Published:Updated:

`சென்னை மாநகராட்சியே இப்படிச் செய்யலாமா?' - அதிர்ச்சி கொடுத்த நடைபாதை சுவர்

சென்னை புதுப்பேட்டையில் செயல்படும் சென்னை மாநகராட்சியின் மருத்துவமனையையொட்டியுள்ள பிளாட்பாரத்தில் திடீரென காம்பவுன்ட் சுவர் கட்டப்பட்டுள்ளதால் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்கின்றனர்.

பிளாட்பாரத்தில் சுவர் கட்டும் மாநகராட்சி
பிளாட்பாரத்தில் சுவர் கட்டும் மாநகராட்சி

சென்னை புதுப்பேட்டை லாங்கஸ் கார்டன் சாலையில் சென்னை மாநகராட்சி புதுப்பேட்டை நலவாழ்வு மையம் செயல்பட்டுவருகிறது. இங்கு தினமும் ஏராளமானவர்கள் வந்து செல்வதுண்டு. இந்த மையத்தையொட்டி பொதுமக்கள் நடந்து செல்ல வசதியாக நடைபாதை அமைக்கப்பட்டிருந்தது. திடீரென இந்தப் பாதையில் மக்கள் நடந்து செல்ல முடியாத அளவுக்கு மாநகராட்சி சார்பில் சுற்றுச்சுவர் கட்டும் பணி நடந்துவருகிறது. இதனால் சாலையில்தான் மக்கள் நடந்து செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. சாலையில் பொதுமக்கள் நடந்து செல்வதால் போக்குவரத்து நெரிசலும் விபத்தும் ஏற்பட வாய்ப்புள்ளதாக அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.

பஷீர்
பஷீர்

இதுகுறித்து அந்தப் பகுதியில் கடை நடத்திவரும் பஷீர், ``தினமும் இந்த வழியாகத்தான் கடைக்குச் செல்வேன். ஆஸ்பத்திரியின் அருகே மக்கள் நடந்து செல்லும் பாதையை வழிமறித்ததால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. சமீபத்தில் சென்னையில் பேனர் விழுந்து சுபஸ்ரீ என்பவர் பலியானார். அதன் பிறகே அனைத்து பேனர்களையும் அகற்ற நடவடிக்கை எடுத்தனர். அதைப்போலதான் புதுப்பேட்டையில் விபத்து ஏற்பட்ட பிறகுதான் மக்கள் நடந்துசெல்ல பிளாட்பார வசதியை ஏற்படுத்தித் தருவார்களா?" என்றார்.

இதுகுறித்து மாநகராட்சியின் உதவி இன்ஜினீயர் பால முத்துராமனிடம் கேட்டதற்கு, ``புதுப்பேட்டையில் செயல்பட்டு வரும் மாநகராட்சியின் மருத்துவமனைக்குத் தினமும் கர்ப்பிணிகள் வருவதுண்டு. மருத்துவமனையையொட்டி உள்ள பிளாட்பாரத்தில் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் வாகனங்களை நிறுத்தி வைத்து இடையூறு செய்துவந்தனர். மேலும், குப்பைகளையும் அங்கு போடுவதால் தூர்நாற்றம் வீசுவதாக மருத்துவமனை தரப்பில் எங்களுக்குப் புகார்கள் வந்தன.

பிளாட்பாரத்தில் சுவர் கட்டும் மாநகராட்சி
பிளாட்பாரத்தில் சுவர் கட்டும் மாநகராட்சி

இதுகுறித்து மருத்துவமனை சார்பில் கொடுக்கப்பட்ட புகாரின்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு நடத்திய பிறகு உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. அதன்பிறகுதான் காம்பவுன்ட் சுவர் கட்ட முடிவு செய்யப்பட்டது. ஏற்கெனவே, கடந்த ஆண்டு மருத்துவமனை அருகில் போடப்பட்ட குப்பையால் தீ விபத்து ஏற்பட்டு நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மேலும், மருத்துவமனையில் ஆவணங்களும் நாசமாகின" என்றார்.

மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், அவர்களின் உறவினர்கள் கூறுகையில், ``இந்த மருத்துவமனைக்கு ஏழை எளியவர்கள்தாம் அதிகம் வருவதுண்டு. மருத்துவமனையின் அருகிலிருந்த பிளாட்பாரத்தில் காம்பவுன்ட் சுவர் கட்டப்படுவதால் சாலையில்தான் நோயாளிகள் நடந்துவர வேண்டியதுள்ளது. குறிப்பாக, கர்ப்பிணிகள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். அரசு இடத்தை ஆக்கிரமித்தால் மாநகராட்சியிடம் புகார் கொடுக்கலாம். ஆனால், மாநகராட்சியே பிளாட்பாரத்தில் சுவர் கட்டினால் யாரிடம் புகார் கொடுப்பது என்று எங்களுக்குத் தெரியவில்லை" என்றனர்.

`சென்னை மாநகராட்சியே இப்படிச் செய்யலாமா?' - அதிர்ச்சி கொடுத்த நடைபாதை சுவர்

மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ``பிளாட்பாரத்தில் மக்கள் நடந்து செல்ல முடியாதளவுக்கு அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலர் வாகனங்களை நிறுத்தி வைத்து இடையூறு செய்துவந்தனர். மேலும் குப்பைத்தொட்டியில் குப்பைகளைப் போடாமல் மருத்துவமனையில் காம்பவுன்ட் சுவரின் அருகிலேயே கொட்டிவந்தனர். அந்த இடத்தில்தான் ஸ்கேன் சென்டர் உள்ளது. இந்த துர்நாற்றத்தால் கர்ப்பிணிகள் பல்வேறு சிரமங்களைச் சந்தித்துவந்தனர். நடைபாதையை வழிமறித்து காம்பவுன்ட் சுவர் கட்ட வேண்டும் என்பது எங்களின் நோக்கமல்ல" என்றனர்.