பட்டுக்கோட்டையில் கொரோனா லாக்டெளனால் வேலையிழந்த 12 குடும்பங்கள், வருமானத்தை இழந்து தவித்த நிலையில், அந்தக் குடும்பத்தினருக்கு 2 மாதங்களுக்குத் தேவையான அரிசி, மளிகை உள்ளிட்ட பொருள்களை வாசன் சாரிடபிள் டிரஸ்ட் மற்றும் ஆனந்த விகடன் வாசகர்கள் சார்பில் வழங்கப்பட்டது. இதில் எங்க வீடும், மனசும் நிறைந்துவிட்டதாக அவர்கள் நெழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

பட்டுக்கோட்டை லட்சதோப்பு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அருகே உள்ள சாலையோரத்தில், பூம் பூம் மாடுகொண்டு தொழில் செய்து வந்த 12 நாடோடிக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். சுமார் 50 ஆண்டுகளாக இவர்கள் பட்டுக்கோடை பகுதியில் வாழ்ந்து வருகின்றனர். மாடுகளை வைத்து பல்வேறு பகுதிகளுக்குச் சென்று தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
நாளடைவில் மாடுகள் இறந்ததையடுத்து கூலி வேலை, திருஷ்டி கழிப்பது, தெருவில் கிடக்கும் மது பாட்டிகள் எடுப்பது உள்ளிட்ட கிடைக்கும் வேலைகளைச் செய்து, அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தை வைத்து பிழைப்பி நடத்தி வருகின்றனர்.
இந்த 12 குடும்பங்களுக்கும் ரேஷன் கார்டு, ஆதார் கார்டு உள்ளிட்ட எந்த அரசு ஆவணங்களும் இல்லை என்பது இவர்களின் துயரத்துக்கு பெரும் காரணமாக இருக்கிறது. ரேஷன் கார்டு இல்லாததால், இலவச அரிசி உள்ளிட்ட அரசின் உதவிகள் எதுவும் கிடைப்பது இல்லை. இந்த நிலையில் கொரோனா பரவுதலைக் கட்டுப்படுத்துவதற்காகக் கடைப்பிடிப்பக்கப்பட்ட லாக்டெளன் இந்த 12 குடும்பங்களையும் நிலைகுலைய வைத்தது.

ஒரு வேளை உணவுக்குக்கூட வழியில்லாமல் இந்தக் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 60-க்கும் மேற்பட்டோர் சாலையோரத்தில் தவித்து நின்றனர். இதில் குழந்தைகளும் அடக்கம் என்பது பார்ப்பவர்களின் நெஞ்சை கனக்கச் செய்தது. அவர்களின் நிலை அறிந்த நல்ல உள்ளங்கள் சிலர் செய்த உதவியின் மூலம் லாக்டெளன் நாள்கள் நகரத் தொடங்கின.
அவர்களைப் பற்றிய விவரம் ஆனந்த விகடனுக்குத் தெரிய வந்த பிறகு, உடனடியாக நேரில் சென்று விசாரித்தோம். வயிறு நிறைய சாப்பிட்டு 4 மாசம் ஆச்சு என்பது அவர்கள் சொல்லாமலேயே அந்த நிலையை நமக்கு உணர்த்தியது. இதையடுத்து வாசன் சாரிடபிள் டிரஸ்ட் மற்றும் ஆனந்த விகடன் வாசகர்கள் சார்பில் அவர்களுக்கு உதவ முடிவு செய்யப்பட்டது.

அரிசி 20 கிலோ,10 கிலோ கோதுமை மாவு, 4 லிட்டர் எண்ணெய் உள்ளிட்ட சமையல் பொருள்கள் இரண்டு மாதத்துக்குத் தேவையான அளவு கொடுக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட 12 குடும்பங்களுக்கும் மொத்தம் 34,864 ரூபாய்கான பொருள்கள் ஒப்படைக்கப்பட்டது. முகம் முழுக்க புன்னகையுடன் இதை அவர்கள் பெற்றுக்கொண்டனர்.
நிவாரணப் பொருள்களைப் பெற்றுக்கொண்ட முனியப்பன் கூறுகையில், ''ரேஷன் கார்டு உள்ளிட்டவை இல்லாததால் ரேஷன் அரிசியையே மார்க்கெட்டில் விலைக்கு வாங்கி சாப்பிடக்கூடிய நிலையில்தான் எங்களுடைய சூழ்நிலையிருக்கிறது. சாக்கடைக் கழிவுகள், குப்பைகள், கொசுக்கள் இவற்றுக்கு மத்தியில் சிறிய அளவில் டெண்ட் அடித்து வாழ்ந்து வருகிறோம். ரேஷன் கார்டு, பட்டா உள்ளிட்டவை கேட்டு பல வருடங்களாகப் போராடி வருகிறோம். எங்களுக்கான கதவுகள் திறக்கப்படவில்லை.

எங்களை துரத்திய துயரம் இப்போது எங்கள் பிள்ளைகளையும் துரத்துகிறது. ஏதோ ஒரு வகையில் எங்களுக்கான பொழுது விடியாதா என்ற ஏக்கம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. எங்களோட நிலையை அறிந்து தேடி வந்து அரிசி உள்ளிட்ட மளிகைப் பொருள்களைக் கொடுத்திருக்கிறீங்க. இதனால், எங்க மனசோடு சேர்ந்து வீடும் நெறஞ்சு இருக்கு. 2 மாசத்துக்கு மூன்று வேளைக்கான அடுப்பு நிற்காமல் எரியும். இதற்கு வித்திட்ட ஆனந்த விகடனுக்கு நன்றி” என நெகிழ்வுடன் தெரிவித்தார்.