Published:Updated:

`எங்கள் ஜனநாயக உரிமையைப் பறித்துவிட்டனர்!'- வார்டு மறுவரையறை குளறுபடியால் கொதித்த வேலூர் மக்கள்

வார்டுகளை மறுவரையறை செய்ததில் குளறுபடி இருப்பதாகக் கூறி வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் அடையாள அட்டைகளை வீசியெறிந்து பொதுமக்கள் போராட்டம் செய்தனர். இதனால், அங்குப் பரபரப்பு காணப்பட்டது.

போராட்டம் செய்த மக்கள்
போராட்டம் செய்த மக்கள்

வேலூர் மாநகராட்சியில் மொத்தம் 60 வார்டுகள் உள்ளன. இவற்றை நான்கு மண்டலங்களாகப் பிரித்து நிர்வகிக்கிறார்கள். இந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தலையொட்டி, வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்டன. எல்லை வார்டுகளை மாற்றி அமைத்ததில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாகப் பொதுமக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டிவருகிறார்கள். 

வேலூர் மாநகராட்சி அலுவலகம்
வேலூர் மாநகராட்சி அலுவலகம்

மாநகராட்சியின் நான்கு மூலைகளிலும் எதிர்ப்புகள் கிளம்பியிருக்கின்றன. அந்த வகையில், மாநகராட்சியின் 58-வது வார்டில் இருந்த அரியூர் மலைக்கோடி விஸ்வநாத நகரை மறுவரையறைக்குப் பிறகு 59-வது வார்டில் இணைத்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதியைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் இன்று கலெக்டர் அலுவலகம் வந்தனர். 

கையில் பதாகைகளை ஏந்தி கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, ஆதார் கார்ட்டை திரும்ப ஒப்படைப்பதாகக் கூறி வீசியெறிந்தனர். ‘‘ஊராட்சியாக இருந்த போதிலிருந்து மாநகராட்சி பகுதியாக மாறிய பிறகும் எங்கள் பகுதியிலேயேதான் வாக்குகளைச் செலுத்திவருகிறோம்.

போராட்டம் செய்த மக்கள்
போராட்டம் செய்த மக்கள்

இப்போது, திடீரென பக்கத்து வார்டான சித்தேரியுடன் எங்கள் பகுதியை சேர்த்துள்ளனர். எங்களின் ஜனநாயக உரிமையைப் பறித்துவிட்டனர். அங்குள்ள வாக்குச்சாவடிக்குப் போய் நாங்கள் ஓடப் போடமாட்டோம். மீண்டும் 58-வது வார்டிலேயே எங்களின் பகுதியை இணைக்க வேண்டும். அப்போதுதான் ஓட்டுப்போடுவோம்’’ என்றனர் கொதிப்புடன். 

மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும் கோஷம் எழுப்பினர். கலெக்டர் அலுவலக தாசில்தார் (நிலம்) பாலாஜி, பொதுமேலாளர் முரளி அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதிகாரிகளிடம், ‘பலமுறை மனு கொடுத்தும் கண்டுகொள்ளவில்லை. உடனே, எங்களின் கோரிக்கையை ஏற்று உத்தரவாதம் கொடுக்கவேண்டும்’ என்றுகூறி வாக்குவாதம் செய்தனர்.

பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அதிகாரிகள்
பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அதிகாரிகள்

அதிகாரிகள், ‘இந்த முறை மனு கொடுங்கள், கலெக்டரின் கவனத்துக்கு கொண்டுசெல்கிறோம். நிச்சயமாக உங்கள் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்’ என்றனர். அதையடுத்து, போராட்டத்தைக் கைவிட்ட மக்கள் வீசியெறிந்த அடையாள அட்டைகளைக் கையில் எடுத்துக்கொண்டனர். அதிகாரிகளிடம் மனுக்களைக் கொடுத்துவிட்டு புறப்பட்டுச் சென்றனர்.