Published:Updated:

குளித்தலை: `என் குழந்தைங்க இனி நல்ல சாப்பாடு சாப்பிடப்போறாங்க!' - நெகிழும் அருள்ராஜ்

விளக்குமாறு பின்னும் அருள்ராஜ்
விளக்குமாறு பின்னும் அருள்ராஜ் ( நா.ராஜமுருகன் )

அர்ச்சனாங்கிறவங்க, கையில் 5,000-த்தை திணிச்சு, 'உன் பிள்ளைகளுக்கும் உனக்கும் நான் இருக்கேன். கலங்காத. என்ன உதவின்னாலும் தயங்காம கேளு'னு தட்டிக் கொடுத்துட்டுப் போனாங்க.

`"உதவிகள் கிடக்குது, விகடன் செய்தியால் எங்களுக்கு கிடைச்சுருக்கிற இந்த புதுஉறவுகள் போதும். எந்த கஷ்டத்தையும் சுலபமா கடந்திருவேன் சார்" என்று கண்களில் சந்தோஷம் பூக்க, நெகிழ்ச்சியோடு பேசுகிறார் அருள்ராஜ்.

அருள்ராஜூக்கு உதவி
அருள்ராஜூக்கு உதவி
நா.ராஜமுருகன்

கரூர் மாவட்டம், குளித்தலை நகரில் உள்ள நாப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர், அருள்ராஜ். குளித்தலை அரசு மருத்துவமனை எதிரே உள்ள பிளாட்பாரத்தின் ஓரத்தில் ஈச்சம் மர தோகைகளில் விளக்குமாறுகள் தயார் செய்து, விற்பனை செய்துவருகிறார். 25 வயது இளைஞரான அருள்ராஜ், கடந்த 7 வருடங்களாக இந்தத் தொழிலில் ஈடுப்பட்டு வருகிறார்.

அங்குள்ள சிறுசிறு கடைகள், வீடுகளில் தரையை கூட்டிச் சுத்தம் செய்யும் பயன்பாட்டுக்காக, இவரிடம் விளக்குமாறுகளை சிலர் வாங்கிவந்திருக்கிறார்கள். ஆனால், கடந்த மூன்று மாதங்களாக கொரோனோ ஊரடங்கால் மக்கள் முடங்கிவிட்டதால், அருள்ராஜ் ஈச்சம்தோகை விளக்குமாறுகளை விற்கமுடியாமல் அல்லாடி வந்தார். அவருக்கு பத்மபிரியா என்ற மனைவியும், 4 வயது மற்றும் பத்து மாதத்தில் இரண்டு மகள்களும் இருக்கிறார்கள்.

குடும்பத்தோடு அருள்ராஜ்
குடும்பத்தோடு அருள்ராஜ்

வருமானமின்றி தவித்த அருள்ராஜ், குடும்பத்தின் சாப்பாட்டுப் பிரச்னையைத் தீர்க்க முடியாமல் தவித்து வந்தார். இரண்டு குழந்தைகளும் அருள்ராஜிடம், 'ரொம்ப பசிக்குது. வெறும் ரொட்டியாவது வாங்கி தாப்பா' என்று கேட்க, நிலைகுலைந்துப்போனார், அருள்ராஜ். இதுகுறித்து, கடந்த 7-ம் தேதி விகடன் இணையதளத்தில் கட்டுரை எழுதியிருந்தோம். அந்தக் கட்டுரை எண்ணற்ற வாசகர்களை நெக்குருகிபோக வைத்தது. அதில் பலர் தாயுமானவர்களாக மாறி, 'குழந்தைகளின் பசியாற்ற நாங்க இருக்கிறோம்' என்று பணம், உணவுக்கான பொருள்கள் என்று அனுப்பி, அருள்ராஜ் குடும்பத்தின் அல்லலை போக்கியிருக்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தனக்கு கிடைக்கும் உதவிகளை நம்பமுடியாமல் பார்த்தபடி மகிழ்ச்சியில் திக்குமுக்காடிபோயிருக்கும் அருள்ராஜிடம் பேசினோம்.

``கொரோனா ஊரடங்கால் என் வருமானம் போனாலும், நான் யாரோட உதவியையும் எதிர்பார்க்காமதான் இருந்தேன். விளக்குமாறுகளை எப்படியாச்சும் வித்து, வருமானம் பார்க்கணும்னுதான் நினைச்சேன். ஆனால், வியாபாரம் நடக்கலை. சாப்பாட்டுக்கே வழியில்லாமல், பச்சைக்குழந்தைகளின் பசியைப் போக்கமுடியாம தவிச்சுப்போனேன். இந்த நிலையில்தான், என்னைப்பற்றி விகடன்ல செய்தி எழுதினீங்க. அதைத்தொடர்ந்து, ஏராளமான உதவிகள் கிடைச்சிருக்கு. திருநெல்வேலி நகர உதவி ஆணையர் சரவணன் சார், நண்பர் மூலமா ரூ.5,000 கொடுத்தார்.

அருள்ராஜ்
அருள்ராஜ்
நா.ராஜமுருகன்

குளித்தலையைச் சேர்ந்த ஞானசேகர்ங்கிற இளைஞர், சகநண்பர்களோடு சேர்ந்து,`பாப்பாக்களுக்கு வயிறார சாப்பாடு ஆக்கிப் போடுங்க'னு சொல்லி, ரூ. 7,000 கொடுத்தாங்க. பக்கத்துல உள்ள வேந்தாம்பட்டியைச் சேர்ந்த அர்ச்சனாங்கிறவங்க, கையில் 5,000-த்தை திணிச்சு, 'உன் பிள்ளைகளுக்கும் உனக்கும் நான் இருக்கேன். கலங்காத. என்ன உதவின்னாலும் தயங்காம கேளு'னு தட்டிக் கொடுத்துட்டுப் போனாங்க. எப்பவோ செத்துப்போன என் ஆயியும் அப்பனும் இவங்க ரூபத்துல வந்திருக்கிறதாக நினைச்சு, ஓவென்று கதறித்தீர்த்தேன். அப்புறம், பக்கத்துல உள்ள ஒரு அரசுப் பள்ளி ஆசிரியர், சக ஆசிரியர்களோட பணம் திரட்டி 8,000 வரை கொண்டு வந்து கொடுத்தார். பேரைச் சொல்ல மறுத்துட்டாங்க.

`எப்போ நல்ல வாழ்க்கை வரும்னு தெரியல!' - கலங்கவைக்கும் குளித்தலை இளைஞர்

கரூரைச் சேர்ந்த ஒரு சமூகநல அமைப்பைச் சேர்ந்தவர் 2,000 பணம் கொடுத்தார். அதோடு, ஒருமாதத்துக்குத் தேவையான அரிசி, மளிகைச் சாமான்களை வாங்கிக் கொடுத்தார். தவிர, என்கிட்ட 20 விளக்குமாறுகளை விலை கொடுத்து வாங்கி, அதைப் பக்கத்துல வசிக்கிற ஏழ்மை நிலைமையில் உள்ளவங்ககிட்ட இலவசமா கொடுத்தார். ஈரோட்டில் இருந்து கிரிங்கிறவர் வந்து, இரண்டு மாதங்களுக்குத் தேவையான் அரிசி, மளிகைச் சாமான்களையும் வாங்கி கொடுத்தார். அதேபோல், பேர்சொல்ல மறுத்துட்டு, குளித்தலையைச் சேர்ந்த ஒருத்தர், மூன்று மாதங்களுக்குத் தேவையான உணவு பொருள்களை வாங்கித் தந்தார். இன்னும் பெயர் சொல்ல விரும்பாத பலர், அரிசி, மளிகைச் சாமான்கள் வாங்கி கொடுத்து, என் சிறிய வீட்டை நிறைச்சுட்டாங்க. இன்னொருபக்கம், போன் மூலமா என் வங்கி கணக்கு விபரங்களை இருபதுக்கும் மேற்பட்டவங்க கேட்டு வாங்கினாங்க.

விளக்குமாறுகள் வழங்கியபோது...
விளக்குமாறுகள் வழங்கியபோது...
நா.ராஜமுருகன்

இதுவரைக்கும், ரூ. 70,000 வரைக்கும் வங்கி கணக்குல அனுப்பி, என்னை நெகிழவைத்துவிட்டார்கள். அதோடு, பலர் என்கிட்ட குவிஞ்சுகிடந்த 300 க்கும் மேற்பட்ட விளக்குமாறுகளை கூடுதலாகவே விலை வச்சு வாங்கிகிட்டாங்க. முன்பு பேரம் பேசுறவங்களைப் பார்த்து பழக்கப்பட்ட எனக்கு, அது ஆச்சர்யமா இருந்துச்சு. இந்த உதவிகள் கூட எனக்கு பெருசா தெரியலை. ஆனால், எனக்கு உதவிகள் செஞ்ச அனைவரும், 'இனி உங்களுக்கு உறவுகளா இருப்போம்'னு சொன்னாங்க. புது உறவுகள் கிடைக்க காரணமா இருந்த விகடனை எக்காலமும் மறக்கமாட்டேன்" என்றார் உணர்ச்சிமேலிட!

அடுத்த கட்டுரைக்கு