Published:Updated:

புதுக்கோட்டை: ரொம்ப வருஷக் கனவு நிறைவேறிடுச்சு! - அமெரிக்கவாழ் தமிழரால் நெகிழும் குடும்பம்

``புது வீடு கட்டுறது ரொம்ப வருஷக் கனவு, அது இப்போ நிறைவேறிடுச்சு. கனவு நிறைவேறக் காரணமாக இருந்த விகடனையும் கணேசன் தம்பியையும் காலம் உள்ளவரைக்கும் மறக்க மாட்டோம்."

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அழியாநிலையைச் சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி முத்தையா. கஜா புயலால் தன் ஓட்டுவீடு முற்றிலும் சிதைந்த நிலையில், வீடு கவிழ்ந்து விடாமல் இருக்க வீட்டைச் சுற்றிலும் கம்புகள் கொண்டு முட்டுக்கொடுத்திருந்தார். அந்த வீட்டுக்குச் சேலைகள்தான் சுற்றுச்சுவர்கள். எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம் என்ற நிலையிலிருந்த அந்த வீட்டில்தான், தன் மனைவி, பிள்ளைகளுடன் வசித்து வந்தார். இரண்டு வருடங்களைக் கடந்தும் வீட்டின் துரும்பைக்கூட சீரமைக்க முடியாத நிலை. கஜா புயலிலிருந்தே இன்னும் மீள முடியாத முத்தையாவின் குடும்பத்திற்குக் கொரோனா ஊரடங்கால் சாப்பாட்டுக்கே சிரமப்படும் நிலை.

முத்தையா குடும்பம்
முத்தையா குடும்பம்

மழைக்கு ஒழுகும் வீடு, ஒரு நேரச் சாப்பாடு எனத் தவித்துக்கொண்டிருந்த அந்தக் குடும்பத்தின் நிலை குறித்து, விகடன் இணையதளத்தில் கடந்த 9-ம் தேதி கட்டுரை வெளியிட்டு இருந்தோம். கட்டுரையைப் படித்து நெக்குருகிப்போன அமெரிக்கா வாழ் தமிழரான கணேசன், அந்தக் குடும்பத்தைத் தொடர்புகொண்டு புதிய ஓட்டுவீடு கட்டித்தருவதாக வாக்குறுதியளித்தார். வாக்குக் கொடுத்த சில தினங்களிலேயே, தற்போது தன் நண்பர்கள் மூலம் வீடு கட்டும் பணியைத் துவக்கியுள்ளார். அமெரிக்கத் தமிழரின் உதவியால் முத்தையாவின் குடும்பத்தினர் நெகிழ்ச்சியடைந்துள்ளனர்.

புதுக்கோட்டை:`கஜாவிலிருந்தே மீளல; இப்போ கொரோனா!’ - கலங்கும் மாற்றுத்திறனாளி குடும்பம்

உதவியால் நெகிழ்ந்து போய் இருந்த முத்தையாவின் மனைவி அமுதாவிடம் பேசினோம். ``எங்க வீட்டுக்கார தாத்தா காலத்தில கட்டின வீடு. கஜா புயல்ல சுவர் எல்லாம் கொட்டிப்போச்சு. வீட்டுக்காரரும் உடம்பு சரியில்லாம முடங்கிட்டாரு. ரெண்டும் படிக்கிற பிள்ளைக, சீரமைக்க முடியாமலேயே போயிருச்சு. வயசுக்கு வந்த பொம்பள பிள்ளை இருக்கே, சுவர் இல்லாம சும்மா விட முடியாதுங்கிறதுக்காக, என்கிட்ட இருந்த சேலை எல்லாத்தையும் சுத்தி வச்சேன்.

வீடு கட்டும் பணி
வீடு கட்டும் பணி

மழை பெஞ்சா வீடு சொத, சொதன்னு ஆகிடும். தூங்க முடியாது. இடிஞ்சு விழுகாம, கம்பு வச்சு முட்டுகொடுத்து இருக்கோம். வீடு இல்லாம கஷ்டப்பட்டாலும், கூலி வேலைக்குப் போய் ஏதோ நிம்மதியாக 3 வேளை சாப்பிட்டுக்கிட்டு இருந்தோம். கொரோனாவால அதுவும் இப்ப இல்லை. இப்படி எல்லாம் சிரமப்பட்டுக்கிட்டு இருந்த நேரத்துலதான் விகடன்ல கட்டுரை எழுதினீங்க. அதைத் தொடர்ந்துதான் இப்போ எங்களுக்கு தூரத்து தேசத்துல இருக்க கணேசன் தம்பி மூலமா புது வீடு கிடைச்சிருக்கு. வேலை ஆரம்பிச்சாச்சு. அவங்களுக்கு ஒத்தாசையா, நாங்களும் வேலை பார்க்கிறோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வெளியூரில் இருந்து பலரும் எங்களைத் தொடர்புகொண்டு பேசி உதவியிருக்காங்க. புது வீடு கட்டுகிறது ரொம்ப வருஷக் கனவு, ரொம்ப வருஷ கனவு இப்போ நிறைவேறிடுச்சு. கனவு நிறைவேற காரணமாக இருந்த விகடனையும் கணேசன் தம்பியையும் காலம் உள்ளவரைக்கும் மறக்க மாட்டோம்" என்றார் நெகிழ்ச்சியுடன்.

அமெரிக்க வாழ் தமிழரான கணேசனிடம் பேசினோம். ``பட்டுக்கோட்டைதான் சொந்த ஊரு. அமெரிக்கா வந்து 20 வருஷத்துக்கும் மேல ஆகுது. மென்பொறியாளராகப் பணி செஞ்சிக்கிட்டு இருக்கேன். நம்ம ஊர்ல கஷ்டப்படுற மக்களுக்கு என்னால முடிஞ்ச உதவி செய்யணும்.

கணேசன்
கணேசன்

அதுதான் என்னோட ஆசை. நான் விகடனோட தீவிர வாசகர். விகடன் இணையத்தில் புதுக்கோட்டை முத்தையாவின் கதையைப் படிச்சேன். ரொம்பவே மனசுக்கு கஷ்டமா இருந்துச்சு. அவங்க கஷ்டத்தைப் போக்க நம்மால முடிஞ்ச உதவியைச் செய்யணும்னு தோணுச்சு. உடனே, என்னால முடிஞ்ச உதவியை அந்தக் குடும்பத்துக்கு செஞ்சேன். தொடர்ந்து, நம்ம ஊரு மக்களுக்கு நிறைய செய்யணும்" என்றார் உற்சாகத்துடன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு