Published:Updated:

`பச்சை, நீல நிறக் கழிவுகள்; 3 கி.மீ தூரத்துக்கு துர்நாற்றம்!’ - கலவரமூட்டும் மேட்டூர் அணை நிலவரம்

மேட்டூர் அணையின் நீர்த்தேக்கப் பகுதிகளில் பச்சை, நீல நிறங்களில் கழிவுகள் மிதப்பதாகவும் அணையிலிருந்து 3 கி.மீ தூரத்துக்கு துர்நாற்றம் வீசுவதாகவும் மக்கள் புகார் கூறுகிறார்கள்.

மேட்டூர் அணை
மேட்டூர் அணை ( எம். விஜயகுமார் )

மேட்டூர் அணை இந்த வருடத்தில் மட்டும் நான்காவது முறையாக நிரம்பியிருப்பதால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள். ஆனால், அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தேங்கியிருக்கும் நீரில் பச்சை, நீல நிறங்களில் பாசி படர்ந்து துர்நாற்றம் வீசுவதால் குடியிருக்க முடியவில்லை. நோய்த் தொற்று ஏற்படவும் வாய்ப்பிருப்பதாக வேதனை தெரிவிக்கிறார்கள் காவிரிக் கரையோர மக்கள்.

நீர்த்தேக்கத்தில் கழிவு
நீர்த்தேக்கத்தில் கழிவு

இதுபற்றி காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியான நெருப்பூரைச் சேர்ந்த ஞானசெல்வம் கூறுகையில், `மேட்டூர் அணையில் 120 அடி நீர் நிரம்பியிருப்பதால் கடல்போல் காட்சியளிக்கிறது. இது ஒரு பக்கம் மகிழ்ச்சி அளித்தாலும், இன்னொருபக்கம் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. மேட்டூர் அணையின் நீர்த் தேக்கப் பகுதிகளான பண்ணவாடி, கோட்டையூர், காவிரிபுரம், சேத்துக்குழி, கோவிந்தபாடி, நாகமறை, செல்லமுடி, பூச்சூர், ஒட்டனூர், ஏமனூர் போன்ற பகுதியில் தேங்கியுள்ள நீரில் பச்சை, நீலக் கலரில் ஒருவிதமான கழிவு படர்ந்திருக்கிறது.

தொடர்ந்து 27,000 கனஅடி நீர்வரத்து!- 86 ஆண்டுகளில் 41-வது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை

இதனால், தண்ணீரில் மீன், தவளைகள் செத்து மிதக்கின்றன. கால்நடைகள் இந்தத் தண்ணீரை குடிக்க மறுக்கிறது. இந்தத் தண்ணீர்பட்ட செடி, கொடிகளையும் அவைகள் சாப்பிடுவதில்லை. இதனால் ஆடு, மாடுகளை மேய்க்க முடியாத நிலை உள்ளது. தண்ணீரிலிருந்து துர்நாற்றம் வீசுவதால் காவிரிக் கரையோர கிராமங்களில், மக்கள் வசிக்க முடியாதநிலை உள்ளது. கரையிலிருந்து சுமார் 3 கி.மீட்டர் தொலைவுக்கு துர்நாற்றம் வீசுகிறது.

ஞானசெல்வம்
ஞானசெல்வம்

இதனால் நோய் பரவும் அபாயம் இருப்பதாகக் கூறுகிறார்கள். கர்நாடகாவிலிருந்து கழிவுநீர் சாக்கடைகளை காவிரியில் கலந்து விடுவதால் இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது. இதைக் கண்டித்து நாங்கள் சாலை மறியலில் ஈடுபட்டோம். அதையடுத்து அரசு அதிகாரிகள் வந்து மருந்து தெளித்து வருகிறார்கள். இதனால், தற்போது சற்று துர்நாற்றம் அடங்கியிருக்கிறது. பல லட்சம் மக்களுக்கு காவிரி நீர், குடிநீராக இருப்பதால் தமிழக அரசு தலையிட்டு காவிரியில் கலக்கும் சாக்கடைகளைத் தடுத்து நிறுத்த வேண்டும்'' என்றார்.

`முன்பெல்லாம் ஊரே பச்சை... இப்போ மிச்சம் இதுதான்!' - காவிரி படுகையில் கலங்கவைத்த பயணம்

இதுபற்றி வேளாண்மை துறையில் விசாரித்தபோது, ``தற்போது கலெக்டரின் நேரடிப் பார்வையில் இயற்கை முறையில் திறனூட்டப்பட்ட நுண்ணுயிரி மூலம் பாசிகளை அழித்து வருகிறோம். இதனால், துர்நாற்றம் வீசுவதைக் கட்டுக்குள் கொண்டுவந்திருக்கிறோம். மேட்டூர் அணையின் நீர்த்தேக்கப் பகுதிகள் இரண்டு ஆண்டுகள் வறண்டு கிடந்தன. அங்கு 5 முதல் 10,000 ஏக்கர்வரை விவசாயம் செய்துவந்தார்கள்.

பச்சை நிறப் பாசி
பச்சை நிறப் பாசி

திடீரென இந்த ஆண்டு ஒரு லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் வந்ததால் பயிர்களை அறுவடை செய்யாமல் விட்டிருப்பார்கள். இதனால் பாசிகள் உருவாகியிருக்கும். போதிய சூரிய ஒளி இல்லாததால் பாசிகள் செத்ததால் இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது. நீர் இருக்கும் அளவுக்கு மீன் இல்லாததும் காரணமாக இருக்கும். கர்நாடகாவிலிருந்து கழிவுகள் கலக்கிறதா என்று ஆய்வுசெய்து வந்திருக்கிறோம். பல காரணங்களால் இந்தப் பிரச்னை வந்துள்ளது. அதை நீக்குவதற்குக் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டுவருகிறோம்'' என்றார்கள்.