Published:Updated:

`எங்கள் குழந்தைகளுக்கு மட்டும் ஏன் இவ்வளவு குறைபாடு?’ - பதறவைக்கும் தஞ்சை கிராமம்

மக்கள்
மக்கள்

எங்கள் ஊருக்கு கலெக்டர் வருகிறார் என்ற தகவலை அறிந்த அதிகாரிகள் உடனே நீர்தேக்கத் தொட்டியை சரிசெய்து தண்ணீர் வரவழைத்தனர். தெருவிளக்கையும் சரி செய்து எரியவிட்டார்கள்.

`பேராவூரணி அருகே உள்ள கிராமம் ஒன்றில் மக்களுக்கு எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லை. இந்த டிஜிட்டல் யுகத்தில் இப்படியொரு ஊர் இருப்பது பெரும் கொடுமை' என வேதனைப்படுகின்றனர் சுற்றுவட்டாரப் பொதுமக்கள்.

`நாடாளுமன்றம், சட்டமன்றம், ஊரக உள்ளாட்சி எனப் பல தேர்தல்களைச் சந்தித்து வாக்களித்து விட்டோம். ஆனால், எங்கள் நிலைமை கொஞ்சம் கூட மாறவில்லை. எங்க ஊரை ஆய்வு செய்த கலெக்டர் இரண்டு மாதத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் எனக் கூறியுள்ளார்' என்கின்றனர் அக்கிராம மக்கள்.

பெத்தனாச்சிவயல்
பெத்தனாச்சிவயல்

பேராவூரணி அருகே உள்ளது பெத்தனாச்சிவயல். ஊமத்தநாடு என்ற ஊராட்சிக்குட்பட்ட இந்தக் கிராமத்தில் சுமார் 150 குடும்பங்கள் வசித்து வருகின்றன. குடிதண்ணீர், மின்சார வசதி, சாலை வசதி என அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் இந்த ஊர் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். `தேர்தல் நேரத்தில் வரும் வேட்பாளர்கள் இந்த ஊரையே மாற்றிக் காட்டுகிறேன் என சபதமிட்டு வாக்குகளை மட்டும் வாங்கிச் செல்வார்கள். ஆனால், ஆரம்ப நிலையிலேயே இருக்கிறது எங்க ஊர்' என வேதனைப்படுகிறார்கள் பெத்தனாச்சி வயல் மக்கள்.

இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த சிலரிடம் பேசினோம், ``எங்க ஊரில் பெரியவர்கள், குழந்தைகள் என 300 நபர்களுக்கு மேல் வசிக்கிறோம். பல தலைமுறைகளாக இங்கு வாழ்ந்து வருகிறோம். எங்க பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு போதிய படிப்பறிவு கிடையாது. பெரும்பாலானவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகிறார்கள். அதில் வரும் வருமானத்தை வைத்தே வாழ்க்கையை ஓட்டி வருகிறார்கள். இங்கு வசிப்பவர்களில் சுமார் 60 குடும்பங்களுக்கு மட்டுமே வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது. மீதி உள்ளவர்களுக்கு கடந்த ஆண்டே பட்டா வழங்கப்படும் என அதிகாரிகள் கூறினார்கள். ஆனால், இதுவரை கைக்கு வரவில்லை.

ஊற்று நீர்
ஊற்று நீர்

பட்டா இல்லாததால் அரசு கொடுக்கும் இலவச மின்சாரம், தொகுப்பு வீடு போன்ற எந்த வசதியும் கிடைக்கவில்லை. பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி பழுதடைந்துவிட்டது. இதனால் ஊற்றுத் தோண்டி தண்ணீர் எடுத்து சுகாதாரமற்ற நீரைப் பயன்படுத்தி வருகிறோம்.

இதனால் எங்கள் குழந்தைகள் பலவித உடல் நலக் குறைபாடுகளுக்கு ஆளாகிறார்கள். இதனால் கடந்த மாதம் ஒரு சிறுவன் மர்மநோய் தாக்கி இறந்துவிட்டான். அதேபோல் இங்குள்ள சில மின் கம்பங்களில் தெரு விளக்குகள் எரிந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. இதனால் இருளில்தான் எங்க வாழ்க்கை ஓடுகிறது.

Vikatan

அத்துடன் முறையான சாலை வசதி இல்லை. இதனால் பலவித இன்னல்களை அனுபவித்து வருகிறோம். எங்களுக்குப் பிறந்த பாவத்துக்காக எங்கள் பிள்ளைகளும் போதிய வசதியின்றி சிரமப்பட்டு வருகின்றனர். இப்படியே ஆண்டாண்டு காலமாக எங்களின் அவல நிலை தொடர்கிறது. எங்க ஊருக்கு வரும் அதிகாரிகள் எங்களையும், எங்க நிலையையும் ஒருவிதமாகப் பார்ப்பார்கள். சிலர் இப்படியும் மக்கள் வாழ்கிறார்களே என பரிதாபமாக பார்ப்பார்கள்.

ஊற்று நீர்
ஊற்று நீர்

சில தினங்களுக்கு முன்புகூட எங்க ஊருக்கு கலெக்டர் கோவிந்தராவ் வந்து ஆய்வு செய்தார். கலெக்டர் வருகிறார் என்ற தகவலை அறிந்த அதிகாரிகள் உடனே பல வருடங்களாக தண்ணீர் வராத நீர்தேக்கத் தொட்டியை சரிசெய்து தண்ணீர் வரவழைத்தனர். தெருவிளக்கையும் சரி செய்து எரியவிட்டார்கள். இதை ஏன் முன்பே செய்ய முடியவில்லை.

இன்னும் இரண்டு மாதத்தில் கலெக்டர் எங்க ஊருக்கு அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தருவதாக கூறியிருக்கிறார். இது எங்களுக்குப் பெரும் நம்பிக்கையை விதைத்திருகிறது.

ஊற்று நீர்
ஊற்று நீர்

தற்காலிகமாக எந்த வசதியையும் செய்து தராமல் எங்கள் வாழ்க்கை நிலை நிரந்தரமாக மாற வேண்டும் என்பதுதான் எங்களிடைய கோரிக்கை. அத்துடன் மருத்துவ பரிசோதனை முகாம் நடத்தி எங்கள் பிள்ளைகள் ஏன் குறைபாடுகளுடன் இருக்கிறார்கள் என்பதையும் கண்டறிய வேண்டும். அப்படிச் செய்தால் வரும் தலைமுறையினராவது நன்றாக வாழ்வதற்கு வழிவகையாக இருக்கும். எதையும் போராடி பெருமளவுக்கு எங்களுக்குப் படிப்பறிவு கிடையாது. இந்த அரசும் அதிகாரிகளும் டிஜிட்டல் முறைக்கு மாறிவிட்ட இந்த யுகத்திலாவது எங்கள் தலையெழுத்து முழுமையாக மாற நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர் கண்ணீருடன்.

அடுத்த கட்டுரைக்கு