Published:Updated:

`எங்க குழந்தைகளை பாதிக்காதா?' -தனிமை முகாமுக்கு எதிராக கொதிக்கும் கிராம மக்கள்

போராட்டம் நடத்தும் கிராம மக்கள்
போராட்டம் நடத்தும் கிராம மக்கள்

``பாதுகாப்புப் பணியில் ஈடுபடவேண்டிய காவல்துறையினரும் இங்கு இருப்பதில்லை. இந்தக் காரணத்தால்தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சுதந்திரமாக வெளியில் சுற்றித் திரிகிறார்கள்”

``கொரோனா வைரஸால் பாதிப்படைந்தவர்கள் இரவு நேரத்தில் சுதந்திரமாக வீதிகளில் நடமாடிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களால் எங்களது குடும்பமும் பாதிப்படையும் என்ற அச்சம் ஏற்படுகிறது. உடனடியாக இப்பகுதியில் இருக்கும் முகாமை மாற்றுங்கள்” என்று அரியலூரில் உள்ள கிராமம் ஒன்றில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா
கொரோனா

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகேயுள்ள சூனாபூரி எனும் கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சிறப்பு தனிமைப்படுத்தப்படும் முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்தவர்களையும் இந்த முகாமில் தனிமைப்படுத்தி தங்க வைத்துள்ளனர். இதில் 5 பெண்கள் உட்பட 37 பேர் தங்கியுள்ளனர். இவர்களுக்கான கொரோனா பரிசோதனை முடிவுகள் நேற்று முன்தினம் வந்துள்ளன. அதில், திருமண மண்டபத்தில் தங்கியிருந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், தனிமைப்படுத்தப்பட்டுள்ள முகாமில் உள்ளவர்கள் முகாமைவிட்டு வெளியேறி வீதிகளில் சுற்றித் திரிந்துவிட்டு மீண்டும் முகாமிற்குச் சென்றிருக்கிறார்கள். இதைப் பார்த்த கிராம மக்கள், கொரோனாவைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் தவறிவிட்டனர் என்றும் முகாமை உடனடியாக இங்கிருந்து மாற்ற வேண்டும் என்றும் கூறி ஆண்டிமடம் ஸ்ரீமுஷ்ணம் சாலையில் சிறப்பு முகாம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதை அறிந்த ஆண்டிமடம் தாசில்தார் தேன்மொழி மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்பு தாசில்தார், சிறப்பு தனிமைப்படுத்தப்படும் முகாமை மாற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின்னர் பொதுமக்கள் அனைவரும் சாலை மறியலைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர்.

`தனிமை முகாம்.. தவிக்கவிட்ட மருத்துவர்கள்' -மலேசியாவில் இருந்து ஊர் திரும்பியவருக்கு நேர்ந்த துயரம்

இதுகுறித்து கிராம மக்கள் சிலர், ``வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து வருபவர்களை இங்குதான் தனிமைப்படுத்தி வைத்திருக்கிறார்கள். நாங்கள் இப்பகுதியில் முகாம்களை அமைக்கக் கூடாது என்று முன்பே எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் பேசினோம். ஆனால், அவர்கள் `கொரானோ நோயாளிகளை வைத்து சிகிச்சையளிக்கவில்லை. வெளிமாநிலத்திலிருந்து வருபவர்களைத்தான் தனிமைப் படுத்துகிறோம். உங்களுக்கு எந்தவித பாதிப்புகளும் வராது’ என்று தெரிவித்தனர்.

இதனால், நாங்களும் ஒப்புக்கொண்டோம். இப்போது முகாமில் இருப்பவர்கள் இரவு நேரத்தில் சுதந்திரமாகக் கடைவீதிகளில் நடமாடிவிட்டு மீண்டும் முகாமிற்குள் சென்றிருக்கிறார்கள். இதைக் கிராம மக்கள் பார்த்திருக்கிறார்கள். அதில் இருவருக்குக் கொரோனா தொற்றும் உறுதியாகியுள்ளது” என்றனர்.

அரியலூர் ஆட்சியர் அலுவலகம்
அரியலூர் ஆட்சியர் அலுவலகம்

தொடர்ந்து அவர்கள் பேசும்போது, ``இது யாருடைய தவறு. இந்த முகாம்களில் எந்த வசதிகளும் கிடையாது. சரியாக அதிகாரிகளும் இங்கு இல்லை. பாதுகாப்புப் பணியில் ஈடுபடவேண்டிய காவல்துறையினரும் இங்கு இருப்பதில்லை. இந்தக் காரணத்தால்தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சுதந்திரமாக வெளியில் சுற்றித் திரிகிறார்கள். இவர்களால் எங்களது பிள்ளைகளுக்கும் பாதிப்பு ஏற்படாதா? அதிகாரிகளின் அலட்சியத்தால் எத்தனை குடும்பங்கள் பாதிக்கப் போகிறதோ என்ற ஆவேசத்தில்தான் நாங்கள் போராட்டம் நடத்தினோம்” என்று தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

தாசில்தார் தேன்மொழி இந்தப் பிரச்னை தொடர்பாக பேசும்போது, ``கொரோனா நோயாளிகள் யாரும் வெளிவரவில்லை. முழு பாதுகாப்போடுதான் செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம். மக்கள் நம்முடைய குடும்பத்திற்கும் கொரானோ வந்துவிடுமோ என்ற அச்சத்தில்தான் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். அந்த முகாம்களில் 33 பேர் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தார்கள். மீண்டும் அவர்களுக்கு டெஸ்ட் எடுத்துவிட்டு அவர்களை வீட்டில் தனிமைப்படுத்த இருக்கிறோம். வரும் புதன் அல்லது வியாழன் அன்று முகாமை காலி செய்துவிடுவோம்” என்று விளக்கமளித்தார்.

அடிப்படை வசதிகளற்ற தனிமை முகாம்கள்; சுவரை உடைத்துத் தப்ப முயன்ற நபர்கள்! ராமநாதபுரம் அதிர்ச்சி
அடுத்த கட்டுரைக்கு