`தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில், மக்கள் ஒருநபர் ஆணையத்தையே நம்புகிறார்கள்!’- ஹென்றி டிபேன்

``மக்கள் முழுமையாக நம்பியிருப்பது ஒருநபர் ஆணையத்தைதான். எனவே, விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும்” என மக்கள் கண்காணிப்பகத்தின் இயக்குநர் ஹென்றி டிபேன் தெரிவித்துள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற 100 போராட்டத்தின் இறுதி நாளான, கடந்த மே 22-ம் தேதி ஏற்பட்ட கலவரத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்வதற்காக, ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை நியமித்து உத்தரவிட்டது தமிழக அரசு.

அதன்பேரில், தூத்துக்குடி சுற்றுலா மாளிகையில் உள்ள ஆணையத்தின் முகாம் அலுவலகத்தில் இதுவரை நடந்த 17 கட்ட விசாரணையில், துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்கள், காயமடைந்தவர்கள், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், பொதுமக்கள், அதிகாரிகள், மருத்துவர்கள், போலீஸார் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டன. இந்நிலையில், ஒரு நபர் ஆணையத்தின் 18-வது கட்ட விசாரணை, கடந்த 21ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது. இதில், துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஆஜராவதற்காக, மக்கள் கண்காணிப்பகத்தின் இயக்குநரும் வழக்கறிஞருமான ஹென்றி டிபேன் தூத்துக்குடி வந்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசுகையில், ”தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையத்தில் தற்போது வரை 400-க்கும் மேற்பட்டோர் அளித்துள்ள சாட்சியத்திலிருந்து, 500-க்கும் மேற்பட்ட ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளன. தேசிய அளவில் 23 நீதிபதிகள் அடங்கிய குழு விசாரணை செய்து, 2,500 பக்கங்கள் கொண்ட அறிக்கையாகத் தயார் செய்யப்பட்டதன் அடிப்படையிலும், சென்னை உயர் நீதிமன்றத்தில் இச்சம்பவம் தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்குகள் குறித்தும் 125 பக்கங்கள் கொண்ட ஆவணக் குறியீட்டைத் தாக்கல்செய்ய உள்ளேன்.

இச்சம்பவம் குறித்து சிபிஐ-யும் ஒருபுறம் விசாரணை செய்து வரும் நிலையில், இதுவரை எந்தக் குற்றவாளியைப் பற்றியும் குறிப்பிடவில்லை. தேசிய மனித உரிமைகள் ஆணையமும், இந்த ஆணையத்தின் வரலாற்றில் இல்லாத வகையில், இச்சம்பவம் தொடர்பான வழக்கைத் தானாக எடுத்துக்கொண்டு, எந்தவிதக் காரணமும் குறிப்பிடாமல் பாதியிலேயே முடித்துள்ளது. தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு எதிராக டெல்லி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர உள்ளோம்.
இந்நிலையில், கடந்த 19 மாதமாக விசாரணை நடந்து கொண்டிருந்தாலும், இச்சம்பவம் குறித்த உண்மை நிலையைத் தெரிந்துகொள்ள மக்கள் நம்பிக்கொண்டிருப்பது இந்த ஒருநபர் ஆணையத்தை மட்டும்தான். எனவே, விசாரணையை விரைவாக முடிக்க வேண்டும் என்பது எங்களின் கோரிக்கை. துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்தவர்களுக்கு, ஆணையம்மூலம் இழப்பீடு நிதி பெற்றுத் தரப்பட்டுள்ளது. இந்த நிதி, அவர்களை காயத்திலிருந்து ஆற்றுப்படுத்துவதற்கு மட்டுமே சரியாக உள்ளது.

காயம்பட்டவர்களை நேரடியாக அவரவர் வீடுகளில் சந்தித்து கூடுதலாக நிதியைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்த உள்ளோம். இதைப்போல, துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது. இந்த வேலை, அவர்களை அவமதிப்பது போல உள்ளது. ஆகவே, அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பணியை மறுபரிசீலனை செய்து, அவர்களின் கல்வித் தகுதிக்கு ஏற்ப உரிய பணியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்த உள்ளோம்” என்றார்.