Published:Updated:

கூடங்குளம் அணு உலை வளாகம் அருகே கல் குவாரி; அனுமதியை ரத்து செய்ய பொதுமக்கள் கோரிக்கை!

கல் குவாரி எதிர்ப்பு போராட்டம்
கல் குவாரி எதிர்ப்பு போராட்டம்

கூடங்குளம் அணு உலை வளாகம் பாதுகாக்கப்பட்ட பகுதியாக இருக்கும் நிலையில், அதன் அருகிலேயே பத்துக்கும் அதிகமான கல் குவாரிகள் செயல்படுவதால் பாதுகாப்பு கருதி அவற்றின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்கிறார்கள்.

கூடங்குளம் கிராமத்திலிருந்து 8 கி.மீ தொலைவில் இருக்கிறது இருக்கன்துறை ஊராட்சி. இந்தப் பகுதியில் பத்துக்கும் அதிகமான கல் குவாரிகள் அரசு அனுமதியுடன் இயங்கிவருகின்றன. கல் குவாரி உரிமையாளர்கள், விதிகளை மீறி சக்தி வாய்ந்த வெடிகளைப் பயன்படுத்துவதாக அந்தப் பகுதி மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

கல் குவாரி
கல் குவாரி

வெடிகளின் காரணமாக வீடுகளில் விரிசல் ஏற்படுவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். அணு உலை வளாகம் அருகிலிருக்கும் நிலையில், சுரங்கங்களின் வெடிகளால் அணு உலையின் உறுதித்தன்மை பாதிக்கும் என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டு.

சுற்றிலும் விவசாய நிலங்கள் உள்ள நிலையில், இருக்கன்துறை பகுதியில் ஆங்காங்கே கல் குவாரிகள் செயல்பட அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது. அவற்றில் ஆழமாகத் தோண்டப்படுவதால், அருகிலிருக்கும் விவசாய நிலங்களின் நீர் மட்டம் கீழே செல்வதா,ல் வறட்சியால் விவசாயம் செய்ய முடியாத நிலை உருவாகிவருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கிறார்கள்.

வீடுகளில் ஏற்பட்டுள்ள விரிசல்
வீடுகளில் ஏற்பட்டுள்ள விரிசல்

அத்துடன், குவாரிகளில் எடுக்கப்படும் கனிமங்களை அதிக பாரத்துடன் லாரிகளில் ஏற்றிச் செல்லப்படுவதால் கிராமப் பகுதிகளிலுள்ள சாலைகள் சீரழிந்து குண்டும் குழியுமாகக் கிடக்கின்றன. லாரிகளில் கொண்டு செல்லப்படும் கற்கள் சாலைகளில் சிதறுவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்குகிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கல் குவாரி அனுமதியை ரத்து செய்யக் கோரி அதிகாரிகளிடம் முறையீடு செய்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ராதாபுரம் குழு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் மாயகிருஷ்ணன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், கல் குவாரிகளின் அனுமதியை ரத்து செய்யக் கோரி கோஷங்களை எழுப்பினர்.

கல்குவாரிக்கு எதிரான ஆர்ப்பாட்டம்
கல்குவாரிக்கு எதிரான ஆர்ப்பாட்டம்

தங்களின் வாழ்வாதாரமான விவசாயம் பாதிக்கப்படுவதுடன், வீடுகள் இடிந்துவிழும் நிலை ஏற்பட்டிருப்பதாக அவர்கள் புகார் தெரிவித்தனர். அத்துடன், அணு உலை கட்டுமானப் பணிகளும் பாதிக்கப்பட்டு பெரும் ஆபத்து ஏற்படும் சூழல் ஏற்பட்டிருப்பதால் அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் வலியுறுத்தினார்கள்.

அடுத்த கட்டுரைக்கு