறுத்த நினைத்தேன்.

இதற்காக நானே சென்னையில் உள்ள கோயம்பேடு மார்க்கெட்டிற்குச் சென்று காய்கறிகளைக் கொள்முதல் செய்து லாரியில் எடுத்து வந்தேன். அதேபோல் அடுப்பெரியவே வழியில்லாமல் தவிப்பவர்கள் முகத்துக்கு மாஸ்க் போட்டு கொள்ள முடியாது என்பதால் மாஸ்க், சானிடைஸர் உள்ளிட்டவையும் வாங்கி வந்து நாட்டுச்சாலை, தாமரங்கோட்டை, அணைக்காடு உள்ளிட்ட பல கிராமங்களில் உள்ள அடித்தட்டு மக்களுக்குக் கொடுத்தேன். அப்போது அவர்கள் முகத்தில் சிறிய அளவிலான நிம்மதி தெரிந்ததைப் பார்த்தபோது மனதுக்குப் பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டது.

முகக் கவசம் தரும் பார்த்திபன்
முகக் கவசம் தரும் பார்த்திபன்

இன்று இரண்டாவது லோடு காய்கறி வந்துள்ளது. அதையும் கொடுக்கத் தொடங்கியுள்ளேன். இதற்காக யாரிடமும் நிதி வசூல் செய்யாமல் என் சொந்தப் பணம் சுமார் 8 லட்ச ரூபாயைச் செலவழித்து செய்து வருகிறேன். மக்களின் பாராட்டுக்காக இதைச் செய்யவில்லை. எளிய மக்களின் முகத்தில் தெரியும் மகிழ்ச்சிக்காகவே செய்கிறேன்" என்றார் உற்சாகத்துடன்.

அடுத்த கட்டுரைக்கு