Published:Updated:

‘பல ஆண்டுக்கால கனவு நிறைவேறிடுச்சு; முதல்வருக்கு நன்றி!’ - கொண்டாட்டத்தில் வேலூர் மக்கள்

வரலாற்றுப் புகழ்மிக்க, மிகப்பெரிய மாவட்டமான வேலூரை நிர்வாக வசதிகளுக்காக 3 மாவட்டங்களாகப் பிரித்திருப்பதை பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்.

celebration
celebration

வேலூர் மாவட்டம், பழங்கால நகரங்களில் ஒன்று. பாலாற்றின் கரையில் அமைந்திருக்கும் இந்த பகுதியை பல்லவர்கள், சோழர்கள், நாயக்கர்கள், மராத்தியர்கள், ஆற்காடு நவாப்கள் மற்றும் பிஜப்பூர் சுல்தான் ஆண்டுள்ளனர். 1606-1672 வரையில் விஜயநகர பேரரசின் தலைமையிடமாக செயல்பட்டது. தலைநகரை உருவாக்குவதிலும், அரசுகளை உருவாக்குவதிலும் இந்த மாவட்டத்தில் ஏறக்குறைய 200 ஆண்டுகளாகத் தொடர்ந்து பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. 

Vellore Fort
Vellore Fort

1810-ம் ஆண்டில் முகலாயர்களின் ஆட்சி இறுதியில் வெளியிடப்பட்ட அரசியல் வரைபடத்தில் தென் ஆற்காடு, வட ஆற்காடு பகுதிகள் இடம் பெற்றுள்ளன. 1911-ம் ஆண்டில் வட ஆற்காட்டின் தலைநகராக வேலூர் அறிவிக்கப்பட்டது. வேலூரின் வீரத்துக்கு அடையாளமே இங்குள்ள கோட்டை தான். கி.பி 16-ம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்ட இந்த கோட்டை இந்தியாவில் உள்ள தரைக் கோட்டைகளில் சிறந்ததாகவும், அழகிய கலைநயம் மிக்கதாகவும் திகழ்கிறது. 

ஒரே நுழைவு வாயில் கொண்ட கோட்டையாகவும், அதைச் சுற்றி நீர் சூழ்ந்ததாகவும் கட்டப்பட்டுள்ளன. சுமார் 136 ஏக்கர் பரப்பளவு கொண்ட கோட்டையை சுற்றி அகழியின் அகலம் 191 அடி, ஆழம் 29 அடி. இந்தியாவின் ஏழு அதிசயங்களில் ஒன்றாகவும் வேலூர் கோட்டை வரலாறு படைத்திருக்கிறது. 1806-ல் வேலூர் கோட்டையில் நடைபெற்ற முதல் சிப்பாய் புரட்சி கலகம் தான் இந்திய சுதந்திர போராட்டத்திற்கான ஆரம்பம். தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் சிப்பாய் புரட்சி தினம் அனுசரிக்கப்பட்டுவருகிறது. 

Vellore Central Prison
Vellore Central Prison

பரப்பளவில் மிகப்பெரிய மாவட்டமான வேலூரை நிர்வாக காரணங்களுக்காக மூன்றாகப் பிரிக்கவேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்தனர். இதற்காக, பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பலமுறை போராட்டம் நடத்தியிருக்கிறார். மேற்கில் உள்ள திருப்பத்தூரிலிருந்தும், கிழக்கில் உள்ள அரக்கோணத்திலிருந்தும் வேலூர் வரவேண்டும் என்றால் 100 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க வேண்டும்.

வேலூரில் உள்ள கலெக்டர் அலுவலகம் மற்றும் எஸ்.பி அலுவலகத்துக்கு வருவதற்கு சுமார் 3 மணி நேரம் ஆகிறது. இதற்கே ஒரு நாள் முழுக்க செலவிடவேண்டும். இந்த நிலையில், ஆளும்கட்சி அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்களும் மாவட்டத்தைப் பிரிக்க குரல் கொடுத்தனர். அதற்கான பலன் சுதந்திர தினவிழாவான இன்று கிடைத்திருக்கிறது. திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை என வேலூர் மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

celebration
celebration

இந்த அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்து பொதுமக்களும், ஆளுங்கட்சியினரும், பா.ம.க-வினரும் கொண்டாடிவருகிறார்கள். பொதுமக்கள் கூறுகையில், ‘‘எங்களின் நீண்ட நாள் கனவு இப்போதுதான் பலித்திருக்கிறது. வேலூர் மாவட்டத்தில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் என 3 வருவாய் கோட்டங்கள் உள்ளன. அந்த கோட்டங்கள் இன்று மாவட்டங்களாக உருமாறியிருக்கிறது. கலெக்டர் ஆபீஸுக்கு வர ஒரு நாள் முழுவதையும் செலவிடத் தேவையில்லை. வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பைக் கூறிய முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி’’ என்றனர்.