Published:Updated:

`எங்களால் மட்டும் முடியாது; மக்களும் இணைய வேண்டும்..!' - பேரிடர் மேலாண்மை குறித்து ராதாகிருஷ்ணன்

திருச்சியில் மட்டும் சுமார் 700 ஆழ்துளைக் கிணறுகள் மூடப்பட்டுள்ளன. ஆழ்துளைக் கிணறுகள் பற்றிய தகவல்களை அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவரிடம் தெரிவிக்கலாம்.

விழிப்புணர்வு
விழிப்புணர்வு

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் சுஜித் மரணத்துக்குப் பிறகு, தமிழகம் முழுக்க பேரிடர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளைத் தமிழக வருவாய்த்துறை தீவிரமாக முன்னெடுக்கததொடங்கியுள்ளது. நேற்று மதுரையில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சி, இன்று திருச்சியில் நடைபெற்றது. திருச்சி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில், நீர்நிலைகளில் ஏற்படக்கூடிய விபத்து மற்றும் பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை குறித்த இந்த விழிப்புணர்வு முகாமை, திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு, ஐ.ஜி பாஸ்கரன், மத்திய மண்டல தீயணைப்பு மீட்புத்துறை துணை இயக்குநர் ப்ரியா ரவிச்சந்திரன், தமிழக வருவாய்த்துறை முதன்மைச் செயலர் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் தொடங்கிவைத்தனர்.

`எங்களால் மட்டும் முடியாது; மக்களும் இணைய வேண்டும்..!' - பேரிடர் மேலாண்மை குறித்து ராதாகிருஷ்ணன்

முன்னதாக ராதாகிருஷ்ணன் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ``தமிழகத்தில் தண்ணீர் இல்லாத 9,940 ஆழ்துளைக் கிணறுகளை மழைநீர் சேகரிப்பு கிணறுகளாக மாற்றியுள்ளோம். இதேபோல விவசாய நிலங்களில் இருந்த சுமார் 2,000 ஆழ்துளைக் கிணறுகள் மூடப்பட்டுள்ளது. இதில் திருச்சியில் மட்டும் சுமார் 700 ஆழ்துளைக் கிணறுகள் மூடப்பட்டுள்ளன. ஆழ்துளைக் கிணறுகள் பற்றிய தகவல்களை அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவரிடம் தெரிவிக்கலாம். பயன்பாடற்ற ஆழ்துளைக் கிணறுகளை பொதுமக்களும் மூடுவதற்கு முன் வர வேண்டும். மாவட்ட அரசு நிர்வாகமும் தொடர்ந்து அதைச் செய்து வருகிறது. புயல் காலங்களில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று மீனவர்களுக்கு முன்னதாகவே அறிவுறுத்துகிறோம். அதை அறியாமல் சிக்கிக் கொள்பவர்களை மீட்பதற்கான பணியில் தொடர்ந்து அரசு நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.

விழிப்புணர்வு
விழிப்புணர்வு

திறந்து கிடக்கும் சாலையோரக் கிணறுகள் மற்றும் ஆழ்துளைக் கிணறுகள் குறித்து தமிழகம் முழுவதும் 1077 என்கிற எண்ணிலும் மாவட்ட வாரியாக 1070 என்கிற எண்ணுக்கும் தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம்” என்றார்.

இந்த நிகழ்ச்சியில், பேரிடர் மீட்புப் பணிக்கான கருவிகள், பேரிடர் காலங்களில் மீட்புப் பணி குறித்த ஒத்திகை நிகழ்ச்சி உள்ளிட்டவை நடைபெற்றது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் 50-க்கும் மேற்பட்ட வீரர்கள் தங்களது சாகச மீட்புப் பணிகளை நிகழ்த்திக் காட்டினர். ஆற்றில் தவறி விழுந்தவர்களைக் காப்பாற்றுவது, பேரிடர் சமயங்களில் எப்படிச் செயல்படுவது என்பது உள்ளிட்டவை குறித்து செயல்விளக்கம் காட்டப்பட்டது.

விழிப்புணர்வு
விழிப்புணர்வு

வீட்டுக்குள் பாம்பு வந்தால், அதை எப்படி லாகவமாகப் பிடிப்பது உள்ளிட்ட அனைத்தும் லைவ்வாகச் செய்துகாட்டவே, மக்கள் மிகக் கவனமாகக் கவனித்தனர்.

ராதாகிருஷ்ணன்
ராதாகிருஷ்ணன்

தொடர்ந்து மேடையில் பேசிய ராதாகிருஷ்ணன், ``தமிழக முதல்வரின் ஆணைப்படி பொதுமக்களை மையமாக வைத்துக்கொண்டு பேரிடர் மற்றும் விபத்து குறைப்பதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஒரு மாபெரும் இயக்கமாகத் தமிழ்நாடு முழுவதும் தொடங்கப்பட்டுள்ளது. ஆழ்துளைக் கிணற்றில் சிறுவன் சுஜித் விழுந்து இறந்துவிட்டான். ஆனால், இனி ஒரு சுஜித் இறந்துவிடக் கூடாது. அதற்குரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும். ஆழ்துளைக் கிணறு அமைப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். கிணறு அமைக்கும் நிறுவனம் முகவரியுடன்கூடிய அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். கிணற்றை சுற்றி வேலி அமைக்க வேண்டும். கிணறு தோண்டுவது கைவிடப்பட்டால், அதை மூடுவதற்கு வழிவகைச் செய்ய வேண்டும்” என்பது உள்ளிட்ட விதிமுறைகள் குறித்துப் பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர், ``சமுதாயத்தை மையமாகக் கொண்டு சமுதாயத்தின் ஒத்துழைப்புடன் பேரிடர் மற்றும் ஆபத்துக் காலங்களில் அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தப்படும். இது ஒரு இயக்கமாக மாற வேண்டும். ஆபத்தை அறிந்துகொண்டு அதிலிருந்து நம்மைக் காத்துக்கொள்வது மற்றும் அவற்றைத் தவிர்ப்பது ஒரு வழக்கமாகப் பின்பற்ற வேண்டும். இவ்வாறு நாம் எடுக்கும் முடிவில்தான் பாதுகாப்பு உள்ளது.

`எங்களால் மட்டும் முடியாது; மக்களும் இணைய வேண்டும்..!' - பேரிடர் மேலாண்மை குறித்து ராதாகிருஷ்ணன்

நாம் நம்மைச் சுற்றியுள்ள சுற்றுவட்டாரம், வீடு, பயணிக்கும் வாகனம், பள்ளி, நிறுவனம் மற்றும் பொதுமக்கள் கூடும் இடம் உள்ளிட்டவை பாதுகாப்பாக உள்ளதா என நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். விபத்து ஏற்படுமென்றால் அதை முன்னெச்சரிக்கையாக அறிந்துகொள்ள வேண்டும். பிறகு அதைத் தவிர்ப்பதற்கு எனது சமுதாயம், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் அரசு எந்தவிதமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் தெரிந்துகொள்ள வேண்டும்.

`எங்களால் மட்டும் முடியாது; மக்களும் இணைய வேண்டும்..!' - பேரிடர் மேலாண்மை குறித்து ராதாகிருஷ்ணன்

நம்மைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஆழ்துளைக் கிணறு, சுற்றுச்சுவரற்ற திறந்த கிணறுகள், குளம், குட்டை மற்றும் நீர் ஆதாரங்கள் ஆபத்தான நிலையில் இருப்பின் உடனடியாக அரசுக்குத் தெரிவித்து அவற்றை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். வெள்ளம் புயல் போன்ற பேரிடர் காலங்களில் தாழ்வான பகுதிகளில் நாம் இருக்கும்போது பாதுகாப்புக்கு என்ன செய்ய வேண்டும். கட்டுமானப்பணி நடக்கும் இடம், பாழடைந்த கட்டடம், ஈரமான சுவர் உள்ள வீடுகளில் ஒதுங்கக் கூடாது. மின் கம்பி, மின்சாதனங்கள் ஆபத்தான நிலையில் உள்ளதா எனக் கவனமாகப் பார்க்க வேண்டும்” என்றார்.

மேடையில் பேசிய திருச்சி துணை காவல் ஆணையர் மயில்வாகனம், “ஒரு கை ஓசை எழுப்பினால், சத்தம் வராது. அதேபோல்தான், பேரிடர் சமயங்களில் அரசு மட்டும் செயல்பட்டால் எதுவும் சாத்தியமில்லை. மக்கள், அரசு, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூன்றும் இணைந்து பணியாற்றினால் வெற்றி நிச்சயம். வெள்ளம், புயல் போன்ற பேரிடர் காலங்களில் அரசு அறிவிக்கையை முழுமையாகப் பின்பற்ற வேண்டும். கடலுக்குப் போக வேண்டாம் என்றால் அதைத் தவிர்ப்பது நல்லது. நாங்களும் மனிதர்கள்தானே, எங்கள் குடும்பங்களும் அந்த சிக்கலை எதிர்கொண்டுதான் இருக்கிறார்கள். அதையும் தாண்டிதான் நாம் உழைக்க வேண்டியுள்ளது.

திருச்சி துணை காவல் ஆணையர் மயில்வாகனம்
திருச்சி துணை காவல் ஆணையர் மயில்வாகனம்

அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளில் புயல், வெள்ளம் வந்தால் பூஜ்ஜிய அளவு பேரிழப்பு என்கிற நிலை உள்ளது. ஏனெனில், அங்கு பேரிடர் காலங்களில் செயல்பட வேண்டியது குறித்து விழிப்புணர்வு உள்ளது. ஆனால், நம் நாட்டில் அப்படியில்லை. சுஜித் மரணம், கஜா புயல் போன்ற சமயங்களில் ஒரு சிலர் அரசின் நடவடிக்கையைக் குறை கூறிக்கொண்டேதான் உள்ளனர். அப்படி குறைகூறிக்கொண்டு இருப்பதைவிட, அரசு நடவடிக்கைகளுக்கு மேலும் வலுசேர்க்கும் விதமாக இருக்க வேண்டும். பேரிடர் காலங்களில், பேரிடர் வந்த பிறகு எப்படிச் செயல்பட வேண்டும் உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்” என்று முடித்தார்.

இந்த விழிப்புணர்வு முகாம் சென்னை, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் மக்களிடம் கொண்டு செல்லப்படுகிறது. பேரிடர் காலங்களான வெள்ளம், இடி மின்னல், புயல் உள்ளிட்ட சூழல்களில் எப்படிச் செயல்பட வேண்டும் என விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் வழங்கப்பட்ட துண்டறிக்கைகள் உங்கள் பார்வைக்கு…