Published:Updated:

``சாதிச் சான்றிதழ் வேண்டும்..!” - பாம்புகளுடன் ஆட்சியர் அலுவலகத்தை அதிர வைத்த நாடோடி இன மக்கள்

இரா.மோகன்
உ.பாண்டி

மனு அளிக்க வந்தவர்கள் தங்களுடன், நாகப்பாம்பு மற்றும் சாரைப் பாம்பு ஆகியவற்றை உயிருடன் கொண்டு வந்தனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு வந்திருந்த பொதுமக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.

பாம்புகளுடன் மனு கொடுக்க வந்த மக்கள்.
பாம்புகளுடன் மனு கொடுக்க வந்த மக்கள். ( உ.பாண்டி )

சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் நடத்திய மக்கள் குறைதீர் கூட்டத்திற்குக் காட்டு நாயக்கன் இன மக்கள் பாம்புகளுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பாம்புகளுடன் நாடோடி இன மக்கள்
பாம்புகளுடன் நாடோடி இன மக்கள்
உ.பாண்டி

ராமநாதபுரம் மாவட்டத்தில் அண்ணா நகர், மேலப்பார்த்திபனூர், லீலாவதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் நாடோடி இன மக்கள் பெருமளவில் வசித்து வருகின்றனர். மலைவாழ் மக்கள் இனத்தைச் சேர்ந்த இவர்கள் பாம்பு பிடித்தல், பாசி மணி மாலைகள் விற்பனை செய்தல், குடுகுடுப்பை அடித்து குறி சொல்லுதல் போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தங்கள் சாதியான 'காட்டு நாயக்கன் ' பெயரில் சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி கடந்த பல ஆண்டுகளாகப் போராடி வருகின்றனர்.

அதிகாரிகளோ, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சாதிச் சான்றிதழுக்கான பட்டியலில் காட்டு நாயக்கன் சாதி இடம் பெறவில்லை எனக் கூறி அப்பெயரில் சாதிச் சான்றிதழ் வழங்க மறுத்து வருகின்றனர். இதனால் இச்சமுதாயத்தைச் சேர்ந்த குழந்தைகள் பள்ளி செல்ல முடியாத நிலையும், உயர் கல்வி உள்ளிட்ட அரசால் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளைப் பெற முடியாத நிலையும் நிலவுகிறது.

பாம்புகளுடன் மனு கொடுக்க வந்த மக்கள்
பாம்புகளுடன் மனு கொடுக்க வந்த மக்கள்
உ.பாண்டி

இந்நிலையில் மலைவாழ்ச் சமூகத்தினரான தங்களுக்கு காட்டு நாயக்கன் சமுதாயத்தின் பெயரில் சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை தீர் கூட்டத்தில் மனு அளிக்க வந்தனர். மனு அளிக்க வந்தவர்கள் தங்களுடன், நாகப்பாம்பு மற்றும் சாரைப் பாம்பு ஆகியவற்றை உயிருடன் கொண்டு வந்தனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு வந்திருந்த பொதுமக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அங்கு வந்த போலீஸார், ''பாம்புகளுடன் மனு கொடுக்க அனுமதிக்க முடியாது. எனவே பாம்புகளை பாதுகாப்பாக வைத்து விட்டு குறிப்பிட்ட சிலர் மட்டும் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க செல்லலாம்'' எனக் கூறியதை தொடர்ந்து பாம்புகள் இன்றி சென்ற சிலர் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவிடம் தங்கள் கோரிக்கை மனுவினை அளித்து வந்தனர்.

சாதிச் சான்றிதழ் கேட்டு பாம்புகளுடன்  வந்த மக்கள்
சாதிச் சான்றிதழ் கேட்டு பாம்புகளுடன் வந்த மக்கள்
உ.பாண்டி

தங்களின் கோரிக்கை குறித்து விளக்கிய தமிழ்நாடு பழங்குடி நாடோடிகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரான மகேஸ்வரி, ''2001-ம் ஆண்டு உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மானுடவியல் பேராசிரியர்களை கொண்டு பழங்குடி இனமக்கள் வாழும் கிராமங்களை ஆய்வு செய்து அந்த அறிக்கையின் அடிப்படையில் சாதிச் சான்றிதழ் வழங்கலாம் எனக் கூறியிருந்தது. அதன் அடிப்படையில் பழங்குடி ஆராய்ச்சி மைய இயக்குநர், காட்டு நாயக்கன் இன மக்கள் அதிகமாக வாழும் மதுரை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களுக்குச் சென்று ஆய்வு செய்து அளித்த அறிக்கையின் பேரில் 'காட்டு நாய்க்கன்' சாதிச் சான்றிதழ்களை பெற்று வருகின்றனர். ஆனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் இச்சான்று வழங்கப்படாததால் காட்டு நாயக்கன் சமுதாயப் பிள்ளைகள் கல்வி, வேலை வாய்ப்பு போன்றவற்றை பெறமுடியாமல் பின் தங்கிய நிலையில் இருந்து வருகின்றனர். இது குறித்து மாவட்ட ஆட்சியர் எங்கள் பகுதிக்கு நேரில் வந்து ஆய்வு செய்து சாதிச் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டு மனு கொடுத்துள்ளோம். மாவட்ட ஆட்சியரும் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்'' என்றார்.