Published:Updated:

`சிமென்ட் ஆலையால் கொஞ்சம் கொஞ்சமா சாகிறோம்; அனுமதி கேட்கிறீங்க'- அரியலூர் கலெக்டரிடம் குமுறிய மக்கள்

``இந்த சிமென்ட் ஆலைகளால் நாங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டிருக்கிறோம் என்று பலமுறை சுட்டிக்காட்டிவிட்டோம். அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களிடமும் பலமுறை மனு அளித்துவிட்டோம். எந்த நடவடிக்கையும் இல்லை.''

சிமென்ட் ஆலை
சிமென்ட் ஆலை

``இந்த சிமென்ட் ஆலையால் நாங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துகொண்டிருக்கிறோம் என்று பலமுறை சுட்டிக்காட்டிவிட்டோம். மீண்டும் ஏன் புதிய சுரங்கத்துக்கு அனுமதி கேட்கிறீர்கள். நாங்கள் ஒட்டுமொத்தமாகச் செத்து மடிந்தால் உங்களுக்குச் சந்தோஷமா'' என்று ஆட்சியர் முன்பே கருத்துக்கேட்பு கூட்டத்தில் காரசாரமாக விவாதங்கள் நடைபெற்ற சம்பவம் அரியலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசு சிமென்ட் ஆலை
அரசு சிமென்ட் ஆலை

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள ஆனந்த வாடி கிராமத்தில் அரசு சிமென்ட் நிறுவனத்துக்குச் சொந்தமான சுண்ணாம்புக்கல் சுரங்கத்தை விரிவாக்கம் செய்வது குறித்து மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் ஆனந்தவாடி கிராமத்தில் நடைபெற்றது.

Vikatan

கருத்துக் கேட்புக் கூட்டத்துக்கு ஆட்சியர் ரத்னா தலைமை வகித்தார். சுற்றுச்சூழல் அதிகாரிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர். கருத்துக்கேட்பு கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய மக்கள் சேவை இயக்கத்தின் தலைவர் தங்க.சண்முகசுந்தரம். ``மாவட்டத்திலுள்ள எந்த சிமென்ட் ஆலையும் கருத்துக்கேட்புக் கூட்டத்தில் கூறிய எந்த முறைகளையும் பின்பற்றுவதில்லை. அரசின் விதிப்படி எந்த முடிவற்ற சுரங்கங்களையும் ஆலை நிர்வாகம் மூடுவதில்லை. இதனால் விவசாயம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் படிப்படியாகச் சிமென்ட் ஆலைகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மக்கள் சேவை இயக்கத்தின் தலைவர் தங்க.சண்முகசுந்தரம்
மக்கள் சேவை இயக்கத்தின் தலைவர் தங்க.சண்முகசுந்தரம்

சுரங்கம் குறித்து அரசின் விதிகளை ஆலை நிர்வாகம் கடைப்பிடிப்பதில்லை. அரசு மற்றும் எந்தத் தனியார் சிமென்ட் ஆலையும் நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்கப்படும் என உறுதி கொடுப்பதோடு சரி. வேலை வழங்குவதில்லை. எனவே, நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்கப்படும் என்ற ஆலையின் முடிவை மாவட்ட ஆட்சியர் முன் உறுதி தர வேண்டும்.

அப்படிச் செய்தால் மட்டும் நாங்கள் சுரங்க விரிவாக்கத்துக்கு அனுமதிப்போம். அத்தோடு சிமென்ட் ஆலைகள் மற்றும் சுண்ணாம்புக்கல் சுரங்களிலிருந்து வெளியேறும் வாகனங்களால் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 5,000-க்கும் மேற்பட்ட சாலை மற்றும் இதர விபத்துகள் நடந்துள்ளன. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்களது கை கால்களை இழந்துள்ளனர். இதில் எந்த நிறுவனமாவது முறையாக நிவாரணங்களை வழங்கியதுண்டா.

சட்ட விரோதமாக செயல்பட்ட சுண்ணாம்பு கல்குவாரிக்கு சீல்
சட்ட விரோதமாக செயல்பட்ட சுண்ணாம்பு கல்குவாரிக்கு சீல்

இந்த சிமென்ட் ஆலைகளால் நாங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துகொண்டிருக்கிறோம் என்று பலமுறை சுட்டிக்காட்டிவிட்டோம். அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களிடமும் பலமுறை மனு அளித்துவிட்டோம். ஆனால், அவர்கள் நடவடிக்கை எடுக்காமல் ஆலை அதிகாரிகளுக்கு மட்டும் விசுவாசமாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இப்படிச் செய்தால் நாங்கள் வாழ்வதா இல்லை கூண்டோடு சாவதா என்று தெரியவில்லை'' என்று ஆதங்கத்தோடு கருத்துகளைப் பதிவு செய்தார்.