Published:Updated:

தாராபுரம்: படையெடுக்கும் பாம்புகள்; அச்சத்தில் என்.ஜி.ஜி.ஓ காலனி மக்கள் - கவனிக்குமா கதர் வாரியம்?

என்.ஜி.ஜ.ஓ காலனி
News
என்.ஜி.ஜ.ஓ காலனி

``வாரத்துக்கு இரண்டு முறையாவது இந்தப் புதரிலிருந்து வெளியேறும் பாம்புகள் குடியிருப்புகளுக்குள் நுழைந்துவிடுகின்றன. இதனால், குழந்தைகளை வெளியில்கூட விடமுடியாமல் அச்சத்தில் இருக்கிறோம்."- என்.ஜி.ஜி.ஓ காலனி மக்கள்

தாராபுரம்: படையெடுக்கும் பாம்புகள்; அச்சத்தில் என்.ஜி.ஜி.ஓ காலனி மக்கள் - கவனிக்குமா கதர் வாரியம்?

``வாரத்துக்கு இரண்டு முறையாவது இந்தப் புதரிலிருந்து வெளியேறும் பாம்புகள் குடியிருப்புகளுக்குள் நுழைந்துவிடுகின்றன. இதனால், குழந்தைகளை வெளியில்கூட விடமுடியாமல் அச்சத்தில் இருக்கிறோம்."- என்.ஜி.ஜி.ஓ காலனி மக்கள்

Published:Updated:
என்.ஜி.ஜ.ஓ காலனி
News
என்.ஜி.ஜ.ஓ காலனி

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் நகரின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் என்.ஜி.ஜி.ஓ காலனியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றன. இந்தக் காலனியையொட்டி தமிழ்நாடு கதர் வாரியத்துக்குச் சொந்தமான சுமார் மூன்று ஏக்கர் நிலம் இருக்கிறது. இந்த இடத்தில், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்புவரை கதர் துணிகள் விற்பனை மையம், அதற்கான அலுவலகம், கிடங்குகள் செயல்பட்டுவந்தன.

கதர் ஆடை விற்பனை நிலையம்
கதர் ஆடை விற்பனை நிலையம்

கதர் ஆடைகள் விற்பனை குறைந்ததையடுத்து, அங்கிருந்த விற்பனை மையம் மற்றும் அலுவலகங்கள் மூடப்பட்டன. அதன் பிறகு, கதர் வாரியம் இந்த இடத்தைக் கண்டுகொள்ளாததால், தற்போது புதர்மண்டி காடுபோல காட்சியளிக்கிறது. இந்தப் புதரிலிருந்து வெளியேறி வீடுகளுக்குள் புகும் பாம்புகளால் என்.ஜி.ஜி.ஓ காலனி மக்கள் அச்சத்தில் இருக்கின்றனர்.

சாகுல் அமீது
சாகுல் அமீது

இது குறித்து என்.ஜி.ஜி.ஓ காலனியைச் சேர்ந்த சாகுல் அமீது நம்மிடம் பேசுகையில், "கதர் விற்பனை நிலையம் இயங்கிவந்த இடத்தில் மரம், செடி கொடிகள் எனக் காடுபோல காட்சி அளிப்பதுடன், கட்டடங்களும் சிதிலமடைந்து விழும் நிலையில் இருக்கின்றன. வாரத்துக்கு இரண்டு முறையாவது இந்தப் புதரிலிருந்து வெளியேறும் பாம்புகள் குடியிருப்புகளுக்குள் நுழைந்துவிடுகின்றன.

இதனால், குழந்தைகளை வெளியில்விட அச்சமாக இருக்கிறது. இந்த இடத்தைச் சுற்றிலும் சுற்றுச்சுவர் இல்லாததால் உள்ளே சென்று மது அருந்துவது, பல்வேறு சட்டவிரோதச் செயல்கள் நடைபெறுகின்றன. மேலும், என்.ஜி.ஜி.ஓ காலனிக்குள் வரும் சாலையும் பல ஆண்டுகளாகப் போடப்படாததால், பள்ளம் ஏற்பட்டு மழைக்காலங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது. இதனால், மழைக்காலங்களில் குடியிருக்க முடியாமல் பெரும் சிரமத்தைச் சந்தித்துவருகிறோம்.

சிதிலமடைந்த கதர்வாரிய கட்டடங்கள்
சிதிலமடைந்த கதர்வாரிய கட்டடங்கள்

புதராகக் காட்சியளிக்கும் இடத்தைத் தூய்மைப்படுத்தி, சாலை அமைத்துத் தருமாறு தாராபுரம் நகராட்சியிடமும், கதர் வாரியத்திடமும் பலமுறை மனு அளித்தும் எந்தப் பயனும் இல்லை. இந்த இடத்துக்கு அருகிலேயே இயங்கும் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் மேம்பாட்டுக்கு இந்த இடத்தை அளிக்கலாம் அல்லது தாராபுரம் நகராட்சியிடம் கதர் வாரியம் ஒப்படைத்தால் இடமாவது தூய்மையாகும்" என்றார்.

தாராபுரம் நகராட்சித் தலைவர் பாபு கண்ணனிடம் இது குறித்துப் பேசினோம். ``கதர் வாரியத்துக்குச் சொந்தமானதால் அந்த இடத்தில் நாங்கள் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாது. புதர்மண்டிக் கிடக்கும் இடத்தை நகராட்சியிடம் ஒப்படைக்குமாறு நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பிவைத்திருக்கிறோம். கதர் வாரியம் அந்த இடத்தை அளிக்கும்பட்சத்தில் அங்கு நவீன விளையாட்டரங்கம் அல்லது டிஜிட்டல் நூலகம் அமைக்க திட்டமிட்டிருக்கிறோம். என்.ஜி.ஜி.ஓ காலனி பகுதியில் விரைவில் சாலை அமைக்கப்படும்" என்றார்.

சுற்றுச்சுவர் இல்லாத கதர் வாரிய இடம்
சுற்றுச்சுவர் இல்லாத கதர் வாரிய இடம்

இது குறித்து கதர்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, ``என்.ஜி.ஜி.ஓ காலனி அருகேயுள்ள கதர் வாரியத்துக்குச் சொந்தமான இடத்தை அவ்வப்போது, தூய்மைப்படுத்தி வருகிறோம். மழை பெய்தால் மீண்டும் செடிகள் முளைத்து விடுகின்றன. அந்த இடத்தைத் தூய்மைப்படுத்த வாரியத்திடம் போதிய நிதி இல்லை. வேறு பயன்பாட்டுக் குத்தகை அடிப்படையில் இடத்தைவிட திட்டமிட்டிருக்கிறோம். தாராபுரம் நகராட்சி வசம் ஒப்படைப்பது குறித்து வாரியம்தான் முடிவெடுக்க வேண்டும். இருப்பினும், தற்போது வாரியத்துக்கு எழுதி அனுப்பி நிதியைப் பெற்று அந்த இடம் தூய்மைப்படுத்தப்படும்" என்றனர்.