Published:Updated:

`இரவில் அவர்கள் வலம் வந்தால்.. அச்சத்தில் பொதுமக்கள்!' - திருச்சியில் என்ன நடக்கிறது?

பொதுமக்கள்
பொதுமக்கள்

``அதிகாரிகள் எவ்வளவு சிறப்பாக வேலை செய்வார்கள் என்று எங்களுக்குத் தெரியாதா? அதனால்தான் இவர்களை இங்கு தங்க வைக்கக்கூடாது என்று போராட்டம் நடத்தினோம்” - பொதுமக்கள்

`சார்ஜாவிலிருந்து வந்தவர்களை இங்கு தங்க வைக்கக்கூடாது. அவர்களால் எங்கள் குடும்பத்தினருக்குக் கொரோனா வைரஸ் பாதிக்கும்’ என்று பொதுமக்கள் பிரச்னையில் ஈடுபட்ட சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொதுமக்கள்
பொதுமக்கள்

கொரோனா வைரஸ் என்ற பெயர் ஒட்டுமொத்த உலகத்தையும் நடுநடுங்க வைத்துக்கொண்டிருக்கிறது. அந்த வகையில் வெளிநாடுகளில் வேலைபார்ப்பவர்கள் பலரும் சொந்த ஊருக்குத் திரும்பிக்கொண்டிருக்கிறார்கள். இந்ந நிலையில் சார்ஜாவிலிருந்து 145 பேர் விமானம் மூலமாக நேற்று மாலை திருச்சி வந்து சேர்ந்தனர். கொரோனா பரவலைத் தடுப்பதற்காக அவர்கள் 7 நாள்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்ற அரசின் விதிமுறைப்படி அந்த 145 பேரையும் 4 குழுக்களாகப் பிரித்து திருச்சியில் உள்ள பல்வேறு தனியார் விடுதிகளில் தங்க வைக்கப் பேருந்துகளில் அனுப்பிவைக்கப்பட்டனர்.

கொரோனா: 3 நாள்களில் 120 பேர்; புள்ளிவிவரங்களில் வேறுபாடுகள்! -அச்சத்தில் கோவை

கொரோனா பரிசோதனை முடிவுகளுக்குப் பிறகு அனைவரும் அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்ற சூழலில், திருச்சி சிந்தாமணி பகுதியில் உள்ள இப்ராஸ் மற்றும் இம்பீரியல் என்ற இரு விடுதிகளில் தலா 30 பேர் எனத் தங்கவைக்கப்பட இருந்தனர். இவ்விவகாரம் இரவு நேரத்தில் அப்பகுதியில் காட்டுத்தீ போல பரவியது. காந்தி நகர்ப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்தனர். அவர்கள், `வெளிநாட்டிலிருந்து வந்துள்ள பயணிகளைத் தனியார் ஹோட்டலில் தங்க வைப்பதற்கு அனுமதிக்கக் கூடாது.

அவர்களால் இப்பகுதி மக்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது’ எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் திருச்சி கிழக்கு வட்டாட்சியர் மோகன், அங்கு வந்து சுமார் 3 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனைத் தொடர்ந்து அந்தப் பயணிகள் 60 பேரும் ஸ்ரீரங்கத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்க வைப்பதற்காக அனுப்பிவைக்கப்பட்டனர்.

பொதுமக்கள்
பொதுமக்கள்

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட சிலரிடம் பேசினோம். ``வெளிநாடு மற்றும் வெளிமாவட்டங்களிலிருந்து வருபவர்களால்தான் கொரோனா வைரஸ் அதிக அளவில் பரவிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் 503 பேருக்கு மேல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரையிலும் எட்டுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நாங்கள் வசிக்கும் பகுதிகளில் அருகருகே வீடுகள் என நெருக்கமாக உள்ள பகுதி இது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை நிறைய பேர் இங்கு வசிக்கிறார்கள்.

இந்நிலையில் சார்ஜாவிலிருந்து வந்தவர்களை இங்கு தங்க வைத்தால் இவர்கள் மூலமாக எங்கள் பகுதியில் வைரஸ் பரவல் வந்துவிடாதா? வெளிநாடுகளிலிருந்து வந்து தனிமைப்படுத்தப்படுபவர்கள் இரவு நேரத்தில் சுதந்திரமாகச் சுற்றிக்கொண்டு திரிகிறார்கள் என்று கேள்விப்படுகிறோம். அதுபோல் இவர்கள் வெளியில் வந்துவிட்டால் நாங்கள் என்ன செய்வது. அதிகாரிகள் எவ்வளவு சிறப்பாக வேலை செய்வார்கள் என்று எங்களுக்குத் தெரியாதா? அதனால்தான் இவர்களை இங்கு தங்க வைக்கக் கூடாது என்று போராட்டம் நடத்தினோம்" என்று முடித்துக்கொண்டனர்.

 திருவாரூர்: டாஸ்மாக் டு வளைகாப்பு! -கொரோனா தடுப்பில் பெண் நிர்வாகிகள் அதிரடி
அடுத்த கட்டுரைக்கு