Published:Updated:

கொரோனா: வாடகை தராததால் வெளியேற்றப்பட்ட குடும்பம் - உதவிகளால் நெகிழும் மூதாட்டி! 

மூதாட்டி அன்னம்மாள்
மூதாட்டி அன்னம்மாள்

கொரோனா ஊரடங்கு காரணமாக உழைப்பதற்கு வழியின்றி வறுமையில் வாடிய குடும்பத்தினரை வீட்டின் உரிமையாளர் வெளியேற்றியதால் குடும்பமே நடுரோட்டுக்கு வந்தது. அதை அறிந்ததும் பலரும் உதவிக்கரம் நீட்டியதால் குடும்பத்தினர் மகிழ்ச்சி.

கன்னியாகுமரி மாவட்டம் வழுக்கம்பாறை பகுதியில் வசித்து வந்தவர், அன்னம்மாள். 85 வயது நிரம்பிய அன்னம்மாளின் மகன் சுரேஷ் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்துவிட்டார். அதனால் மருமகள் இனிதா, பேத்திகள் சுரக்‌ஷா, சுஷ்மிதா ஆகியோரையும் தன்னுடன் வைத்துப் பராமரித்து வந்தார். 

வீடில்லாமல் சாலையில் வசிக்கும் அன்னம்மாள் குடும்பம்
வீடில்லாமல் சாலையில் வசிக்கும் அன்னம்மாள் குடும்பம்

வழுக்கம்பாறை கிராமத்தில் நால்வரும் வாடகை வீட்டில் குடியிருந்து வந்துள்ளனர். அன்னம்மாளின் மருமகள் இனிதாவுக்கு சர்க்கரை நோய் உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகள் இருப்பதால், அவரால் நடக்கக்கூட இயலாமல் படுக்கையில் உள்ளார்.

`சைக்கிள் வாங்க சிறுகச் சிறுக  சேர்த்த பணம்..!'  -கொரோனா நிதிக்கு வழங்கிய சிறுவனின் மனிதாபிமானம்

அன்னம்மாளின் பேத்தி சுரக்‌ஷா லைபிரரி தொடர்பான படிப்பை முடித்துள்ளார். அதனால், தனியார் லைபிரரியில் தினக்கூலி அடிப்படையில் வேலை செய்து வந்திருக்கிறார். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக அந்த வேலைக்கு அவரால் செல்ல இயலவில்லை. மற்றொரு பேத்தியான சுஷ்மிதா கல்லூரியில் இளநிலை இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். 

கொரோனா ஊரடங்கு
கொரோனா ஊரடங்கு

கொரோனா ஊரடங்கு காரணமாக வேலைக்குச் செல்ல இயலாததால், குடியிருந்த வீட்டுக்கு வாடகை கொடுக்க முடியவில்லை. அதனால், வீட்டின் உரிமையாளர் அன்னம்மாள் குடும்பத்தினரை திடீரென வெளியேற்றிவிட்டார்.

உதவி செய்ய உறவினர்களோ நண்பர்களோ முன்வராத நிலையில், அன்னம்மாள் குடும்பத்தினர் செய்வதறியாமல் தவித்து நின்றார்கள். கடைசியில், பொருள்களை எல்லாம் எடுத்துக்கொண்டு தங்களுடைய சொந்த ஊரான நெல்லை மாவட்டம் காவல்கிணறு காமராஜர் நகர் பகுதிக்குச் செல்ல முடிவெடுத்தனர்.

சாலையோரம் குவித்து வைக்கப்பட்ட பொருள்கள்
சாலையோரம் குவித்து வைக்கப்பட்ட பொருள்கள்

அதன்படி, சொந்த ஊருக்குத் திரும்பிய அன்னம்மாள் குடும்பத்தினர், தங்களுக்குத் தங்குவதற்கு வீடு இல்லாததால் சாலையோரத்தில் பொருள்களை எல்லாம் வைத்துவிட்டுத் தங்கியிருந்தார்கள். வெயில், மழை ஆகியவற்றுக்கு ஒதுங்குவதற்குக்கூட வழியின்றி சாலையோரம் அந்தக் குடும்பத்தினர் தவித்தனர்.

மூதாட்டியான அன்னம்மாளும் அவரின் குடும்பத்தினரும் தங்குமிடம் இல்லாமல் சாலையோரம் தவித்து வருவது தொடர்பாக அங்குள்ள இளைஞர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். அதனால் உள்ளூரைச் சேர்ந்த சிலர் அவருக்குக் குடிசை அமைத்துக் கொடுக்க முன்வந்தார்கள். 

உதவிப் பொருள்கள் வழங்கப்பட்டன.
உதவிப் பொருள்கள் வழங்கப்பட்டன.

தனது தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் குடியிருக்க வீடு இல்லாமல் ஒரு குடும்பம் நடு ரோட்டில் தவித்து வருவது பற்றி அறிந்த ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினரான ஐ.எஸ்.இன்பதுரை அந்தக் குடும்பத்தினரைத் தொடர்பு கொண்டு பேசியதுடன், அவர்களுக்குத் தேவையான அரிசி மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட உதவிகள் கிடைக்க ஏற்பாடு செய்தார்.

மூதாட்டி அன்னம்மாள் குடும்பத்தின் நிலைமையைக் கவனத்தில் கொண்டு அந்தக் குடும்பத்துக்கு அரசு உதவியில் சொந்த வீடு கட்டிக் கொடுக்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்துள்ளார். இது குறித்து ஐ.எஸ்.இன்பதுரை எம்.எல்.ஏ-விடம் பேசினோம். 

சட்டமன்ற உறுப்பினர் ஐ.எஸ்.இன்பதுரை
சட்டமன்ற உறுப்பினர் ஐ.எஸ்.இன்பதுரை

``வயதான மூதாட்டி, அவரின் மருமகள், பேத்திகள் என நான்கு பேர் வாடகை கொடுக்க முடியாததால் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டது குறித்து கேள்விப்பட்டு வேதனையடைந்தேன். உடனடியாக அந்தப் பகுதியில் உள்ள அ.தி.மு.க நிர்வாகிகள் மூலம் அந்தக் குடும்பத்தின் நிலை குறித்து விசாரித்தேன்.

அன்னம்மாள் குடும்பத்தினர் உடனடியாகத் தங்கிக்கொள்ளும் வகையில் உள்ளூர் மக்கள் ஒன்றிணைந்து குடிசை அமைத்துக் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதனால் அந்தக் குடும்பத்துக்குத் தேவையான அரிசி மளிகைப் பொருள்களை வாங்கிக் கொடுத்திருக்கிறேன். 

உதவிப் பொருள்கள்
உதவிப் பொருள்கள்

அன்னம்மாள் பாட்டியின் குடும்பத்தினரின் நிலையைக் கவனத்தில் கொண்டு விரைவிலேயே அவர்களுக்கு தமிழக அரசின் பசுமை வீடு திட்டத்தின் கீழ் சொந்தவீடு கிடைக்க ஏற்பாடு செய்து கொடுப்பதாக உறுதி அளித்திருக்கிறேன். அதற்கான பணியில் இப்போதே இறங்கிவிட்டேன். மூதாட்டி அன்னம்மாளும் அவரின் குடும்பத்தினரும் விரைவில் சொந்த வீட்டில் குடியேறுவார்கள்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு