Published:Updated:

`சந்தேகங்களை கூகுள்தான் தீர்க்குது!'- ஆன்லைன் பயிற்சியில் தாத்தா, பாட்டிகள் ஆர்வம் #MyVikatan

ஆன்லைன் பயிற்சி முகாம்
ஆன்லைன் பயிற்சி முகாம்

இணையதளம் என்பது இளைய தலைமுறைக்கு மட்டுமான ஆடுகளம் அல்ல. மூத்த குடிமக்களுக்கும் முக்கியமான இடம்.

இணையதளம் என்பது இளைய தலைமுறைக்கு மட்டுமான ஆடுகளம் அல்ல. மூத்த குடிமக்களுக்கும் முக்கியமான இடம். இதற்கான சாட்சி , அக்டோபர் 12 மற்றும் 13-ம் தேதிகளில் புதுக்கோட்டையில் நடைபெற்ற இரண்டு நாள் இணைய தமிழ்ப் பயிற்சி முகாம்.

இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை புதுக்கோட்டை கணினித் தமிழ்ச் சங்கமும் வீதி கலை இலக்கியக் களமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. இம்முகாமில், தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்து ஏராளமானோர் கலந்துகொண்டனர். இரண்டு நாள்கள் நடைபெற்ற இம்முகாமில், மின்னஞ்சல் தொடங்குவது, சமூக வலைதளங்களைப் பாதுகாப்பாகக் கையாள்வது, தமிழில் வலைப்பூக்கள் உருவாக்குவது, தமிழில் யூடியூப் சேனல் ஆரம்பிப்பது, தமிழில் பிழை இல்லாமல் எழுதுவதற்கான தளங்களைப் பயன்படுத்துவது, விக்கி பீடியாவில் தமிழில் கட்டுரைகள் எழுதுவது, குரல் வழி தமிழில் டைப் செய்வது, மின் போஸ்டர்கள் வடிவமைத்தல் போன்ற பல்வேறு பயிற்சிகளும் அளிக்கப்பட்டன.

ஆன்லைன் பயிற்சி முகாம்
ஆன்லைன் பயிற்சி முகாம்
`இது கடனில்லை, உதவி!'‍- 3 பிள்ளைகளுடன் தவித்த பெண்ணுக்கு வாழ்வு கொடுத்த 3 பேர் #MyVikatan

முதல் நாள் தொடக்க விழாவில், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் ம.ராஜேந்திரன் கலந்துகொண்டு தலைமைவகித்துப் பேசினார். அப்போது அவர் , " இணையம் இன்று ஜாதியை உடைத்திருக்கிறது. மதங்களைக் கடந்து நிற்கிறது. மொழிகளை உடைத்துப்போட்டுவருகிறது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக மனித நேயம் என்கிற ஒற்றைப் புள்ளியையும் உருவாக்கி வருகிறது. நேருக்கு நேர் பார்த்துக்கொள்ளும்போது பேசத் தயங்குகிற மனிதர்கள்கூட, ஒருவருடைய சமூக வலைதளங்களில் பகிரப்படும் கருத்துகளுக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும் தெரிவித்து, தங்களுடைய எண்ணங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள். இது ஒரு வரவேற்கத்தக்க அம்சம். இணையம் ஜாதி, மத, பேதம் இல்லாத இணைப்பை நமக்குத் தருகிறது. குறிப்பாக, மற்றவர்கள் பாராட்டும் குணத்தை நமக்கு இணையம்தான் இன்று வளர்த்துவருகிறது’’ என்றார்.

இந்த முகாமில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமானோர் கலந்துகொண்டனர். குறிப்பாக, பள்ளி மாணவர்கள், இளம் வயதினர் என்பவர்களைத் தாண்டியும் மூத்த குடிமக்கள் பலரும் கலந்துகொண்டு பயிற்சிபெற்றது, இந்த முகாமின் முக்கிய அம்சம். அவ்வாறு பயிற்சிபெற்றவர்களில் ஒருவரான புதுக்கோட்டையைச் சேர்ந்த ராஜேந்திர சிங் என்பவர், பத்திரப் பதிவுத்துறையிலிருந்து ஓய்வுபெற்ற முன்னாள் அரசு ஊழியர். அவருடைய வயது தற்போது 70. இத்தனை வயதிலும் ஆர்வத்துடன் வந்து முகாமில் கலந்துகொண்டார்.

ராஜேந்திரசிங்
ராஜேந்திரசிங்

அவர் பேசுகையில், "இணையத்தில் ஏராளமான வசதிகள் வந்துக்கிட்டிருக்கு. இன்று, இந்த ஆன்லைன் இல்லாமல் எதுவுமே செய்யமுடியாத ஒரு சூழ்நிலை வந்திடுச்சு. அதனாலதான், இதை நானும் தெரிஞ்சுக்க வந்தேன். நல்ல விஷயங்களைக் கற்றுக் கொள்வதற்கு வயது எப்போதுமே ஒரு தடையில்லை. புதுசு புதுசாக நாம் கற்றுக்கொள்ளும்போதுதான், நாம் இன்னும் இளமையாகவும் இன்னும் துடிப்பாகவும் செயல்பட முடியும்.

என்னுடைய நண்பர்களுக்கு இ-மெயில் அனுப்புவது, தமிழில் தட்டச்சு செய்து இதழ்களுக்கு படைப்புகள் அனுப்புவது, பயணச் சீட்டுகள் பெறுவது, வெளியூருக்குச் செல்லும்போது தங்கும் விடுதிகளை முன்பதிவுசெய்வது, ஆன்லைனில் பணப்பரிவர்த்தனை செய்வது போன்ற வசதிகள் எல்லாம் இன்று இணையத்தில் வந்துவிட்டன. இதை நாம் எப்படி கற்றுக் கொள்ளாமல் இருப்பது?" என்றார் ராஜேந்திரசிங்.

`ரொம்ப வேகமானது, அதேசமயம் விசுவாசமானது!'- கன்னி இன நாய்களைக் காக்கப் போராடும் முனியாண்டி #MyVikatan

அதேபோல், இந்த முகாமில் கலந்துகொண்ட மூத்த குடிமக்களில் ஒருவர் புதுக்கோட்டையைச் சேர்ந்த ஜெயலட்சுமி. அவர் நம்மிடம், "எனக்கு வயது 68 ஆகுது. என்னுடைய கணவர் காவல்துறையில் நிர்வாகப் பிரிவில் வேலை செஞ்சுட்டு ஓய்வு பெற்றவர். அவரும் நானும் ரொம்ப ஆர்வத்தோட இந்த பயிற்சி முகாமுக்கு வந்திருக்கோம். இளைய தலைமுறை எல்லாருமே ஆன்லைன் வசதியைப் பயன்படுத்துறாங்க. இதை ஏன் நாம தெரிஞ்சுக்கக் கூடாது? நான் ஒரு ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவள். இந்த ஆன்லைனில் கற்றுக்கொள்ளக்கூடிய விஷயங்களும் பகிர்ந்துகொள்ளக்கூடிய விஷயங்களும் நிறைய இருக்கு.

ஜெயலட்சுமி
ஜெயலட்சுமி

நம்முடைய தமிழ் மொழியை உலகம் எங்கும் எளிதில் எடுத்துச் செல்லும் மேடையாக ஏராளமாக இணையதளங்கள் இருக்கின்றன. அதை நாம் முறையாகப் பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவே, நானும் இந்த முகாமில் கலந்துகொண்டேன். எங்களுக்கு ஏராளமான தகவல் தொழில்நுட்ப விஷயங்கள் கிடைச்சது. ஆன்லைன்ல கிடைக்கிற மிகப்பெரிய வசதிகளையும் வாய்ப்புகளையும் நாம தவறவிடக்கூடாது. இந்த நல்ல காரணங்களுக்காகத்தான் இந்தப் பயிற்சி முகாமில் என்னுடைய கணவரும் நானும் கலந்துகொண்டோம்" என்று மகிழ்ச்சியோடு சொல்கிறார் ஜெயலட்சுமி.

இதில் கலந்துகொண்ட ஏழாம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவன் அகிலன், "பள்ளிக்கூடத்துல தீர்க்கப்படாத சந்தேகங்களைக்கூட கூகுள்தான் நமக்கு தீர்த்துவைக்குது. இன்னைக்கு புதுசு புதுசா எவ்வளவோ வசதிகள் இன்டர்நெட்டிலே வந்துக்கிட்டு இருக்கு. இதுல தவறான விஷயங்களும் இருக்கு. அதை அடையாளம் கண்டு, அதிலிருந்து நம்மைப் பாதுகாக்கவும் இந்தப் பயிற்சி எனக்கு உபயோகமா இருந்துச்சு. அதேமாதிரி, விக்கிபீடியாவிலே நான் கட்டுரைகள் எழுத ரொம்பக் காலமா ஆசை. அதை இங்கே வந்து தெளிவாகவே கத்துக்கிட்டேன்" என்கிறார். முகாமின் இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் கவிஞர் ஆதவன் தீட்சண்யா கலந்துகொண்டு உரையாற்றினார்.

அகிலன்
அகிலன்

"இந்த இரண்டு நாள் முகாமில், பள்ளி மாணவர்கள் முதல் மூத்த குடிமக்கள் வரை அனைத்து தரப்பினரும் கலந்துகொண்டது இணையத்தின்மீது இன்றைய மக்களுக்கு இருக்கும் மிகப்பெரிய ஆர்வத்தை தெளிவாய்க் காட்டியது. இணையத்தில், ஏ.டி.எம் இயந்திரங்களில், செல்போன்களில் தமிழ் மொழியை அனைவரும் அதிகமாய்ப் பயன்படுத்த பயன்படுத்தத்தான் அதன் மதிப்பு சர்வதேச அளவில் உயரும்.

கவிஞர் ஆதவன் தீட்சண்யா
கவிஞர் ஆதவன் தீட்சண்யா

அப்போதுதான், தமிழின்மீது உலகத்தின் பார்வை படும். அதற்கான ஒரு சிறு பொறிதான் இந்த இரண்டு நாள் இணையத்தமிழ்ப் பயிற்சி முகாம்" என்று பூரிப்புடன் கூறுகின்றனர் இம்முகாமின் ஒருங்கிணைப்பாளர்களான கவிஞர் நா.முத்துநிலவனும் மு.கீதாவும்.

இரண்டு நாள் முகாமில், தமிழ் இணையத்துறை சார்ந்த முக்கியமான வல்லுநர்களான திண்டுக்கல் தனபாலன், பேராசிரியர் முனைவர் மு.பழனியப்பன், பிரின்ஸ் என்னரெசு பெரியார், 'நீச்சல்காரன்' ராஜாராம், எஸ்.பி.செந்தில்குமார் கஸ்தூரிரங்கன், ஸ்ரீ மலையப்பன், த.ரேவதி போன்ற பலரும் பயிற்சி அளித்தனர்.

-பழ.அசோக்குமார்

My Vikatan
My Vikatan

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காக களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு