Published:Updated:

``எங்களை மீட்க ஒரு வழி செய்யுங்க!"- வெள்ளத்தின் பிடியில் சிக்கித் தவிக்கும் அன்னை தெரசா நகர்வாசிகள்

அன்னை தெரசா நகர்
News
அன்னை தெரசா நகர்

தண்ணீர் தேங்கி நிற்பதால், குண்டும் குழியுமான சாலைகளில், பள்ளங்கள் எங்கிருக்கின்றன எனத் தெரியாமல் வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடனேயே தங்கள் இரு சக்கர வாகனங்களை ஓட்டிவந்தனர்.

சென்னையில் கடந்த சில தினங்களாகப் பெய்துவரும் கனமழையின் காரணமாக, வெள்ளநீரில் தத்தளித்துக்கொண்டிருக்கும் பல பகுதிகளில் புழுதிவாக்கமும் ஒன்று. வேளச்சேரியை அடுத்து புழுதிவாக்கத்தின், ராம் நகர், அன்னை தெரசா நகர் உள்ளிட்ட பகுதிகளில் 3 - 4 அடி வரை வெள்ளநீர் வடியாமல் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

அண்ணா தெரசா நகரில் மழை பாதிப்புகள் குறித்து நம்மிடம் பகிர்ந்துகொண்டார் அந்த பகுதியைச் சேர்ந்த கலாவதி. ``நான் மூணு வருஷமா இங்கே இருக்கேன். கொஞ்சம் அதிகமா மழை பெஞ்சாலே இங்கே தண்ணி தேங்கிடும். எல்லா வருஷமும் இந்த ரெண்டு மாசம் ரொம்பவே கஷ்டமாத்தான் இருக்கும். யாரும் எங்களை வந்து பார்வையிடக்கூட இல்லை. பாம்பு , பூரான் எல்லாம் வந்துருது. அதனால வீட்டுல தண்ணி வர்றப்போ, நான் வேலை பார்க்குற கடையிலேயே தங்கிருவேன். மழையால கூரையில் விரிசல் ஏற்பட்டு , தண்ணீர் ஒழுகிட்டே இருக்கு. தரையில் தண்ணீர் தேங்கத் தேங்க நான் துணியில பிழிஞ்சு எடுத்துக்கிட்டே இருப்பேன்" என்றார். கலாவதி நம்மிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே, அவர் வீட்டு சமையலறையில் பூரானும் நத்தையும் நம் கண்களில் தென்பட்டன.

அன்னை தெரசா நகர் சாலை
அன்னை தெரசா நகர் சாலை

தொடர்ந்து பேசிய அவர், ``நான் இங்கே தனியா இருக்கேன். எப்போ என்ன நடக்குமோன்னு பயமா இருக்கு. எங்களுக்கு ஒரு வழி செஞ்சு கொடுத்தா ரொம்ப நிம்மதியா இருக்கும்" என்றார் அழையா விருந்தாளிகளாக அவர் வீட்டுக்குள் நுழைந்துவிடும் விஷ ஜந்துக்கள் குறித்த அச்சத்தில்.

கலாவதியிடம் பேசிவிட்டு, அன்னை தெரசா நகர் சாலையைக் கடந்தபோது, தெருக்கள் அனைத்துமே குளம்போல் காட்சியளித்தன. தண்ணீர் தேங்கி நிற்பதால், குண்டும் குழியுமான சாலைகளில், பள்ளங்கள் எங்கிருக்கின்றன எனத் தெரியாமல் வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடனேயே தங்கள் இரு சக்கர வாகனங்களை ஓட்டிவந்தனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அன்னை தெரசா நகரை வெள்ளநீர் முழுமையாக ஆக்கிரமித்திருக்கிறது என்றாலும், குறிப்பாக 4-வது குறுக்குத்தெரு மிகவும் மோசமான நிலையில் காட்சியளித்தது. அங்கிருக்கும் குடிசைகளுக்குள் கழிவுநீருடன் கலந்த மழைநீர் புகுந்திருக்கிறது. அதனால், அந்தப் பகுதியில் கடும் சுகாதாரச் சீர்கேடு நிலவிக்கொண்டிருக்கிறது. அந்தப் பகுதி மக்கள், தங்களுக்கு எந்த நிவாரணமும் வழங்கவில்லையென்றும், தங்கள் பகுதியைப் பார்வையிடக்கூட அதிகாரிகள் யாரும் வரவில்லை என்றும் நம்மிடம் குற்றம்சாட்டினார்கள்.

அன்னை தெரசா நகர் மக்கள்
அன்னை தெரசா நகர் மக்கள்

சென்னையின் பிற பகுதிகளுக்குக் கிடைக்கும் கவனிப்பும் நிவாரணமும், அன்னை தெரசா நகர்வாசிகளுக்குக் கிடைப்பதில்லை என்பதே அங்கிருப்பவர்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது. இது தொடர்பாக, 169-வது வார்டு உள்ளடக்கிய பெருங்குடி மண்டலத்தின் மாநகராட்சி உதவிப் பொறியாளர் பாலாஜியிடம் பேசினோம். ``அன்னை தெரசா நகரைப் பொறுத்தவரை, சித்தேரி அருகிலிருப்பதால், அங்கிருந்து திறந்துவிடப்பட்ட நீர்தான் தெருக்களைச் சூழ்ந்திருக்கிறது . தேங்கியிருக்கும் தண்ணீர் மெதுவாகத்தான் வடியும். இடைவிடாமல் மழைபெய்வதால், நீர் வடியாமல் தேங்கியிருக்கிறது. முடிந்தவரை விரைவாக நீரை வெளியேற்ற மாநகராட்சி செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அடிக்கடி எங்கள் பணியாளர்களும், தெருக்களைக் கண்காணித்துக்கொண்டேதான் இருக்கிறார்கள். இது தவிர, அன்னை தெரசா நகரைவிட மோசமான நிலையிலிருக்கும் ராம் நகர் போன்ற பகுதிகளையும் கூடுதலாக கவனித்துவருகிறோம். கூடிய விரைவில் தண்ணீர் வடிந்துவிடும்" என்றார்.

- கார்த்திகா ஹரிஹரன்

(மாணவப் பத்திரிகையாளர்)