Published:Updated:

தாயின் இறுதிச் சடங்கிற்கு வாங்கிய கடன், கந்து வட்டி நெருக்கடி; விவசாயக்கூலித் தொழிலாளி தற்கொலை!

காவல் நிலையம்
காவல் நிலையம்

பணம் கடன் வாங்கி ஒரு மாதம் ஆகிறது, பணம் கொடுத்தவர்கள் வட்டியுடன் சேர்த்து ரூ 21,000 தர வேண்டும் என நெருக்கடி கொடுத்ததால் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

பட்டுக்கோட்டை அருகே தாயின் இறுதிச் சடங்கிற்காக வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாததால் கந்துவட்டி கும்பல் கொடுத்த நெருக்கடியில் மனமுடைந்த விவசாயக் கூலித் தொழிலாளி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியிருக்கிறது. அவரின் மனைவி மற்றும் இரண்டு மகள்கள் வாழ்வாதாரத்திற்கு வழியில்லாமல் தவித்து நிற்பது வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

மகள்களுடன் சுமதி
மகள்களுடன் சுமதி

பட்டுக்கோட்டை, மதுக்கூர் அருகே உள்ள பெரியக்கோட்டை வெட்டிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. விவசாயப் பணிகளுக்கு டிராக்டர் ஓட்டும் கூலி வேலை செய்து வருகிறார். இவரின் மனைவி சுமதி. இவர்களுக்கு மகாலெட்சுமி (வயது 8), தனலட்சுமி (வயது 7) என இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் சுப்பிரமணியன் தனது குடும்பச் செலவிற்காக அதே பகுதியைச் சேர்ந்தவர்களிடம் கந்து வட்டிக்குப் பணம் வாங்கியிருக்கிறார்.

ஒரு மாதம் கடந்த நிலையில் வட்டியுடன் பணத்தைக் கேட்டு டார்ச்சர் செய்ததால் மனம் உடைந்த சுப்பிரமணியன் தற்கொலை செய்து கொண்டார். அவரின் மனைவி சுமதி தன் இரண்டு மகள்களுடன் வாழ்வாதாரத்திற்கு வழியில்லாமல் தவித்து நிற்கிறார். மேலும், தன் கணவர் மரணத்துக்குத் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுக்கூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்திருக்கிறார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

விவசாயக் கூலி சுப்பிரமணி, மனைவி சுமதியுடன்
விவசாயக் கூலி சுப்பிரமணி, மனைவி சுமதியுடன்

இது குறித்து சுமதி கூறும்போது, ``என் கணவர், அவரின் அம்மா இறந்த இறுதிச் சடங்குச் செலவிற்கு பணம் இல்லாததால் எங்கள் பகுதியைச் சேர்ந்த குண்டுமணி, பூமிநாதன், வளர்மதி ஆகியோரிடம் கந்து வட்டிக்கு ரூ. 10,000 கடன் வாங்கியிருந்தார். நான் ரூ 2,000-தான் வாங்கச் சொன்னேன். ஆனால், அவர்கள் 10,000 கொடுத்ததாகக் கூறுகின்றனர்.

கடன் வாங்கி ஒரு மாதம் ஆன நிலையில், பணம் கொடுத்தவர்கள் வட்டியுடன் சேர்த்து ரூ 21,000 தர வேண்டும் என என் கணவரிடம் கேட்டுள்ளனர். அதற்கு அவர், அம்மா இறந்திருக்கிறார், கொரோனா லாக்டெளனால் வேலைக்கும் செல்லவில்லை எனக் கூறியிருக்கிறார். ஆனாலும் அவர்கள் பணம் கேட்டு தொந்தரவு செய்ததுடன் தகாத வார்த்தைகளால் பேசினர்.

காவல் நிலையம்
காவல் நிலையம்

இதனால் மனமுடைந்த என் கணவர் தற்கொலை செய்து கொண்டார். மகள்கள் மேல் உயிரையே வைத்திருப்பார். அவர்களைக் கூட நினைத்துப் பார்க்காமல், அவமானம் தாங்காமல் உயிரை விட்டுவிட்டார். இப்போது என் மகள்களோடு நான் செய்வதறியாது தவித்து நிற்கிறேன். என் கணவர் சாவிற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸில் புகார் கொடுத்திருக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார். இது குறித்து போலீஸ் விசாரணை செய்து வருகின்றனர்.

தற்கொலை எண்ணம் எழுந்தால் தமிழக அரசின் 104 என்ற 24 மணி நேர சேவை எண்ணுக்கு அழைக்கலாம். இந்த இலவச தொலைபேசி சேவையில் உங்களின் மனநலக் குழப்பங்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்கப்படும்.
அடுத்த கட்டுரைக்கு