Published:Updated:

திருவள்ளூர்: கால்வாயில் பச்சிளம் குழந்தை, தாய்ப்பாலூட்டிய பெண்... நெகிழ்ச்சி சம்பவம்!

மீட்கப்பட்ட குழந்தை
மீட்கப்பட்ட குழந்தை

திருவள்ளூர் மாவட்டம் பொன்னரி அருகே பிறந்து சில நேரமே ஆன பச்சிளம் குழந்தை ஒன்று கழிவுநீர் கால்வாயில் வீசப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பொன்னேரியை அடுத்த திருவேங்கடபுரம் பகுதி அருகே தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. கனரக வாகனங்கள் மிகுதியாக ஊர்ந்து சென்று கொண்டிருக்கும் இந்த நெடுஞ்சாலையின் சாலையோர கழிவுநீர் கால்வாயில் இருந்து பச்சிளம் குழந்தை ஒன்றின் அழுகுரல் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளின் காதுகளில் விழுந்திருக்கிறது. குழந்தையின் அழுகுரலைக் கேட்டுப் பதறிப்போன பொதுமக்கள் உடனடியாக சத்தம் வந்த கால்வாய் அருகே சென்றிருக்கின்றனர். கால்வாயை எட்டிப் பார்த்தவர்கள் பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தை ஒன்று சாக்கடை நீரில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பொன்னேரி அரசு பொது மருத்துவமனை
பொன்னேரி அரசு பொது மருத்துவமனை

அதனைத் தொடர்ந்து, மக்கள் உடனடியாகக் கால்வாயில் இறங்கி குழந்தையை மீட்டு மேலே கொண்டுவந்தனர். குழந்தை கால்வாயில் வீசப்பட்டுள்ள சம்பவம் தீயாய் பரவியதைத் தொடர்ந்து பொதுமக்கள் உடனடியாக ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த அதிகாரிகள் பச்சிளம் குழந்தையைப் பத்திரமாக மீட்டு பொன்னேரி தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

அங்கு, மருத்துவர்கள் குழந்தைக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சைகள் அளித்து குழந்தையின் உயிரைக் காப்பாற்றினர். பச்சிளம் குழந்தை பசியால் அழுததைக் கண்டு மருத்துவமனையில் பிரசவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்து அந்த சிசுவின் பசியை ஆற்றி தன் குழந்தைக்கு வைத்திருந்த ஆடைகளை அந்த குழந்தைக்கு அணிவித்தார். மேலும், அன்றைய தினம் மருத்துவமனை வளாகத்தில் நடத்தப்பட்ட போலியோ சொட்டு மருந்து முகாமில் அந்த குழந்தைக்கும் மருத்துவர்கள் போலியோ சொட்டு மருந்து வழங்கி குழந்தையின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தினர். தொடர்ந்து, பொன்னேரி காவல் நிலையத்தில் மருத்துவர்கள் சம்பவம் குறித்து தகவல் அளித்துவிட்டு, குழந்தையை திருவள்ளூரில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

மருத்துவர் அனுரத்னா
மருத்துவர் அனுரத்னா

இந்த சம்பவம் தொடர்பாக பொன்னேரி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் அனுரத்னாவிடம் பேசினோம். `` கடந்த சில தினங்களுக்கு முன்பு, பொன்னேரி கிராம மக்கள் பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தை ஒன்றை கழிவுநீர் கால்வாயில் இருந்து மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு வந்தனர். நாங்கள் உடனடியாக குழந்தையை சுத்தம் செய்து சிகிச்சையை ஆரம்பித்தோம். இன்னும் சில மணி நேரம் தாமதமாகக் கொண்டு வந்திருந்தால் கூட குழந்தையின் நிலை மிகவும் மோசமாகி இருந்திருக்கும். ஆனால், தக்க நேரத்தில் கொண்டு வந்ததால் எங்களால் குழந்தையைக் காப்பாற்ற முடிந்தது. தேவையான முதலுதவிகளைக் குழந்தைக்குச் செய்த பின்னர், குழந்தையின் அழுகுரல் கேட்டு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் தாய்ப்பால் கொடுத்து அதை தேற்றினார். அதைத் தொடர்ந்து, நாங்கள் குழந்தையைத் திருவள்ளூரில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்து விட்டு, காவல்துறையினருக்குத் தகவல் அளித்தோம்.

காவல்துறையினரின் விசாரணையில், குழந்தையின் தாயே குழந்தையைக் கால்வாயில் வீசியுள்ளது தெரியவந்துள்ளது. ஆனால், அவர் பெண் குழந்தை என்பதற்காக அப்படிச் செய்தாரா, இல்லை, வேறு காரணங்களுக்காகச் செய்தாரா என்பது தெரியவில்லை. பெண் குழந்தை என்பதற்காக இதுபோன்ற மனிதாபிமானமற்ற செயல்களில் பெற்றோர்களே ஈடுபடுவது தற்போதும் பல இடங்களில் நடைபெற்று வருவதை நம்மால் பார்க்கமுடிகிறது. சிலர், வீட்டிற்குத் தெரியாமல் கருவை 10 மாதங்களும் சுமந்துவிட்டு பின்னர் குழந்தை பிறந்த உடன் பயத்தில் குழந்தையைக் குப்பைத் தொட்டிகளிலும், கால்வாய்களிலும் வீசி விடுகின்றனர்.

விழிப்புணர்வு வாசகம்
விழிப்புணர்வு வாசகம்
கொஞ்சல் முதல் கிரைப் வாட்டர் வரை... குழந்தை விடாமல் அழும்போது செய்யவேண்டியவை, செய்யக்கூடாதவை என்ன?

குழந்தை இல்லாமல் ஆயிரக்கணக்கான தம்பதிகள் மருத்துவமனைக்கும், கோவிலுக்கும் ஏக்கத்துடன் அலைந்து கொண்டிருக்கும் இதே நாட்டில்தான், இது போன்ற சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. ஒரு கரு தேவையில்லை என்று தெரிந்துவிட்டால் உடனடியாக மருத்துவர்களை அணுகி அந்தக் கருவை ஆரம்ப கட்டத்திலேயே கருக்கலைப்பு செய்துவிட வேண்டும். அதற்கு, பெண்கள் தாராளமாக அரசு மருத்துவமனைகளை அணுகலாம். அதைத் தவிர்த்து விட்டு, முழுமையாக பத்து மாதங்கள் நன்கு வளர்ச்சி அடைந்து பிறக்கும் ஒரு சிசுவின் எதிர்காலத்தையும், அடையாளத்தையும், தன் தாயின் மீதான நம்பிக்கையையும் அழிப்பது என்பது கொலைக்கும் மேலான கொடிய குற்றம் என்பதை நம்மில் யாராலும் மறுக்க முடியாது" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு