Published:Updated:

``ராஜராஜ சோழனை சாதியக் குடுவைக்குள் அடைக்காதீர்கள்!” - வலுக்கும் கோரிக்கை

மாமன்னன் ராஜராஜ சோழனுக்கு கொண்டாடப்படும் சதய விழாவின்போது பல்வேறு சாதி அமைப்புகள், `அவர் எங்க சாதி' என போஸ்டர் ஒட்டுவது வழக்கம். இந்த வருடமாவது அதற்குத் தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

ராஜராஜ சோழன் சிலை
ராஜராஜ சோழன் சிலை ( ம.அரவிந்த் )

மாமன்னன் ராஜராஜசோழன் சிறந்த ஆட்சி முறையின் மூலம் தமிழர்களின் புகழை உலகறியச் செய்தவர். அவருக்கு எடுக்கப்படும் சதய விழாவில் பல்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள் `ராஜராஜன் சோழன் எங்க சாதி’ என அடையாளப்படுத்தும் வகையில் போஸ்டர் ஒட்டுவார்கள். அதே அடையாளத்தோடு அவரின் சிலைக்கு மாலை அணிவிப்பதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். ராஜராஜன் மீது சாதிச் சாயம் பூசப்படுவதற்கு இந்த வருடமாவது தடை விதிக்கப்படுமா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பெரிய கோயில்
பெரிய கோயில்

ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதத்தில் வரும் மாமன்னன் ராஜராஜ சோழனின் பிறந்த நாள், சதய விழாவாக விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இரண்டு நாள்கள் நடைபெறும் இந்த விழாவில், பெரியகோயில் மற்றும் ராஜராஜ சோழன் சிலைகள் அமைந்துள்ள இடம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்படும். மேலும், நகரின் முக்கிய இடங்களில் பிரமாண்ட அலங்கார வளைவுகள் அமைக்கப்படும்.1034-வது சதய விழா இந்த வருடம் கொண்டாடப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. கடந்த காலங்களில் ராஜராஜசோழனை போற்றும் வகையிலும் அவரின் புகழைப் பரப்பும் வகையிலும் சதயவிழா கொண்டாடப்பட்டு வந்தது.

ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே `ராஜராஜ சோழன் எங்க சாதி’ என பல சாதிய அமைப்புகள் சொந்தம் கொண்டாடுவதுடன் ராஜராஜ சோழன் பெயருடன் தங்கள் சாதிப் பெயரையும் இணைத்து போஸ்டர் அச்சிட்டு ஒட்டி வருகின்றனர். இதற்குத் தடை விதிக்க வேண்டும்; மாமன்னனாக திகழ்ந்த ராஜராஜனை எந்த சாதி அடையாளத்துக்குள்ளும் அடைக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி மாவட்ட நிர்வாகத்திடம் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்துவருகின்றனர். ஆனால், ஒவ்வொரு சதயவிழாவிலும் இது தொடர்வது வேதனை அளிப்பதாகத் தெரிவிக்கின்றனர்.

ராஜராஜ சோழன் சிலை
ராஜராஜ சோழன் சிலை

சமூக ஆர்வலரான ஜீவகுமார் என்பவரிடம் பேசினோம்: ``வரும் 5 மற்றும் 6-ம் தேதி என இரண்டு நாள்கள் ராஜராஜ சோழன் சதயவிழா கொண்டாடப்படுகிறது. முதல் நாள் கவியரங்கம், ஆன்மிக சொற்பொழிவு, பட்டிமன்றம் மற்றும் கலை நிகழ்ச்சிகளும் பெருவுடையாருக்கு அபிஷேக ஆராதனைகளும் நடக்கும். இரண்டாம் நாள் ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வது வழக்கம். அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்ட பிறகு பல்வேறு சாதிச் சங்கங்களைச் சேர்ந்த தலைவர்கள், சாதி அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மாலை அணிவிக்க வருவார்கள். இதற்காக காவல்துறையினரிடம் முன்கூட்டியே அனுமதி வாங்க வேண்டும்.

அன்றைய தினத்தில் நகரம் முழுவதும் போலீஸார் குவிக்கப்பட்டிருப்பார்கள். ராஜராஜன் சிலைக்கு முன் பெரும் போலீஸ் படை குவிக்கப்பட்டிருக்கும். இவை அனைத்தும் விழா சிறப்பாக நடப்பதற்கும், சாதி ரீதியிலான எந்த மோதல்களும் ஏற்ப்பட்டு விடாமல் இருப்பதற்கும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எடுக்கப்படுகிற நடவடிக்கை. ராஜராஜனுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வது என்பது போற்றக்கூடியதுதான். ஆனால், சாதிய வட்டத்துக்குள் அடைக்கும் வகையில் போஸ்டர் ஒட்டுவதும் சாதி அடையாளத்துடன் மாலை அணிவிக்க வருவதும் தடுக்கப்பட வேண்டும். இதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று பல வருடங்களாக கோரிக்கை வைத்துவருகிறோம்.

முகூர்த்த கால் ஊன்றும் விழா
முகூர்த்த கால் ஊன்றும் விழா

கட்டடக்கலையில் சிறந்து விளங்கியதற்கு சாட்சியாக ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் கம்பீரமாக நிற்கிறது பெரிய கோயில். நீர் மேலாண்மையின் அவசியம் உணர்ந்ததால் அப்போதே அதற்காக சிறந்து செயல்பட்டதற்கான அடையாளங்கள் இன்றும் இருக்கிறது. கப்பல் படையை நிறுவி வெளிநாடுகளுக்குப் போர் தொடுத்து வெற்றிக்கொடி நாட்டியவர். தமிழனின் கொடியை உலகம் முழுவதும் பரவச் செய்தவர். இப்படி ராஜராஜனை போற்றுவதற்கும் கொண்டாடுவதற்கும் எத்தனையோ சிறப்புமிக்க காரணங்கள் இருக்கும்போது பேரரசனாக திகழ்ந்த மன்னனை சாதி ரீதியிலான வட்டத்துக்குள் அடைத்து சிறுமைப்படுத்தும் செயலை பலரும் செய்கின்றனர். இப்போது நடக்க இருக்கும் விழாவில் அரசு இவற்றுக்குத் தடை விதிக்க வேண்டும்” என்றார்.

கல்வெட்டு ஆராய்ச்சியாளரான மணிமாறன் என்பவரிடம் பேசினோம்: ``மிகச் சிறந்த ஆட்சி முறையை நடத்தி மாமன்னனாக விளங்கிய தமிழ் மன்னன் ராஜராஜசோழனை எந்த சாதி வட்டத்துக்குள்ளும் அடக்க முடியாது. தன் ஆட்சி முறையைப் பற்றி கல்வெட்டுகளில் குறிப்பிட்டுள்ள அவர் எந்த இடத்திலும் சாதியைப் பற்றிக் குறிப்பிடவில்லை.

பெரிய கோயில்
பெரிய கோயில்

தொழிலாளர்கள் செய்கின்ற தொழிலை அடிப்படையாகக் கொண்டு அவர்களுக்கு தன் பெயரையே பட்டமாக கொடுத்து அழைத்ததற்கான சான்றுகள் இருக்கின்றன. சாதி என்னும் சொல்லை சிறிய அளவுக்குக் கூட பயன்படுத்தவில்லை. அதேபோல் அவர் எந்த சாதியைச் சேர்ந்தவர் என்ற குறிப்புகளும் எங்கேயும் இல்லை. தமிழர்களின் பெருமையை உலகறியச் செய்திருக்கும் ராஜாராஜ சோழன் மீது யாரும் சாதிச் சாயம் பூசாமல் எல்லோரும் கொண்டாட வேண்டும்” என்றார்.

Vikatan