Published:Updated:

`காளை விடும் விழாவுக்கு கடும் கட்டுப்பாடு!’ -இணையதள நடைமுறைக்கு வேலூரில் எதிர்ப்பு

`காளை விடும் விழா நடத்துவதற்கும், போட்டியில் பங்கேற்கும் காளை குறித்தும் இணையத்தில் விண்ணப்பிக்க வேண்டும்’ என்ற நடைமுறைக்கு இளைஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சீறும் காளை
சீறும் காளை

பொங்கல் பண்டிகை நெருங்கிவிட்டதால், தமிழர்களின் பாரம்பர்ய வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, ரேக்ளா ரேஸ், எருதுவிடும் விழாக்களை நடத்த, காளைகள் தயார்படுத்தப்பட்டுவருகின்றன.

விழாவுக்குத் தயார்படுத்தப்படும் காளை
விழாவுக்குத் தயார்படுத்தப்படும் காளை

இந்த நிலையில், `எருது’ விடும் விழாவுக்கு பிரத்தியேக இணைய தளத்தை உருவாக்கி, ‘அதில் விண்ணப்பித்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படும்’ என்று வேலூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்திருப்பதற்கு, காளை வளர்ப்போரும் மாடுபிடி வீரர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

http://velloredt.in என்ற முகவரியுடன் தமிழ் மொழியில் பதிவுசெய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள அந்த இணையத்தளத்தில், விழாக் குழுவினரும் காளை உரிமையாளர்களும் முன்பதிவுசெய்து, அனுமதிச் சீட்டை டவுண்லோடு செய்துகொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

காளை
காளை

எருது விடும் விழாவுக்கான முன்பதிவு நேற்று காலை 10 மணிக்கே தொடங்கிய நிலையில், வரும் 31-ம் தேதி மாலை 6 மணி வரை விண்ணப்பிக்கலாம். விழாவில் பங்கேற்கும் காளைகளுக்கான முன்பதிவும், நேற்று தொடங்கி ஜனவரி 7-ம் தேதி மாலை 6 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

`தமிழகத்திலேயே முதல் முறையாக இணையதள நடைமுறை வேலூர் மாவட்டத்தில்தான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக’ கலெக்டர் சண்முகசுந்தரம் கூறியிருந்தார். ஆனால், இந்த நடைமுறை பாரம்பர்ய விளையாட்டுகளை ஒடுக்குவதைப்போன்று இருப்பதாகக் காளை வளர்க்கும் இளைஞர்கள் கொந்தளிக்கிறார்கள்.

சீறும் காளை
சீறும் காளை

`நகர்ப்புறத்தில் யாரும் காளைகளை வளர்ப்பதில்லை. கிராமத்தில் உள்ள விவசாயிகள்தான் காளைகளை வளர்த்து மஞ்சு விரட்டு, எருது விடும் விழாவுக்குத் தயார்செய்கிறோம். எத்தனை பேருக்கு இணையத்தில் பதிவுசெய்யத் தெரியும்? எனவே, இணைய நடைமுறையைக் கைவிட வேண்டும்!' என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.