Election bannerElection banner
Published:Updated:

மீண்டும் முழு ஊரடங்கு: `வராமல் தவிர்ப்பது நம் கைகளில்தான்!' - எச்சரிக்கும் ஆர்வலர்கள்

Market in New Delhi, India
Market in New Delhi, India ( AP Photo / Manish Swarup )

தினம்தோறும் நாம் கடந்துசெல்லும் ஒவ்வொருவரிடமும் ஊரடங்கு குறித்த அச்சம் பரவியிருப்பதைப் பார்க்க முடிகிறது. தேர்தல் முடிந்ததும் லாக்டெளன் அறிவித்துவிடுவார்கள் என்று இப்போதே செய்திகள் கிளம்பிவிட்டன.

கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கிறது என்ற செய்தி மக்களை நிலைகுலைய வைத்திருக்கிறது. தேர்தல் பரபரப்புகளையெல்லாம் கடந்து எல்லோரும் கொரோனா பற்றி விவாதிக்கத் தொடங்கியிருக்கின்றனர். `எலக்‌ஷன்ல யார் ஜெயிப்பாங்க? என்ற விவாதத்துக்கு இணையாக `மீண்டும் முழு லாக்டெளன் போடுவாங்களா... மாட்டாங்களா?' என்ற விவாதமும் மக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.

தினம்தோறும் நாம் கடந்துசெல்லும் ஒவ்வொருவரிடமும் ஊரடங்கு குறித்த அச்சம் பரவியிருப்பதைப் பார்க்க முடிகிறது. தேர்தல் முடிந்ததும் லாக்டெளன் அறிவித்துவிடுவார்கள் என்று இப்போதே செய்திகள் கிளம்பிவிட்டன. உண்மையில் ஊரடங்கு அறிவிப்பதற்கான சூழல் ஏற்பட்டுள்ளதா... அப்படி ஊரடங்கு அறிவித்தால் அந்த அரசு என்னென்ன விஷயங்களெல்லாம் கவனத்தில்கொள்ள வேண்டும் என்பது குறித்து சிலரிடம் பேசினோம்...

சென்னை - முழு ஊரடங்கு
சென்னை - முழு ஊரடங்கு

``மீண்டும் முழு ஊரடங்கு என்பது பேரழிவு!"

``கொரோனாவால் ஏற்பட்ட இழப்பைவிட ஊரடங்கால் ஏற்பட்ட பொருளாதார இழப்பும் அதனால் மக்கள் பட்ட கஷ்டங்களும்தான் அதிகம். கொரோனாவால் இறந்தவர்களின் புள்ளி விபரங்கள் நம்மிடம் இருக்கின்றன. ஆனால், பசியாலும் பட்டினியாலும் இறந்தவர்களின் புள்ளி விபரங்கள் நம்மிடம் கிடையாது. ஒவ்வொரு வீடாகச் சென்று கேட்டால்தான் ஊரடங்கால் ஏற்பட்ட உண்மையான பாதிப்பு என்ன என்பது நமக்குத் தெரிய வரும். குறிப்பாக, இந்தக் காலகட்டத்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் ஊட்டச்சத்து அளவு குறைந்துள்ளது. முறைசாரா தொழிலாளர்களும், நிரந்தரமற்ற பணியில் உள்ள தொழிலாளர்களும் பெரியளவில் பாதிக்கப்பட்டனர். இப்போதுதான் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகச் சரியாகிவருகிறது. இந்நிலையில், மீண்டும் முழு ஊரடங்கு கொண்டுவந்தால் நிச்சயம் அது பேரழிவாகத்தான் முடியும். மக்களும் அதற்குத் தயாராக இல்லை.

முழு ஊரடங்கு என்ற துன்ப நிலைக்குச் செல்லாமலிருக்க அனைவரும் முகக்கவசம் அணிவதை அரசு உறுதி செய்ய வேண்டும். மகாராஷ்டிராவில் அறிவித்துள்ளதைப் போல இங்கேயும் இரவு நேர ஊரடங்கை அறிவிக்கலாம். அரசியல் கூட்டங்கள் ஆன்மிகக் கூட்டங்கள், விழாக்களுக்குக் கட்டுப்பாடுகள் கொண்டு வர வேண்டும். ஊர்வலங்கள், திரையரங்குகள், பேருந்துகள், மால்களில் 50 சதவிகிதம் மக்களை மட்டும் அனுமதிக்கலாம்.

கட்டுப்பாடுகள் விதிப்பது மட்டுமல்ல; அவற்றை மக்கள் கடைப்பிடிக்க ஏதுவான சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதும் அரசின் கடமை. கோடைக்காலம் வந்துவிட்டது. பல இடங்களில் குடி தண்ணீருக்கே தட்டுப்பாடு ஏற்படும். அங்கெல்லாம் அடிக்கடி கை கழுவ இயலாத சூழல் ஏற்படும். எனவே, தண்ணீர் பிரச்னை இல்லாத சூழலை உருவாக்க வேண்டும். ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக மாஸ்க், சோப்பு ஆகியவறைக் கொடுக்கலாம்.

ஜனகராஜ்
ஜனகராஜ்

இந்தப் பிரச்னை முடிவுக்கு வரும் வரை பள்ளி, கல்லூரிகளைத் திறக்கக் கூடாது. மாணவர்களின் கல்விக்கு மாற்று வழிகளைச் சிந்திக்க வேண்டும். ஏழை மாணவ-மாணவிகளுக்கு இலவசமாக செல்போன் கொடுத்து ஆன்லைன் கல்வியை ஊக்கப்படுத்தலாம். மாணவர்களுக்குத் தேர்வே வைக்காமல் தேர்ச்சியடைய செய்வதற்குப் பதிலாகப் புத்தகத்தைப் பார்த்துத் தேர்வு எழுதும் முறையை அறிமுகப்படுத்தலாம். பார்த்து எழுதும்போதாவது அந்தப் பாடங்களை மாணவர்கள் தெரிந்துகொள்வார்கள். வெளிநாடுகளிலெல்லாம் இப்படியான முறையைத்தான் கடைப்பிடிக்கின்றனர். இதையெல்லாம் தாண்டி மீண்டும் ஊரடங்கை அமல்படுத்தியே ஆக வேண்டுமெனில், ஒவ்வொரு குடும்பத்துக்கும் மாதம் குறைந்தபட்சம் 5,000 ரூபாய் கொடுத்துவிட்டுத்தான் அரசு அதைப்பற்றிச் சிந்திக்க வேண்டும்" என்கிறார் சென்னை வளர்ச்சி நிறுவனத்தின் முன்னாள் பேராசிரியர் ஜனகராஜ்.

``பழைய கட்டுப்பாடுகள் தேவை!"

மருத்துவரும் அரசியல் விமர்சகருமான சுமந்த் சி ராமன், ``இனிமேல் முழு ஊரடங்கு செய்யவே முடியாது. அதற்கான சாத்தியமே இல்லை. ஊரடங்கின் அடிப்படையான நோக்கம் கூட்டங்களைத் தவிர்த்து கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதுதான். எனவே, மீண்டும் முழு ஊரடங்கு என்ற நிலைக்குச் செல்லாமலிருக்க மக்கள் கூட்டம் கூடும் அனைத்து நிகழ்வுகளையும் மீண்டும் கட்டுப்பாடுகளுக்குள் கொண்டு வர வேண்டும்.

சுமந்த் சி ராமன்
சுமந்த் சி ராமன்

எந்தெந்த அலுவலகங்களிலெல்லாம் வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றனவோ அங்கெல்லாம் வீட்டிலிருந்து பணி செய்யும் முறையை நீட்டிக்க வேண்டும். உணவகங்கள், திரையரங்குகள், பேருந்துகள் உள்ளிட்ட இடங்களில் 50 சதவிகிதம் மட்டும்தான் அனுமதி என்ற கட்டுப்பாட்டை மீண்டும் அமலுக்குக் கொண்டு வர வேண்டும். இப்போது 70 சதவிகிதம் பேர் முகக் கவசம் அணிவதில்லை. மாஸ்க் அணியாதவர்களுக்குக் கட்டாயம் அபராதம் விதிக்கப்படும் என்பதை அறிவுறுத்தி அனைவரும் முகக் கவசம் அணிவதை உறுதிப்படுத்த வேண்டும்.

ஆரம்பத்தில் செய்த அதே தீவிரத்துடன் தொடர்ந்து கொரோனா பரிசோதனையை அதிகப்படுத்துவது, வெளிநாட்டிலிருந்து வருபவர்களைத் தனிமைப்படுத்துவது, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களைக் கண்காணிப்பது அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டுபிடித்து பரிசோதனைக்கு உட்படுத்துவது. இப்போது பரவும் கொரோனா என்ன வகையான கொரோனா என்பதைக் கண்டறிந்து அதற்கேற்றாற்போல் செயல்திட்டங்களை வகுப்பது என முழுவீச்சில் களமிறங்க வேண்டும். அதேபோல கொரோனா தடுப்பூசி போடுவதையும் அதிகரிக்க வேண்டும்" என்றார்

``நம் கையில்தான் இருக்கிறது!"

அடுத்ததாகப் பேசிய பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணன், ``முழு ஊரடங்கில் மக்கள் சந்தித்த மிக முக்கியமான பிரச்னை இ-பாஸ்தான். ஆரம்பத்தில் காய்கறி, மளிகைப் பொருள்களுக்கு அல்லாடிய மக்கள் ஒரு சில வாரங்களில் அந்தப் பிரச்னைகளை சமாளிக்கத் தயாராகிவிட்டனர். ஆனால், ஊரடங்கு முடியும் வரைக்கும் மக்கள் பட்ட பெரும் கஷ்டம் இ-பாஸ்தான். நியாயமான காரணத்துக்காக ஊருக்குச் செல்வதற்குக்கூட இ-பாஸ் கிடைக்காத அளவுக்கு அறிவிலித்தனமாக இருந்தது இந்த அரசு இயந்திரத்தின் செயல்பாடு. உண்மையான காரணத்துடன் விண்ணப்பித்தவர்களுக்கு இ-பாஸை நிராகரித்துவிட்டு, பணம் கொடுத்தவர்களுக்கு பாஸ் கொடுத்தார்கள். இப்படி இ-பாஸ் தொடர்பாகப் பல்வேறு குளறுபடிகள் நடந்தன. மீண்டும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டால் இ-பாஸ் நடைமுறையும் திரும்ப வரும். அந்தத் துன்பத்தை அனுபவிக்கக் கூடாது என்றால் எல்லோரும் முகக் கவசம் அணிய வேண்டும்.

எஸ்.பி.லட்சுமணன்
எஸ்.பி.லட்சுமணன்

நான்கு பேர் இருக்குமிடத்தில் ஐந்தாவது ஆளாகப் போய் நிற்கக் கூடாது. பிரசாரத்துக்குச் செல்வதில் தொடங்கி அனைத்து இடங்களிலும் கொரோனா முன்னெச்சரிக்கை நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். மக்கள் சுயக் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். தடுப்பூசி வந்து சுமார் இரண்டு மாதங்களுக்கு மேலாகிவிட்டது. ஆனால், அதைப் பற்றிய விழிப்புணர்வு முழுமையாக இல்லை. தற்போது காபந்து அரசு இருப்பதால் அரசு இயந்திரம் இப்போது பாதிதான் இயங்குகிறது. அரசு ஊழியர்களில் பெரும்பாலோனோர் தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருக்கின்றனர்.

`இன்னோர் ஊரடங்கிற்கு இந்த நாடு தாங்காது!' - இதையெல்லாம் ஆட்சியாளர்கள் கவனத்தில் கொள்வார்களா?

ஆகையால் விழிப்புணர்வு பணியை முழுவீச்சில் செய்யாமலிருக்கலாம். வாக்குப் பதிவு முடிந்து வாக்கு எண்ணிக்கைக்கு இடைப்பட்ட நாள்களிலாவது தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை அதிகப்படுத்த வேண்டும். யார் யாரெல்லாம் போடக் கூடாது என்பதை மட்டும் அழுத்தமாகச் சொல்லிவிட்டு மற்ற அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தலாம். முழு ஊரடங்கு எனும் துயரச் சூழலுக்கு நாம் தள்ளப்படாமலிருப்பது நம் ஒவ்வொருவருடைய கையிலும்தான் இருக்கிறது" என்கிறார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு