Published:Updated:

இரண்டு மகன்கள், மகள்கள் இருந்தும் தவிக்கவிடப்பட்ட தாய்!- 95 வயது மூதாட்டியால் கலங்கிய ஊர்மக்கள்

மகன்கள் இருவரும் அவரை உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால் சிவகுருநாதன் வலுக்கட்டாயமாக ஒரு மகன் வீட்டில் மாமியாரை வைத்துவிட்டுச் சென்றுவிட்டார்.

மகன்கள் விட்டுச்சென்ற  பட்டம்மாள்
மகன்கள் விட்டுச்சென்ற பட்டம்மாள்

ஜெயங்கொண்டம் அருகே 95 வயதுத் தாயை வீட்டில் சேர்க்காமல் வெயில், பனியில் என ஒருநாள் முழுவதும் வீதியில் படுக்க வைத்துள்ளனர் பெற்ற மகன்கள். இரவு முழுவதும் அவர்பட்ட கஷ்டங்களைப் பார்த்து தாங்க முடியாமல் ஊர்மக்களே அந்த மூதாட்டியை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களின் மனதில் ரண வலியை ஏற்படுத்தியிருக்கிறது.

பட்டம்மாள் மகனின் வீடு
பட்டம்மாள் மகனின் வீடு

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள செங்குந்தபுரம் கம்பர் தெருவைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவர் சில வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார். இவரின் மனைவி பட்டம்மாள். 95 வயதுடைய முதியவர். இவருக்கு இரண்டு மகன், இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகன் சண்முகம் (65), கடை நடத்தி வருகிறார். 2 வது மகன் சதாசிவம் (59) ஓய்வுபெற்ற ஆசிரியர். மகள்கள் சரோஜா, சகுந்தலா. பட்டம்மாள் பல வருடங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துவந்தார்.

`அம்மா அப்பா... பொய் சொன்னது போதும்..!’ - இதயங்களை வென்ற 9 வயதுச் சிறுமியின் கடிதம்

மகன்கள் இருவரும் இவரை வீட்டில் சேர்க்காததால் சில வருடங்களுக்கு முன்பு வரதராஜன் பேட்டையில் உள்ள ஒரு விடுதியில் இவரை ஒருவர் சேர்த்துள்ளார். பின்னர் அங்கிருந்து வந்தபின் வடலூர் சபையில் உள்ள விடுதியில் தங்கி வந்தார். மகன்களைப் பார்க்க வேண்டும் என வீட்டுக்கு வந்தபின் பட்டம்மாளை, மகன்கள் ஏற்காததால் மகள் சகுந்தலா வீட்டுக்குச் சென்றுள்ளார்.

பட்டம்மாள்
பட்டம்மாள்

சகுந்தலாவுக்கு இரண்டு கிட்னியும் சரிவர இயங்காது. உடல் நிலை சரியில்லாததால் அவரின் கணவர் சிவகுருநாதன், மாமியார் பட்டம்மாளை செங்குந்தபுரத்தில் உள்ள இரண்டு மகன்கள் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். அப்போது மகன்கள் இருவரும் அவரை உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால் சிவகுருநாதன் வலுக்கட்டாயமாக ஒரு மகன் வீட்டில் மாமியாரை வைத்துவிட்டு சென்றுவிட்டார். ஆனால், சில மணி நேரத்திலேயே மகன்கள் இரண்டு பேரும் மாற்றி மாற்றி தாயை வைத்துள்ளனர். நேற்று மாலை 3 மணி அளவில் வீட்டின் வெளியில் தாயைக் கிடத்திவிட்டுச் சென்றுவிட்டனர்.

நேற்று முழுவதும் வெயிலில் கிடந்து உடல்நிலை சரியில்லாமல் மயங்கிக் கிடந்திருக்கிறார் பட்டம்மாள். இதைப் பார்த்த சமூக ஆர்வலர் ஒருவர், அவரை இரவில் ஆட்டோவில் அரசு மருத்துவமனையில் அழைத்துச் சென்றார். அப்போது, உதவியாளர் யாரும் இல்லாததால் அனுமதிக்க முடியாது என மருத்துவமனை ஊழியர்கள் கூறியதால் மீண்டும் ஆட்டோவில் அழைத்துச் சென்று மகன்கள் வீட்டில் விட்டுச் சென்றுவிட்டார். இரவு முழுவதும் பட்டம்மாள் பனியிலேயே கிடந்ததால், அவரது உடல்நிலை மிகவும் மோசமானது. அதிகாலையில் இவரைப் பார்த்த பொதுமக்கள் அனைவரும் ஒன்று கூடி இரண்டு மகன்களையும் ஊர் பஞ்சாயத்தார் அழைத்துப் பேசியுள்ளனர்.

பட்டம்மாள் கிடந்த தெரு
பட்டம்மாள் கிடந்த தெரு

மகன்கள் இருவரும் தாயை வீட்டுக்குள் சேர்க்க மறுத்ததால் 108 ஆம்புலன்சுக்கு ஊர்மக்கள் தகவல் கொடுத்தனர். இதையடுத்து பட்டமாள் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து இவர்கள் மீது காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார்கள். காவலர்களும் இவர்களை அழைத்து விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள். பெற்றத் தாயை தெருவில் மகன்கள் போட்டுவிட்டுச் சென்ற சம்பவம் ஜெயங்கொண்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.