Published:Updated:

`மேகமலை சாலை வளைவுகளுக்கு தமிழ் மலர்கள் பெயர்!’ - நெடுஞ்சாலைத்துறைக்கு குவியும் பாராட்டுகள்

மேகமலை கொண்டை ஊசி வளைவு
மேகமலை கொண்டை ஊசி வளைவு

நெடுஞ்சாலைத்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள போர்டுகளில், தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடும் மலர்களின் பெயர்களை எழுதிவைத்துள்ளனர்.

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ளது மேகமலை. சுற்றுலாத் தளமான மேகமலைக்கு, வார இறுதி நாள்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். சாலை ஓரங்களில், நெடுஞ்சாலைத்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள போர்டுகளில், தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடும் மலர்களின் பெயர்களை எழுதிவைத்துள்ளனர்.

மேகமலை கொண்டை ஊசி வளைவு
மேகமலை கொண்டை ஊசி வளைவு

மேகமலை அடிவாரமான தென்பழனியிலிருந்து 34 கிலோமீட்டர் மலைப்பாதையில் பயணித்தால், மேகமலையை அடையலாம். இந்தப் பாதை, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மிகவும் மோசமான நிலையில் இருந்தது. அதனால், மேகமலையை சுற்றுலாப் பயணிகள் தவிர்த்துவந்தனர். இந்நிலையில், சுமார் 89 கோடி ரூபாய் மதிப்பீட்டில், தென்பழனி முதல் ஹைவேவிஸ் வரையில் சாலை போடப்பட்டது. டெண்டர் விடப்பட்டு ,மாநில நெடுஞ்சாலைத்துறை மேற்பார்வையில் பணிகள் நடைபெற்று முடிந்துள்ளது.

மேகமலை, வன உயிரினச் சரணாலயம் என்பதால், விலங்குகள் கடக்கும் இடம் மற்றும் ஆபத்தான வளைவுகளில் எச்சரிக்கை போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல், 18 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட மேகமலைச் சாலையில், ஒவ்வொரு கொண்டை ஊசி வளைவிலும் தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடும் மலர்களின் பெயர்களை போர்டில் எழுதிவைத்துள்ளது நெடுஞ்சாலைத்துறை. குறிப்பாக, வஞ்சிப்பூ கொண்டை ஊசி வளைவு, வெட்சிப்பூ கொண்டை ஊசி வளைவு, மகிழம்பூ கொண்டை ஊசி வளைவு என 18 கொண்டை ஊசி வளைவுக்கும் மலர்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளது.

கொண்டை ஊசி வளைவுகளுக்கு தமிழ் மலர்களின் பெயர் சூட்டுவது தேனியில் மேகமலை இரண்டாவது இடம்.
நெஞ்சாலைத்துறை அதிகாரி
மேகமலை கொண்டை ஊசி வளைவு
மேகமலை கொண்டை ஊசி வளைவு

இதுதொடர்பாக ஹைவேவிஸ் கிராமத்தைச் சேர்ந்த விஸ்வா பேசும் போது, ``கம்பம் மெட்டுச் சாலையில் உள்ள கொண்டை ஊசி வளைவுகளுக்கு இதே போல மலர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஐயப்பன் சீசனில் மட்டுமே கம்பம் மெட்டுச் சாலை அதிகம் பயன்படுத்தப்படும். ஆனால், தொடர்ச்சியாக சுற்றுலாப் பயணிகள் வருகைதரும் மேகமலைச் சாலையில் உள்ள கொண்டை ஊசி வளைவுகளுக்கும் மலர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. வெளிமாநில சுற்றுலாப் பயணிகளுக்கு நம்முடைய வழிகாட்டிகள் இந்த மலர்கள் பற்றி விளக்கிக்கூற முடியும். மேலும், நம்முடைய குழந்தைகளுக்கு தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள மலர்களைப் பற்றி தெரிவிக்க முடியும். நெடுஞ்சாலைத்துறைக்கு நன்றி” என்றார்.

மேகமலை கொண்டை ஊசி வளைவு
மேகமலை கொண்டை ஊசி வளைவு

இதுதொடர்பாகப் பேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், ``மேகமலையை சுற்றுலாத் தளமாக அறிவித்தார் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. அதன் அடிப்படையில்தான் சாலைப்பணி நடைபெற்றது. தற்போது, ஹைவேவிஸ் முதல் மகாராஜா மெட்டு வரை சாலைப்பணி நடைபெற்றுவருகிறது. கொண்டை ஊசி வளைவுகளுக்கு தமிழ் மலர்களின் பெயர் சூட்டுவது, தேனியில் மேகமலை இரண்டாவது இடம். இது, மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு