Published:Updated:

₹1,40,000 கடனுக்காக 5 வருடங்கள் கொத்தடிமையாக்கப்பட்ட குடும்பம்; மீட்டு மறுவாழ்வளித்த சப் கலெக்டர்!

சப் கலெக்டர் பாலச்சந்திரன்
சப் கலெக்டர் பாலச்சந்திரன்

சப்-கலெக்டர் பாலச்சந்திரன் அரசு அலுவலர்களுடன் தோப்புக்குச் சென்று கொத்தடிமைகளாக நடத்தப்பட்ட நான்கு பேரையும் மீட்டார். அப்போதே அவர்களின் கண்களிலிருந்து கண்ணீர் கொட்டியது.

பட்டுக்கோட்டை அருகே ரூ.1,40,000 கடனுக்காக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் கடந்த 5 வருடங்களாகக் கொத்தடிமைகளாக இருந்து வந்தது சப் கலெக்டர் கவனத்துக்கு வந்தது. உடனடியாக அவர்களை மீட்டதுடன் அவர்களுக்கு வாழ்வாதாரத்துக்கான ஏற்பாட்டையும் சப்-கலெக்டர் செய்து கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியுடன் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

கொத்தடிமைகளாக நடத்தப்பட்ட குடும்பம்
கொத்தடிமைகளாக நடத்தப்பட்ட குடும்பம்
`25 வருசமா நான் பட்ட துயரம் அது!' - கொத்தடிமை  முறையை ஒழிக்கப் போராடும் குப்பம்மாள் #SheInspires

பட்டுக்கோட்டை அருகே உள்ள மதுக்கூர் மௌலானாதோப்பைச் சேர்ந்தவர் மெய்யர் (52). இவரின் மனைவி சாந்தா (46). இவர்களின் மகன்கள் வெங்கடேஷ்வரன் (24), கார்த்தி (20). அறந்தாங்கிப் பகுதியைச் சேர்ந்த மெய்யர் பல வருடங்களுக்கு முன்பு மதுக்கூர் பகுதிக்கு குடியேறி வந்து பழைய இரும்புக் கடை நடத்தி வந்தார். அத்திவெட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜதுரை (45). ஃபைனான்ஸ் தொழில் செய்து வருகிறார்.

மெய்யர் தனது இரும்புத் தொழிலை மேம்படுத்துவதற்காக ராஜதுரையிடம் ஆறு வருடங்களுக்கு முன்பு ரூ.2,70,000 கடன் வாங்கியுள்ளார். அதை அவ்வப்போது திருப்பிக் கொடுத்தும் வந்துள்ளார். ஒரு கட்டத்தில் பணம் கொடுக்க முடியவில்லை. அத்துடன் வெளியிலும் கொஞ்சம் கடன் இருந்தது. இதையடுத்து தனக்குச் சொந்தமான இடத்தை விற்று ராஜதுரைக்கு ரூ.3.5 லட்சம் பணம் கொடுத்துள்ளார் மெய்யர். ஆனால், ``அசல், வட்டியுடன் சேர்த்து ரூ.5 லட்சத்துக்கு மேல் தர வேண்டியுள்ளது, இன்னும் ரூ.1,40,000 தர வேண்டும்" என ராஜதுரை கூற, மெய்யர் குடும்பம் அதிர்ச்சியில் உறைந்திருக்கிறது.

அந்தப் பணத்தைக் கட்டமுடியாமல் தவித்த மெய்யர் குடும்பத்தினரை, தனக்குச் சொந்தமான தோப்பில் கொத்தடிமைகளாக ராஜதுரை வேலை செய்ய வைத்துள்ளார். கிட்டத்தட்ட 5 வருடங்களாக அவர்கள் கொத்தடிமைகளாக நடத்தப்பட்டதில் பல்வேறு சித்ரவதைகளை அனுபவித்து வந்துள்ளனர். இது பற்றி பட்டுக்கோட்டை சப் கலெக்டர் பாலச்சந்திரன் கவனத்துக்குச் சென்றது. ரூ.1,40,000 பணத்துக்கு ஒரு குடும்பமே கொத்தடிமையாக நடத்தப்பட்டுள்ளதே என அதிர்ந்து மனம் கலங்கியர், உடனடியாக அதற்கான விசாரணையில் இறங்கினார்.

இதையடுத்து பாலச்சந்திரன் அரசு அலுவலர்களுடன் தோப்புக்குச் சென்று நான்கு பேரையும் மீட்டார். அப்போதே நான்கு பேரின் கண்களிலும் பொலபொலவெனக் கண்ணீர் கொட்டியது. ``எங்க தலையெழுத்து இதுதான், வாழ்நாள் முழுக்க இங்கேயே கெடந்து சாக வேண்டியதுதான்னு நினைச்சு, ஒவ்வொரு நாளையும் நரகமா கடந்தோம். எங்கள அதுலயிருந்து மீட்டுட்டீங்க சார். இத ஆயுசுக்கும் மறக்க மாட்டோம்'' எனப் பாலச்சந்திரனுக்கு உணர்ச்சிப் பெருக்கெடுக்க நன்றி கூறி நெகிழ்ந்தனர்.

கைது செய்யப்பட்ட ராஜதுரை
கைது செய்யப்பட்ட ராஜதுரை

மெய்யர் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரையும் கொத்தடிமைகளாக நடத்தி வந்த ராஜதுரையை போலீஸார் கைது செய்தனர். இது குறித்து சிலரிடம் பேசினோம். ``ராஜாதுரை ஃபைனான்ஸ் தொழில் செய்வதால் அடாவடியாகவே நடந்து கொள்வார். வாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுத்தும் இன்னும் ரூ.1,40,000 பாக்கி இருப்பதாக ராஜதுரை சொன்னதும், அவரை எதிர்க்க தைரியம் இல்லாமல் மெய்யரும் அவர் குடும்பமும் அவர் சொல்வதைக் கேட்கத் தொடங்கினர். ஒரு கட்டத்தில் அவர்களைக் கொத்தடிமைகளாக நடத்தி தன் தோப்பில் உள்ள அனைத்து வேலைகளையும் செய்ய வைத்தார் ராஜதுரை. ஒரு ஆளுக்கு ஒரு நாளைக்கு ரூ. 50 கூலி கொடுத்து அவர்களின் உழைப்பைச் சுரண்டினார்.

உட்காரக்கூட நேரமில்லாமல் அந்தக் குடும்பமே உழைத்து களைத்துப் போனது. கஷ்டத்தைத் தாங்க முடியாமல் பல தடவை அங்கிருந்து தப்பிக்கவும் முயன்று, முடியாமல் முடங்கிவிட்டனர். இப்படியே ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும், கடன் தொகை குறையவில்லை என ராஜாதுரை அவர்களின் ரத்தத்தை உறிஞ்சி வந்தார். இந்நிலையில் அவர்களின் துயரங்கள் சப் கலெக்டர் கவனத்துக்குச் சென்றது.

சப்கலெக்டருடன் மீட்கப்பட்ட குடும்பத்தினர்
சப்கலெக்டருடன் மீட்கப்பட்ட குடும்பத்தினர்

மெய்யர் குடும்பத்துக்கு அரங்கேற்றப்பட்ட கொடுமையைக் கண்ட சப் கலெக்டர், உடனடியாக அவர்களை மீட்டார். இதற்குக் காரணமான ராஜதுரையும் கைது செய்யப்பட்டார். தற்போது மீட்கப்பட்ட நான்கு பேரும் தஞ்சாவூரில் உறவினர்கள் வீட்டில் இருக்கின்றனர். முதற்கட்டமாக அவர்கள் நான்கு பேருக்கும் தலா ரூ. 20,000 என மொத்தம் ரூ. 80,000 தரப்படவுள்ளது. அதற்கு அடுத்த கட்டமாக அந்தக் குடும்பத்தினரின் வாழ்வாதாரத்துக்கான நிவாரணமாக சுமார் ரூ.5 லட்சம் தருவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்.

மீட்டது மட்டுமல்லாமல், வாழ்வாதாரத்துக்கும் ஏற்பாடு செய்த சப் கலெக்டர் பாலச்சந்திரன் செயலால் அந்தக் குடும்பம் நெகிழ்ந்தது; அவரது அலுவலகத்தில் அந்தக் குடும்பமே அவருக்குக் கண்ணீரால் நன்றி தெரிவித்தபோது அலுவலகத்தில் இருந்த மற்ற அலுவலர்களும் ஆனந்தக் கண்ணீர் வடித்தனர்'' என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு