Published:Updated:

பட்டுக்கோட்டை சாமியாரை அடித்து நிர்வாணமாக ஓடவிட்ட சிங்கப்பூர் `ஹல்க்' சாமியார்! - என்ன நடந்தது?

பட்டுக்கோட்டை சாமியார் - சிங்கப்பூர் சாமியார்

பட்டுக்கோட்டை சாமியார் சிங்கப்பூருக்குச் சென்றபோது அங்கிருந்த ஹல்க் சாமியார் ஒருவர் அவரை அடித்து நிர்வாணமாக விரட்டினார்.

பட்டுக்கோட்டை சாமியாரை அடித்து நிர்வாணமாக ஓடவிட்ட சிங்கப்பூர் `ஹல்க்' சாமியார்! - என்ன நடந்தது?

பட்டுக்கோட்டை சாமியார் சிங்கப்பூருக்குச் சென்றபோது அங்கிருந்த ஹல்க் சாமியார் ஒருவர் அவரை அடித்து நிர்வாணமாக விரட்டினார்.

Published:Updated:
பட்டுக்கோட்டை சாமியார் - சிங்கப்பூர் சாமியார்

பட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பிரபல சாமியார் ருத்ரசித்தர். இவர் உடல்நிலை சரியில்லாத ஒருவரை குணப்படுத்துவதற்காக சிங்கப்பூருக்குச் சென்றபோது அங்கிருந்த ஹல்க் சாமியார் ஒருவர் பட்டுக்கோட்டை சாமியாரை அடித்து நிர்வாணமாக விரட்டினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

சிங்கப்பூர் சாமியாரிடம் சிக்கிய பட்டுக்கோட்டை சாமியார்
சிங்கப்பூர் சாமியாரிடம் சிக்கிய பட்டுக்கோட்டை சாமியார்

அந்த வைரல் வீடியோவில், பட்டுக்கோட்டை சாமியார், சிங்கப்பூரில் ஒரு வீட்டுக்குள் சென்றதும் `யாரை குணப்படுத்தணும்' எனக் கேட்கும்போதே ஒருவர் கதவைச் சாத்துகிறார். நாற்காலியில் உட்கார்ந்திருந்த ஹல்க் சாமியார் ஒருவர், பட்டுக்கோட்டை சாமியாரின் கழுத்தில் கிடந்த துண்டைப் பிடித்து இழுத்து இறுக்கி, `ரெண்டு பேரும் திருட்டு வேலை செய்றீங்களா... இங்க உட்காருடா' என எதிரே உட்கார வைக்கிறார். பின்னர், `உங்க அப்பன் மவனே... சாமிக்கு சக்தி ஏத்துறியா?' என அடிக்குரலில் கேட்டு, `என் கண்ணைப் பாருடா' என்று கண்களைப் பெரிதாக்கி உருட்டுகிறார்.

`ஊரை ஏமாத்துறதுக்கு வந்தியா... என் பிடியிலருந்து தப்ப முடியாது, போலீஸ் வரப்போகுது' என்பவரிடம், வுடுய்யா உட்டுட்டு பேசு... நான் ஓட மாட்டேன்' என்கிறார் பட்டுக்கோட்டை சாமியார். பின்னர் `உனக்கு என்ன வேணும்?’ என இருவரும் மாறி மாறிக் கேட்கின்றனர். இதற்கிடையில் பட்டுக்கோட்டை சாமியாரோடு சென்ற பெண் கதவைத் திறக்க, `இதுக்குத்தான் என்னை வரச் சொன்னியா?' எனக் கேட்டு சத்தமிட்டவாறே வெளியே தப்பித்துச் சென்றவரின் வேட்டியை சிங்கப்பூர் சாமி உருவிவிடுகிறார்.

ருத்ர சித்தர் பட்டுக்கோட்டை சாமியார்
ருத்ர சித்தர் பட்டுக்கோட்டை சாமியார்

அதனால் நிர்வாண கோலத்துக்கு மாறிய பட்டுக்கோட்டை சாமியார், அந்த சிங்கப்பூர் சாமியாரைத் தகாத வார்த்தைகளால் திட்டியபடியே காரில் ஏறி தப்பிச் செல்கிறார். இது தொடர்பான வீடியோ கடந்த வாரம் வைரலானது.

ஆன்மிக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்தச் சம்பவம் குறித்து விசாரித்தோம். ``ருத்ர சித்தர் சாமியாரோட சொந்த ஊர் பட்டுக்கோட்டை அருகேயுள்ள பொன்னவராயன் கோட்டை. அவரோட நிஜப் பேரு ராஜ்குமார். காமாட்சி தேவி என்ற மனைவியும், இரண்டு மகன்கள், ஒரு மகளும் இருக்கின்றனர். ஆரம்பத்துல ஊராட்சியில கிளார்க் வேலை பார்த்தார். பணத்தைக் கையாடல் செய்து சிக்கிக்கொண்டதால் பணியிலிருந்து நீக்கப்பட்டார். அதற்கான கிரிமினல் வழக்கு இப்போதும் நிலுவையில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

அக்னி குண்டத்தில் சாமியார்
அக்னி குண்டத்தில் சாமியார்

கருத்து வேறுபாட்டால் மனைவியைப் பிரிந்தவர், பிழைப்புக்காக ஆட்டோ ஓட்டினார். பின்னர் மன்னார்குடி சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமி கோயிலிலிருந்த ராஜசேகர் என்ற நிர்வாண சாமியாரோட நட்பு கிடைக்க, அவருக்குச் சீடாரானார். அந்த சமயத்துல கோயிலுக்கு வந்த சசிகலாவின் தம்பி திவாகரனை நிர்வாண சாமி சாபம்விட்டுத் திட்டியதில் ஃபேமஸானார்.

சாமியாருக்குக் கிடைக்குற பேரு, புகழ், மரியாதையைப் பார்த்த ராஜ்குமார் தானும் ஒரு சாமியாராகணும் என்ற ஆசையில நிர்வாண சாமியாரை பட்டுக்கோட்டைக்கு அழைத்து வந்தார். கார்காவயல் கிராமத்திலுள்ள காட்டாறான அக்னியாறு ஓரத்தில் பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் இடத்தை ஆக்கிரமித்து குடிசை போட்டார். அதில் நிர்வாண சாமியாருடன் தங்கியிருந்தார். அவர்கிட்ட சாமியாருக்கான சித்து வேலைகளைக் கற்றுக் கைதேர்ந்தார். சில வருடங்கள் அங்கிருந்த நிர்வாண சாமியார் இப்ப எங்கே இருக்கிறார் என்றே தெரியலை.

பட்டுக்கோட்டை சாமியார்
பட்டுக்கோட்டை சாமியார்

பின்னர் ராஜ்குமார், `ஞான சித்தர் பீடம்’ என்ற அறக்கட்டளையைத் தொடங்கி அந்த இடத்தில் கோயில் கட்டியதுடன், தன்னை `ருத்ர சித்தர்’ எனக் கூறிக்கொண்டு மக்களுக்கு அருளாசி வழங்கத் தொடங்கினார். திருமணத் தடை, குழந்தை பாக்கியம், தீராத நோய்கள், கடன் பிரச்னை போன்றவற்றைத் தீர்த்துவைப்பதாகக் கூறினார். பெண்கள்கிட்ட பணம் கொடுத்து, தன் புகழை ஊரெங்கும் பரப்பினார். உள்ளூர் மட்டுமின்றி சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளிலும் சாமியாரின் புகழ் பரவியது.

பொதுப்பணித்துறை இடத்தை ஆக்கிரமித்தது தொடர்பாக சாமியார்மீது தொடரப்பட்ட வழக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நிலுவையில் இருக்கிறது. தன்னோட சக்தியால அந்த வழக்கைப் பிசுபிசுக்கச் செய்துவிட்டதாகக் கூறுகிறார். தன்னிடம் அருளாசி வாங்க வர்றவங்ககிட்ட நியூஸ் பேப்பரைத் துண்டாகக் கிழித்துக் கொடுப்பார். என்ன பிரச்னைக்கு சாமியைத் தேடிப் போயிருக்காங்களோ அது அந்த பேப்பர்ல இருக்கும். நாம மனசுக்குள்ள நினைச்சதை சாமி பேப்பர்ல கொடுக்குறாரேனு பக்தர்கள் பரவசமடைவார்கள்.

சாமியார்
சாமியார்

கடன் முதல் சிறுநீரகப் பிரச்னை வரை கைவைத்து அருளாசி வழங்கினால் அவை தீர்ந்துடும் என சாமியாருடன் இருப்பவர்கள் சொல்கின்றனர். சாமியோட கை நம்ம மேல படாதானு தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் ருத்ர சித்தரைத் தேடிவருகின்றனர். கே.என்.நேரு, பொன்.ராதாகிருஷ்ணன், ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட பல அரசியல் பிரபலங்கள் ராஜ்குமார்கிட்ட ஆசி வாங்கியிருக்கின்றனர்.

வெளிமாநில அரசியல் தலைவர்களும் ஆசி வாங்குறதுக்கு வர்றாங்க. வெளிநாட்டினரும் வர்றாங்க. ஆக்கிரமிப்பு இடத்துல இருக்குறது என்னைக்காவது பிரச்னை ஏற்படும் என்பதால் அந்தப் பகுதியில் சுமார் பத்து ஏக்கர்ல சொந்தமாக நிலம் வாங்கியிருக்கிறார். சிவக்கொல்லை, நைனாங்குளம் பகுதிகளிலும் நிலம் வாங்கிப்போட்டிருக்கார்.

அக்னிகுண்டத்தில் இறங்கும் சாமியார்
அக்னிகுண்டத்தில் இறங்கும் சாமியார்

தன் மனைவியின் ஊரான அணைக்கட்டில் நவீன வசதிகளுடன் பங்களா கட்டியிருக்கிறார். பிரபல துணிக்கடை உரிமையாளர் ஒருவர் கஷ்டத்தோடு சாமியார்கிட்ட வந்திருக்கிறார். அதன் பிறகு அந்தப் பிரச்னை தீர்ந்துவிட, துணிக்கடை அதிபர் சாமியாரை தொடர்ந்து ஏகமாக கவனித்துவருகிறார். சில வருடங்களுக்கு முன்பு தன் மகள் திருமணத்தை சாமியார் விமர்சையாக நடத்தினார். பல முக்கியஸ்தர்கள் அதற்கு உதவியதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில சிங்கப்பூருக்குச் சென்ற ருத்ர சித்தர் அங்குள்ள சாமியார்கிட்ட செம அடி வாங்கினார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. `கெட்ட சக்தி என்னைப் போக விடாம தடுத்துச்சு, அதையும் மீறிப் போனதால இப்படி நடந்துவிட்டது' என்கிறார்.

சாமியார் ராஜ்குமார்
சாமியார் ராஜ்குமார்

பட்டுக்கோட்டைக்கு வந்ததும், அடி வாங்கியதை மறைக்க ஊரெங்கும் ஃப்ளெக்ஸ் வைத்து தன் பிறந்தநாளை ருத்ர சித்தர் பெருவிழாவாகக் கொண்டாடினார். கிராம கோயில் பூசாரிகள் மாநாடு நடத்தி நலத்திட்ட உதவிகள் வழங்கினார். மஹாளய அமாவாசை தினத்தன்று அக்னிகுண்டத்தில் இறங்கினார். பெரிய தொட்டிக்கு நடுவில் தீ எரிந்துகொண்டிருந்தது. சாமியாடியபடியே தொட்டிக்குள் இறங்கியவர், நெருப்புக்குள் காலை வைக்காமல் ஓரத்திலேயே நின்று கையைத் தூக்கி சில நிமிடங்கள் ஆடினார். உடனே சீடர்கள் அவர் கைபிடித்து வெளியே தூக்கிவிட்டனர்.

சிங்கப்பூர் ஹல்க் சாமியார் பிடியில் பட்டுக்கோட்டை ருத்ர சித்தர்
சிங்கப்பூர் ஹல்க் சாமியார் பிடியில் பட்டுக்கோட்டை ருத்ர சித்தர்

சிங்கப்பூர் சாமியாருக்கும், இவருக்கும் இடையே பெரிய அளவில் ஏதோ பிரச்னை இருக்கு. அதனாலேயே அழைத்துச் சென்று அடித்திருக்கிறார்" என்றனர்.

சாமியாரிடம் பேசுவதற்காக அவர் மகன் சுரேந்தரைத் தொடர்புகொண்டோம். ``நிர்வாகத் தரப்பில் உள்ளவரை பேசச் சொல்கிறேன்" என்றார். அதையடுத்து, சாமியார் சார்பாக தமிழ் என்பவர் நம்மிடம் பேசினார். ``சிங்கப்பூர் சாமியாரான அபு, கேங்க்ஸ்டர் குரூப்பில் உள்ள அடியாட்களை வைத்துக்கொண்டு பில்லி, சூனியம் வைத்து ஏவல் வேலை செய்து கெட்ட வழியில் பணம் சம்பாதிக்கிறார்.

பட்டுக்கோட்டை சாமியார்
பட்டுக்கோட்டை சாமியார்

எங்க ருத்ர சித்தர், யார் மேல கைவெச்சாலும் அவங்க பிரச்னை தீர்ந்துடும். இதை அறிந்தவர்கள் சாமி சிங்கப்பூர் போறப்பல்லாம் ஆசி வாங்க வருவாங்க. இதை ஏற்றுக்கொள்ள முடியாத சிங்கப்பூர் சாமி, யாருக்கோ உடம்பு சரியில்லை. நீங்க வந்து கைவெச்சா சரியாகிடும் என ஒருவர் மூலமாக அழைத்திருக்கிறார். அதை நம்பிப் போறப்ப இப்படி ஆகிவிட்டது. ருத்ர சித்தரின் வளர்ச்சியைப் பிடிக்காம இப்படிச் செய்திருக்கின்றனர். சிங்கப்பூர்ல சாமி நிர்வாணமாகப் போனதை அவமானமாகக் கருதவில்லை. தன் குருநாதருடன் கார்காவயலில் இருந்தபோது எப்பவும் நிர்வாணமாகத்தான் இருப்பாரு.

பெண் பக்தர்கள் நிறைய பேர் வரத் தொடங்கியதால காவி வேட்டி கட்டிக்க ஆரம்பித்தார். சிங்கப்பூர் சாமி மேல புகார் கொடுத்திருக்கோம். அவர் மேலே நிறைய புகார்கள் இருப்பதாக சிங்கப்பூர் போலீஸில் கூறுகின்றனர்" என்றார்.