Published:Updated:

` 36 அடி ஆழத்தில் இருந்தபோதே மீட்டிருக்க முடியும்!' - சுர்ஜித்துக்கு அஞ்சலி செலுத்திய ஸ்டாலின்

ஆழ்துளைக் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை சுர்ஜித்தின் உடல் மணப்பாறையை அடுத்த பாத்திமாபுதூர் கல்லறையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

சுஜித் உடல் நல்லடக்கம்
சுஜித் உடல் நல்லடக்கம்

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நடுக்காட்டுப்பட்டியில் உள்ள சுர்ஜித்தின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பாத்திமாபுதூரில் உள்ள சுர்ஜித் கல்லறையில் மாலை வைத்து ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். அவருடன் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, திருச்சி சிவா, திருநாவுக்கரசர், ஜோதிமணி ஆகியோர் உடனிருந்தனர்.

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், “ சுர்ஜித்தை மீட்கும் பணியில் தமிழக அரசு மெத்தனமாக செயல்பட்டு உள்ளது. 36 அடி ஆழத்தில் இருந்தபோதே, குழந்தையை மீட்டிருக்க முடியும், பேரிடர் மீட்புப் படையை உடனடியாக அழைத்திருக்க வேண்டும். தமிழக அரசு இனிமேல் இதுபோன்று நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்” என்றார். இதனைத் தொடர்ந்து சிறுவன் சுர்ஜித்தின் குடும்பத்துக்கு ரூ.10 லட்ச ரூபாய் நிதிக்கான காசோலையை தி.மு.க தலைவர் ஸ்டாலின் வழங்கினார்.

சுர்ஜித் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், நடிகர் விமல் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். மெழுகுவர்த்தி ஏற்றியும் மாலைகள் இட்டும் சுர்ஜித்துக்குப் பொதுமக்கள் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

சுர்ஜித் உடல் நல்லடக்கம்
சுர்ஜித் உடல் நல்லடக்கம்
குழந்தை சுர்ஜித் உடல் நல்லடக்கம்! - கண்ணீர்மல்க விடைகொடுத்த மக்கள்

மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியில் வீட்டுக்குப் பின்புறம் இருந்த ஆழ்துளைக் கிணற்றில் குழந்தை சுர்ஜித், கடந்த அக்டோபர் 25-ம் தேதி மாலை 5.40 மணியளவில் தவறி விழுந்தான். குழந்தையை உயிருடன் மீட்பதற்காக 80 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற மீட்புப் பணி தோல்வியில் முடிந்தது. சிறுவன் சுர்ஜித், உயிரிழந்துவிட்டதாக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் நள்ளிரவில் அறிவித்தார்.

அதிகாலை 4.30 மணியளவில் ஆழ்துளைக் கிணற்றிலிருந்து சுர்ஜித்தின் உடல் மீட்கப்பட்டது. மணப்பாறை அரசு மருத்துவமனையில் பிரதேப் பரிசோதனை முடிந்து குழந்தையின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

கடவுளே இரக்கம் இல்லையா? - சுர்ஜித் அஞ்சலியில் கதறி அழுத பொதுமக்கள் 

அதன்பின்னர் மணப்பாறையை அடுத்த பாத்திமாபுதூர் கல்லறையில் குழந்தை சுர்ஜித்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அஞ்சலிக்குப் பின்னர் குழந்தை சுர்ஜித்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. சுர்ஜித் விழுந்த ஆழ்துளைக் கிணறு மற்றும் மீட்புப் பணிக்காகத் தோண்டப்பட்ட குழி ஆகியவை கான்க்ரீட் கலவையால் மூடப்பட்டன.