Published:Updated:

நாவலூர் அரசுக் குடியிருப்பு; அடிப்படை வசதிகளின்றி அல்லாடும் மக்கள் - கவனிக்குமா அரசு இயந்திரம்?

நாவலூர்

நாவலூர் அரசுக் குடியிருப்பில் வசித்துவரும் மக்கள், குடிநீர், மருத்துவம், சாலை வசதி என எந்தவித அடிப்படை வசதியும் இல்லாமல் தாங்கள் தவித்துக்கொண்டிருப்பதாகக் குமுறுகிறார்கள்.

நாவலூர் அரசுக் குடியிருப்பு; அடிப்படை வசதிகளின்றி அல்லாடும் மக்கள் - கவனிக்குமா அரசு இயந்திரம்?

நாவலூர் அரசுக் குடியிருப்பில் வசித்துவரும் மக்கள், குடிநீர், மருத்துவம், சாலை வசதி என எந்தவித அடிப்படை வசதியும் இல்லாமல் தாங்கள் தவித்துக்கொண்டிருப்பதாகக் குமுறுகிறார்கள்.

Published:Updated:
நாவலூர்

சென்னை தாம்பரத்தை அடுத்த நாவலூர் அரசுக் குடியிருப்பில் மொத்தம் 2,040 வீடுகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்துவருகின்றனர். நாவலூர் செரபணஞ்சேரி பஞ்சாயத்துக் கட்டுப்பாட்டுக்குள் வரும் இந்தக் குடியிருப்பில் சென்னை எம்.ஜி.ஆர்.காலனி, அரும்பாக்கம், பாடிக்குப்பம், அண்ணாநகர், கூடுவாஞ்சேரி போன்ற பகுதிகளில் வசித்துவந்த மக்கள், அங்கிருந்து வெளியேற்றப்பட்டு, கடந்த ஐந்து ஆண்டுகளாக இங்கு வசித்துவருகின்றனர். சென்னைக்கு வெளியே நாவலூர் குடியிருப்பு இருப்பதால் இங்கு வசிக்கும் மக்கள் பெரிய அளவில் வேலைவாய்ப்பில்லாமல் தவித்து வருகின்றனர்.

நாவலூர் குடியிருப்பு
நாவலூர் குடியிருப்பு

இது தொடர்பாக நம்மிடம் பேசிய நாவலூர் குடியிருப்பைச் சேர்ந்த பரிமளா, ``நாங்க அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி, எங்க இடத்துல இருக்கும்போது நாலு வீட்டில், வீட்டு வேலை செய்தாவது வருமானம் ஈட்டிக்கிட்டு இருந்தோம். இப்போ இங்க நாவலூர்ல எங்களுக்குச் சரியான வேலை இல்லை. ஐம்பது வயசுக்கு மேல உள்ளவங்களை இங்கே யாரும் வேலைக்கு எடுக்க மாட்டேங்கறாங்க. அதேமாதிரி இங்கே நாங்க எந்தவித அடிப்படை வசதியும் இல்லாம தவிச்சுக்கிட்டு இருக்கோம். இங்கே, எங்க குடியிருப்புப் பகுதிக்கு ஆரம்ப சுகாதார நிலையம் இருக்கு. ஆனா, அது இருந்தும் எந்தப் பயனுமில்லாம பூட்டியே கிடக்கு... மருத்துவமனை இல்லாததால இங்கிருந்து படப்பைக்கும், செரப்பணஞ்சேரிக்கும் அலையவேண்டியதா இருக்கு. இரண்டுமே ரொம்ப தூரம். ஏதாவது அவசரம்னு ஆம்புலன்ஸுக்கு போன் பண்ணினாக்கூட வர்றதுக்கு ரெண்டு மணி நேரம் ஆகுது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நாவலூர் குடியிருப்பு
நாவலூர் குடியிருப்பு

தெருவும் ரொம்ப மோசமா இருக்கு. சாலைகள்ல மறுபடியும் தார் போடணும். ஆனா, இன்னும் போடலை. வீடுகள் எல்லாம் சிதிலமடஞ்சு கிடக்கு. எப்போ வீடு இடியுமோன்னு பயமாயிருக்கு. கழிவுநீர் பைப்ல இருந்து கழிவுநீர் வழிஞ்சு இங்கே சுகாதாரச் சீர்கேடு நிலவுது.

நாவலூர் குடியிருப்பு
நாவலூர் குடியிருப்பு

இங்கே எங்களுக்குக் குடிக்கக்கூட தண்ணி இல்லை. வெளியில கேன் வாட்டர் வாங்கித்தான் குடிச்சுக்கிட்டு இருக்குறோம். குளிக்கிறதுக்கும், மத்த பயன்பாடுகளுக்கும் போர் தண்ணியைத்தான் பயன்படுத்திக்கிட்டு வர்றோம். போர் தண்ணியும் இங்கே ரொம்ப மோசமா இருக்கு.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

புள்ளைங்க வெளியில படிக்கப் போகணும்னா ரொம்ப நேரம் பயணிக்கணும். சென்னை தாம்பரத்துக்குப் பேருந்து ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறைதான் வரும். அதுவே கோயம்பேட்டுக்கு விடியற்காலை காலையில் ஒரே ஒரு பேருந்து அவ்வளவுதான். அடிக்கடி பேருந்து வந்தால் நல்லா இருக்கும். இங்கே சென்னை எம்.ஜி.ஆர் காலனி, அரும்பாக்கம், பாடிக்குப்பம், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் வாழ்ந்த மக்களுக்கு மட்டுமே வீடு அலாட் செஞ்சுருக்காங்க. மத்தவங்களுக்கு டோக்கன் மட்டும்தான் கொடுத்திருக்காங்க. டோக்கன் மட்டும் உள்ளவங்களுக்கு வீடு நிரந்தரமில்லை. எல்லாருக்கும் வீடு அலாட் பண்ணணும்னு வலியுறுத்தியும், வேலைவாய்ப்பு போன்ற பல கோரிக்கைகளை முன்வைத்தும் எம்.எல்.ஏ., தொழில்துறை அமைச்சர் உள்ளிட்டவங்களுக்கு மனு கொடுத்திருந்தோம். அதுல ஒரு சில கோரிக்கைகள் மட்டுமே நிறைவேற்றப்பட்டன. இன்னும் பல கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமலேயே இருக்கு. அனைத்துக் கோரிக்கைகளையும் நிறைவேற்ற தொடர்ந்து வலியுறுத்தி மனு அனுப்பிக்கிட்டு இருக்கேன்" என்றார் ஆதங்கமாக.

நாவலூர் குடியிருப்பு
நாவலூர் குடியிருப்பு

குடியிருப்பு மக்களின் குறைகள் குறித்து, செரப்பணஞ்சேரி பஞ்சாயத்துத் தலைவர் ஏழுமலையிடம் பேசினோம். ``நாவலர் குடியிருப்பு, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. வீடு சரியில்லை என்பதற்கும், ரோடு சரி இல்லை என்பதற்கும் நாங்கள் (பஞ்சாயத்து) பொறுப்பேற்க முடியாது. ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தி உயர் பொறுப்பில் உள்ளவர்களிடம் மனு அளித்திருக்கிறோம். எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. குடியிருப்பு மக்களுக்குத் தண்ணீர் பெற்றுத்தரும் வகையில், கிணறு வெட்டும் பணி விரைவில் தொடங்கவிருக்கிறது" என்றார்.

சென்னையின் பிரதான பகுதிகளிலிருந்து நாவாலுரில் தஞ்சம் புகுந்திருக்கும் மக்களுக்கு, குடிநீர், மருத்துவம், சாலை வசதி உள்ளிட்ட வசதிகளைச் செய்துதர வேண்டியது அரசு இயந்திரத்தின் முதன்மைப் பணி... நாவலூர் அரசுக் குடியிருப்பின் நிலைமை மாறுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism