Published:Updated:

`3 மாத வாடகையே வேண்டாம்..!' -10 ரூபாய் டாக்டரின் செயலால் நெகிழ்ந்த பட்டுக்கோட்டை வியாபாரிகள்

டாக்டர் ரத்தினம்
டாக்டர் ரத்தினம்

91 வயதிலும் உடலில் எந்தக் குறைகளும் இல்லாமல் தன் வேலைகளை தானே செய்ய கூடிய வகையில் ஆரோக்கியமாக இருக்கிறார்.

பட்டுக்கோட்டையில் டாக்டர் ஒருவர் தனக்குச் சொந்தமான வணிக வளாகத்தில் கடைகள் வைத்திருக்கும் வியாபாரிகள் கொரோனா லாக்டெளனால் கடைகள் திறக்காமல் போனதில் வருமானம் இல்லாமல் தவித்ததைக் கவனித்துள்ளார். இதையடுத்து, அவர்களிடம் மூன்று மாதவாடகை தர வேண்டாம் எனக் கூறி நெகிழ வைத்திருக்கிறார்.

மனைவியுடன் டாக்டர் ரத்தினம்
மனைவியுடன் டாக்டர் ரத்தினம்

பட்டுக்கோட்டை மணிக்கூண்டு அருகே உள்ள பெரிய தெருவில் கிளினிக் நடத்தி வருபவர் டாக்டர் கனகரத்தினம் (வயது 91) மகப்பேறு மருத்துவரான இவரை எல்லோரும் ரத்தினம் என அன்போடு அழைக்கின்றனர். இவருடைய மனைவி ராஜலட்சுமி. இவர்களுக்கு மூன்று மகள்கள் ஒரு மகன். மகள்களுக்குத் திருமணமாகி வெவ்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர். மகன் சுவாமிநாதன் மற்றும் மருமகள் வர்ஷா சுவாமிநாதன் ஆகியோரும் டாக்டராக உள்ளனர்.

இந்த நிலையில், பெரிய தெருவில் உள்ள தனது கிளினிக் அமைந்துள்ள இடத்தில் 6 கடைகளை வாடகைக்கு விட்டுள்ளார் ரத்தினம். இதில் துணிக்கடை, காலணிகள் உள்ளிட்ட கடைகளை வியாபாரிகள் வைத்துள்ளனர். கொரோனா பரவாமல் தடுப்பதற்காக லாக்டெளன் அறிவிக்கப்பட்டதால் கடைகள் திறக்கப்படவில்லை. இதனால் கடை வைத்திருப்பவர்கள் அனைவரும் வருமானம் இழந்து தவித்துள்ளனர்.

கிளினிக்
கிளினிக்

இந்த நிலையில், கடைகளின் உரிமையாளர்கள், டாக்டரிடம் ஒரு மாத வாடகை பணத்தை குறைத்துக் கொண்டு இரண்டு மாத வாடகை பணத்தை மட்டும் தருகிறோம் எனக் கேட்பது குறித்துப் தங்களுக்குள் பேசியுள்ளனர். இதை அறிந்த ரத்தினம் அவர்களை தொடர்புகொண்டு, `கடந்த மூணு மாசமா வருமானம் இல்லாமல் துயரத்தைச் சந்தித்து வருகிறீர்கள்.. எனக்கு நீங்க அனைவரும் கொடுக்க வேண்டிய மூன்று மாத வாடகை பணத்தை தர வேண்டாம்' எனச் சொல்லியிருக்கிறார். இதன் மொத்த தொகை 4 லட்சத்து 20,000 ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

இதைக் கேட்ட வியாபாரிகளுக்கு கண்களில் ஆனந்தக் கண்ணீரே வந்துவிட்டது. இதுகுறித்து அப்பகுதியினரிடம் பேசினோம். `` டாக்டர் ரத்தினத்தைப் பொறுத்தவரை எப்போதும் அவர் மக்களின் மருத்துவராகவே திகழ்ந்து வருகிறார். மகப்பேறு மருத்துவரான அவர் தற்போது வரை 65,000 பிரசவம் பார்த்திருக்கிறார். இதில் பெரும்பாலும் சுகப்பிரசவம்தான்.

பேரப் பிள்ளைகளுடன் டாக்டர்
பேரப் பிள்ளைகளுடன் டாக்டர்

தன்னிடம் சிகிச்சைக்கு வரும் அனைவரிடமும் இன்று வரை 10 ரூபாய் மட்டுமே பீஸ் வாங்குகிறார். மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டவர். காசுக்கு முக்கியத்துவம் தராமல் தன்னிடம் வரும் அனைவரையும் உறவாக நினைத்து அன்பாக அக்கறையாக சிகிச்சையளிப்பார். 91 வயதிலும் உடலில் எந்த குறைகளும் இல்லாமல் தன் வேலைகளைத் தானே செய்யக் கூடிய வகையில் ஆரோக்கியமாக இருக்கிறார் மருத்துவத்துறையில் ஒரு தர்மதுரையாக திகழ்வதே அதற்கு காரணம்.

அவர் வழியில் வந்த அவரின் மகனும் மருமகளும் 50 ரூபாய் பீஸ் வாங்குகின்றனர். இதனால் மருத்துவத்தை சேவையாக செய்து கொண்டிருக்கிறது அவரின் குடும்பம். இந்தியா, சீனா போர் நடந்தபோது இந்திய அரசு போர் தளவாடங்கள் வாங்குவதற்கு போதுமான நிதி இல்லை. எனவே மக்கள் தங்களிடம் உள்ள பணம், நகை போன்றவற்றை அரசுக்கு கொடுத்து உதவுங்கள், 5 வருடம் கழித்து அவற்றைத் திருப்பி தந்துவிடுவதாக கூறிக் கேட்டுள்ளனர். அப்போது தன் மகள்களின் திருமணத்துக்காக சேமித்து வைத்திருந்த 83 பவுன் தங்க நகையை மத்திய அரசிடம் கொடுத்துள்ளார்.

கடைகள்
கடைகள்

அதன் பிறகு அரசும் நகையைத் திருப்பிக் கொடுத்ததாக தனக்கு நெருக்கமானவர்களிடம் டாக்டர் கூறுவார். நாட்டையும் மக்களையும் நேசிக்கக் கூடியவராக இருந்துள்ளார் என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம்" என்றனர்.

டாக்டர் ரத்தினத்திடம் பேசினோம். `` கடை திறக்கப்படாத நிலையில் அவர்களால் எப்படி வாடகை கொடுக்க முடியும் என நினைத்தேன். அதனால் வாடகை வேண்டாம் எனக் கூறிவிட்டேன். துயரமான நேரங்களில் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்க வேண்டும். என்னால் முடிந்த சின்ன உதவியை எங்கள் வளாகத்தில் கடை வைத்திருப்பவர்களுக்க்ச் செய்திருக்கிறேன்" என்றார் இயல்பாக.

அடுத்த கட்டுரைக்கு