Published:Updated:

`நிதி ஒதுக்கி 2 ஆண்டுகள் ஆகிவிட்டன!’- கரூரில் அழிவின் விளிம்பில் 1,000 வருடப் பழைமையான சிவன் கோயில்

சிதிலமடைந்த ஆறாஅமுதீஸ்வரர் கோயில்
சிதிலமடைந்த ஆறாஅமுதீஸ்வரர் கோயில்

இங்குள்ள பழைமையான சிற்பங்களைப் பாதுகாக்கவும், கோயிலைப் புதுப்பிக்கவும், நகரப் புனரமைப்பு நிதியின் கீழ், ரூ.22 லட்சம் ரூபாய் நிதிஒதுக்கீடு செய்யப்பட்டது.

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள மேட்டுமருதூரில் உள்ள ஆறாஅமுதீஸ்வரர் கோயில் என்றழைக்கப்படும் சிவன் கோயில், 1000 வருடங்கள் பழைமையானது. அந்தக் கோயில் முதலாம் ராஜராஜன் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட கோயிலாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிதிலமடைந்த ஆறாஅமுதீஸ்வரர் கோயில்
சிதிலமடைந்த ஆறாஅமுதீஸ்வரர் கோயில்
`ஆயிரம் ஆண்டு பழமை.. நான்கு பக்கமும் நீர்'- கடைசியாய் தேவாரப்பாடல் பெற்ற திருவிடைவாய் கோயில்!

குளித்தலை அருகே உள்ள மருதூர் காவிரி தென்கரையில் பழைமையான அந்தக் கோயில் அமைந்துள்ளது. இதைத்தான் புனரமைக்காமல் இந்து சமய அறநிலையத்துறை கைவிட்டுவிட்டதால், 90 சதவிகிதம் சிதிலமடைந்த நிலையில் கோயில் இருப்பதாக அந்தப் பகுதி மக்கள் புகார் புராணம் பாடுகிறார்கள்.

இதுபற்றி, நம்மிடம் பேசிய அந்தப் பகுதியைச் சேர்ந்த இளைஞரான கடம்பை பிரபு, ``சோழ மன்னன் முதலாம் ராஜராஜனால் (கி.பி. 985-1014) இந்தக் கோயில் கட்டப்பட்டது. தொல்லியல் துறையின் கல்வெட்டு முனைப்பு திட்டத்தில், கரூர் சேரர் அகழ்வைப்பகக் காப்பாட்சியர் நாக.கணேசன் தலைமையில் சமீபத்தில் இந்தக் கோயிலில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வுக்குப் பின், காப்பாட்சியர் நாக.கணேசன் வெளியிட்ட அறிக்கையில், `ஆயிரம் ஆண்டு கடந்த மேட்டுமருதூர் சிவன் கோயிலில் கருவறை, அர்த்தமண்டபம், கருங்களால் ஆன ஜகதி, பட்டி, குமுதவரி, கால் பிரஸ்தரம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. விமானம் மட்டும் செங்கற்களால் அமைந்துள்ளது. கருவறையின் மூன்று பக்கமும் 22 தூண்களும், பிரஸ்தரத்தில் பூதகணங்கள் வரிசையாக அணிவகுப்பது போலும் அமைக்கப்பட்டுள்ளன.

 கடம்பை பிரபு
கடம்பை பிரபு

ஒவ்வொரு தூணின் மேலும் மனிதமுகம் குடைந்து, அழகுபடுத்தப்பட்டுள்ளது. விமானத்தின் கட்டுமானம், சுதை உருவம் சிதைந்துவிட்டதால், அவற்றின் விவரம் முழுமையாகத் தெரிந்துகொள்ளமுடியாத நிலையில் உள்ளது. கருவறை வெளிப்பக்கத்தில் கல்வெட்டுக் குறிப்புகள் காணப்படுகின்றன. கருவறைக்குள் பெரிய அளவில் ஆவுடையாரும், லிங்கமும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

10 தூண் கொண்ட அர்த்தமண்டபத்திலும், பல்வேறு சிற்ப வேலைப்பாடு உள்ளன. கோயில் முன் நந்தி, சேஷ்டாத்தேவி, விநாயகர் சிற்பம் காணப்படுகின்றது. நுழைவாயிலில் தென்புற நிலைக்காலில் முதலாம் ராஜராஜனின் கல்வெட்டு 21 வரிகளில் உள்ளது. அரசனின் 11வது ஆட்சிக்காலம் மூலம் இவ்வூர், கோயில் இறைவன், மன்னனைக் குறித்து அறிந்து கொள்ள முடிகிறது. கல்வெட்டில், `சாலைக்கல மறுத்த கோவி ராஜராஜசேகரி' என முதலாம் ராஜராஜனைக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம், கி.பி.996ல் கோயில் கட்டப்பட்டுள்ளதை அறிந்துகொள்ள முடிகிறது.


 கல்வெட்டு
கல்வெட்டு

கேரளாவிலுள்ள விழிஞம் கோட்டை, காந்தளூர்சாலை ஆகியவற்றை வெற்றிகொண்டதை நினைவு கூறும் வகையில், 'சாலைக்கல மறுத்த கோவி ராஜராஜசேகரி' என்ற அடைமொழியுடன் மன்னன் குறிப்பிடப்பட்டார் என்பது தெரியவருகிறது. மேட்டுமருதூர், 'மாதான மருதூர்' என்றும், இங்குள் ஈஸ்வரன் 'ஆராவமிதீஸ்வரர்' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. சோழ பேரரசில் 'மீய் கோட்டு' நாட்டில் அமைந்த சிற்றூராக மேட்டுமருதூர் இருந்துள்ளது.

முதலாம் ராஜராஜன் காலத்தில் கட்டப்பட்டு சிறப்புடன் விளங்கிய சிவன் கோயில் தற்போது முற்றிலும் சிதைந்த நிலையில் காணப்படுகிறது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆயிரம் வருடங்கள் கடந்த பழைமையான இந்த சிவன் கோயிலைத் தமிழக அரசும், கரூர் மாவட்ட நிர்வாகமும் கண்டுகொள்ளாமல் பாராமுகத்தோடு இருப்பது வேதனையளிக்கிறது. ஆறாஅமூதீஸ்வரர் சிவன்கோயில் ஆயிரம் ஆண்டுக்கு முற்பட்ட பழைமையான கோயிலாக உள்ளதை அறிந்த, கரூர் மாவட்ட முன்னாள் கலெக்டர் வெங்கடேஷ், நேரில் பார்வையிட்டார்.

ஆறாஅமுதீஸ்வரர் சிவன்
ஆறாஅமுதீஸ்வரர் சிவன்

இங்குள்ள பழைமையான சிற்பங்களைப் பாதுகாக்கவும், கோயிலைப் புதுப்பிக்கவும், நகரப் புனரமைப்பு நிதியின் கீழ், ரூ.22 லட்சம் ரூபாய் நிதிஒதுக்கீடு செய்தார். நிதி ஒதுக்கீடு செய்து இரண்டு ஆண்டுக்கு மேலாகியும், இதுவரை பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது வேதனையைத் தருகிறது. 100 சதவிகிதம் இந்தக் கோயில் சிதிலமாவதற்குள் புனரமைப்பு வேலையைத் தொடங்க வேண்டும். இல்லையேல், மக்களைத் திரட்டி போராட்டம் நடத்துவோம்" என்றார், ஆக்ரோஷமாக!.

அடுத்த கட்டுரைக்கு